புதாஷ்டமி அன்றைய தினம் விரதமிருந்து சிவன் கோவில் சென்று பைரவர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.
சுக்ல பட்சம் அல்லது கிருஷ்ண பட்சம் அஷ்டமி "புதன்கிழமை" அன்று வந்தால் அன்றைய தினம் அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.
புதாஷ்டமி விரதம் பற்றி "சிவ மகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி விரதம் பற்றிய செய்திகளும் சிவ ஆகம புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
அஷ்டமி திதி பற்றி :-
அஷமி என்பது - எட்டாவது திதி. அதிலும், தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலனைத் தரும்.
அஷ்டமியில் விரதம் இருப்பவர்கள் உடல் ஊனமில்லாமலும், செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் "சிவபுராணம்" கூறுகிறது.
புதாஷ்டமி விரதம் பிறந்த கதை :-
கவுசிகன் என்பவன் மிக விலையுயர்ந்த எருது ஒன்றினை வளர்த்து வந்தான். அந்த எருது ஒரு சமயம் காணாமல் போனது. காணாமல் போன எருதினைத் தேடி புறப்பட்டான் கவுசிகன். கவுசிகன் தனியாகச் செல்லாமல் தனது சகோதரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
இருவரும் சேர்ந்து பல நாட்கள் எருதினைத் தேடினார்கள். இருவரும் அன்ன ஆகாரம் ஏதும் இன்றி இருந்தார்கள். பசி இருவரையும் வாட்டியது.
இறுதியில் ஒரு குளத்தில் தேவலோகப் பெண்கள் ஜலக்ரீடை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்களிடம் சென்று தங்கள் இருவருக்கும் பசிப்பதாகவும், பசிக்கு உணவு வேண்டும் என்றும் கேட்டார்கள்.
அப்போது தேவலோகப் பெண்கள் விரதம் ஒன்றைப் பற்றிச் சொல்லி அந்த விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும், காணாமல் போன உங்களுடைய எருதும் கிடைக்கும் என்று கூறினார்கள்.
இவ்வாறு தேவலோகப் பெண்களால் கூறப்பட்ட விரதமே "புதாஷ்டமி விரதம்". அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியானது - புதன்கிழமை அன்று வந்தால் அந்த அஷ்டமி "புதாஷ்டமி" என்றழைக்கப்படும்.
அதன்படி இன்று வளர்பிறை அஷ்டமி மற்றும் புதன்கிழமை - இன்றைய தினம் புதாஷ்டமி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
விரதப் பலன்கள் :-
தேவலோகப் பெண்கள் இவ்வாறு கூறிய விரதத்தினைக் கேட்ட கவுசிகன், புதாஷ்டமி விரதம் இருந்தான். காணாமல் போன எருதான காளை கிடைத்தது. அவன் சகோதரிக்கும் நல்ல கணவன் கிடைத்தான். கவுசிகன் புதாஷ்டமி விரதம் இருந்ததால் அரசனானான்.
கவுசிகனின் சகோதரி பெயர் - விஜயை. அவளுக்குக் கிடைத்த கணவன் யமன்.
கவுசிகனுடைய பெற்றோர்கள் நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். கவுசிகன் புதாஷ்டமி விரதம் கடைப்பிடித்த பலனால் அவனுடைய பெற்றோர்களும் நரகவேதனையில் இருந்து விடுபட்டார்கள்.
இன்றைய தினம் செய்யக்கூடிய ஜபம் மற்றும் பூஜைகள் 10 மடங்கு நன்மை தரும்.
புதாஷ்டமி விரதம் இருந்தால் இழந்த பொருட்களைத் திரும்பப் பெறலாம். நன்மக்கட்பேறு உண்டாகும். மரணத்திற்குப் பின்பு பேரின்ப வாழ்வு நிச்சயம்.
இன்றைய தினம் அதிகாலை சிவன் திருக்கோவில் சென்று சிவபெருமானையும், அம்பிகையையும், பைரவரையும் வழிபட்டு விரதத்தைத் துவக்கலாம். அதேபோல மாலையும் சிவன் திருக்கோவில் சென்று வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்வது சிறந்தது.
புதாஷ்டமி வழிபாடுகள் :-
இன்றைய தினத்தில் எட்டு விதமான அக்னி வழிபாடுகளுடன் அஷ்ட லட்சுமிகளையும் வழிபட வேண்டும்.
எட்டு வழிபாடுகள் :-
1. விளக்கேற்றுதல்
2. ஹோமம்
3. அக்னிப் பூர்வமாகத் தயாராகும் அன்னத்தைத் தானமளித்தல்
4. ஊதுவத்தி தீபம்
5. கற்பூரத் தீபம்
6. சாம்பிராணித் தீபம்
7. பல வகையான தீபங்கள் (உலோகம், மண், எலுமிச்சை தீபம் - இவைகளை கோவிலில் இறைவனின் சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்). வீட்டில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு ஏற்றலாம்.
8. ஓடும் நதிகளில் மிதக்கும் இலை மடக்கு ஜல தீப பூஜை (நதிகளில் இலைகளின் மேல் அகல்விளக்கு தீபம் ஏற்றி வழிபடுதல்).
