திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ‘ஆனந்த நிலையம்’.
பெயருக்கு ஏற்ப… வாழ்வில் ஒரே ஒருமுறையேனும் கண்டடைய மாட்டோமா என்று திருமால் அடியவர்கள் ஏங்கித் தவிப்பதும், அவர் களுக்கு சில விநாடிப் பொழுதுகளில் பலகோடி புண்ணியம் தரும் பேரானந்த தரிசனம் வாய்ப்பதும் இங்குதான். தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக்கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது, ஆனந்த நிலையம்.
திருமலை திருப்பதி இந்த க்ஷேத்திரத்துக்கு இணையான வேறு க்ஷேத்திரம் இல்லை; திருமலை திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை.
உண்மைதான்!
ஏழுமலையானைக் கண்கண்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட அவன் அடியார்களுக்கு, அவனுடைய திருநாமமே உயிர் உந்தும் மந்திரம்; அவன் கோயில்கொண்டிருக்கும் திருமலையே உலகம். இன்றைக்கும்…
வழக்கமான நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் லட்சோபலட்சம் பக்தர்களும் திருமலையில் குவிகிறார்கள் என்றால், திருவேங்கடவனின் அருட்கருணையே அதற்குக் காரணம்!
வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் என்னவோ திருப்பதியை, ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள்.
சீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில்கொண்டிருக் கிறான்.
சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம்.
திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தத் தலத்தை திருவேங்கடம் என்றே குறிப்பிடுகின்றன. திருப்பதியை திரு பதி எனப் பிரித்தால், திருமகளின் நாயகன் என்றும் பொருள் வரும். ஆமாம்! திருமகள் பரிபூரணமாக வசிக்கும் திருத்தலம் அது. அதுமட்டுமா? வைணவ திவ்ய தேசங்களில் திருவரங்கத்துக்கு அடுத்ததான தலம் இது. ஆழ்வார்களில் பத்து பேரின் பாசுரங்களைப் பெற்ற க்ஷேத்திரம்!
திருப்பதியின் தல வரலாற்றுக் கதை, தேவ லோகத்தில் பிருகு முனிவரிடமிருந்து துவங்குகிறது.
ஒரு முறை, துயரங்கள் அநீதிகள் எல்லாம் அகன்று, உலகில் சகல நன்மைகளும் பெருகவேண்டும் என்பதற்காகப் பெரும் யாகம் நடத்தத் தீர்மானித் தார்கள் முனிவர