இவ்வாறு எட்டு வழிபாடுகள் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். அல்லது வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்து, கோவில் சென்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
புதாஷ்டமி நாட்களில் பூமிக்கு வந்து அஷ்ட லக்ஷ்மிகளையும் வழிபடுபவர் "வித்யாரண்ய மகரிஷி". இன்றைய தினத்தில் மேலே கூறப்பட்டுள்ள வகையில் அன்னையை வழிபடுபவர்களுக்கு இந்த வித்யாரண்ய மஹரிஷியின் அருள் தாமாகவே நிறைந்து வந்து கிட்டும்.
சாகம்பரி தேவி மூலிகை சக்திகள் நிறைந்த அசோக மரத்தை தோற்றுவித்த திருநாள் "புதாஷ்டமி" தினமாகும்.
புதனும் - அஷ்டமியும் கூடும் நாட்களில் ஆலயங்களில் உள்ள அசோக மர தரிசனம் மற்றும் மரத்தை வலம் வருவது விசேஷம்.
அசோக மரத்திற்கு ஆறு வகையான சோக மூல காரணங்களை உணர்வித்து, பிராயச்சித்த - பரிகாரங்களைப் பெற்றுத்தரும் தெய்வீக சக்திகள் உண்டு.
புதாஷ்டமியான இன்று எட்டு முறை ஆலய தரிசனம், எட்டுப் பிரதட்சிணங்கள், எட்டு ஆலய தரிசனம், ஸ்ரீகிருஷ்ணரின் எட்டு விதமான தரிசனங்களை பெற முயற்சிக்கலாம்.
108 லிங்கங்களைக் கொண்ட ஒரே கல் வடிவ "நூற்றியெட்டு லிங்க தரிசனமான - கும்பகோணம் அருகேயுள்ள நூற்றியெட்டுச் சிவாலய வழிபாடு சிறப்பானதாகும்".
தன்னையும் அறியாமல் செய்த பிழை, கோபம், சூடான பேச்சு, கவனக்குறைவு, ஞாபகமறதி போன்றவற்றால் ஏற்படும் கஷ்ட - நஷ்டம், உறவு முறிவு, பணியில் பிரச்சினை போன்றவற்றிற்குத் தக்க பிராயச்சித்தம் "புதாஷ்டமி பூஜை" மிகப்பெரிய பலனாகும்.
ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அபிஷேகம், ஆராதனை, சந்தனக் காப்பு, பாத பூஜை, விஸ்வரூப பூஜை, தூபக் காப்பு மற்றும் காலை - மாலை இரண்டு வேளைகளிலும் கோ பூஜை போன்ற எட்டு பூஜைகளை நிகழ்த்தி வழிபாடு செய்யலாம்.
அமர்ந்த கோலத்தில் அருளும் காஞ்சிபுரம் - ஸ்ரீபாண்டவத்தூதப் பெருமாளை கிருஷ்ண மூர்த்தியாக ஆராதனை செய்வது விசேஷமானது.
குறைந்த படிப்பு எனத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் முன்னுக்கு வர இருக்க வேண்டிய விரதம் - புதாஷ்டமி விரதம்.
அதிகப் படிப்பு படித்தும் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் - வேதனை தீர்ந்து நிம்மதி பிறக்கும் நன்னாள் "புதாஷ்டமி" தினமே.
சிறப்பு :-
காலத்தால், பிரளயத்தால் அழிவுறா ஆயக் கலைகள் பெற வேண்டி ஸ்ரீ சரஸ்வதி தேவி - ஸ்ரீ காலபைரவரை வணங்கி, ஸ்ரீ ஹயக்ரீவரிடம் குருகுல வாசல் பூண்ட நாள் புதாஷ்டமி.
தினமும் வாழ்வில் ஏற்படும் பயம், அச்சம் போன்றவை தெளிவதுடன், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியை காத்து ரட்சித்துக் கொள்வதற்கான இந்நாளில் "அதி அற்புதமான மகா வித்யா பைரவ சக்திகள்" கிட்டும்.
ஸ்ரீ கால பைரவருக்கு புனுகு, கஸ்தூரி கலந்த சந்தனக்காப்பு இட்டு முந்திரி மாலை சார்த்தி, சிவராத்திரி போல ஆறு அல்லது எட்டு கால வழிபாடுகளை நிகழ்த்தலாம்.
இன்றைய தினத்தை "காலத்தைப் பற்றிய நுண்ணிய அறிவைத் தரும் தினமாகப் போற்றுகிறார்கள் சித்தர்கள்".
காலத்தின் சக்தியையும், மகத்துவத்தையும் உணர்வதற்குக் கால பைரவர் பூஜை மிக மிக முக்கியமானதாகும்.
புதாஷ்டமியின் சிறப்பு என்னவென்றால் "எட்டுவிதமான சௌகார சக்திகள் நிறைந்துள்ள நல்ல நாளே - புதன்கிழமையாக அமைகிறது". புதன் கிரகத்திற்கு உரித்தான எண் "ஐந்து". இதில் அஷ்டமியும் சேர்வதால் இன்னும் கூடுதலான கால சக்திகள் - வித்யா சக்திகளுடன் சேர்ந்து பல நற்பலன்களை வாரி வழங்குகின்றன.
இன்றைய தினம் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் செய்து, திருத்தலம் சென்று, கால பைரவரையும் வழிபட்டு, விரதம் இருந்தால் மகத்தான - வளம் நிறைந்த வாழ்வு அமையும்.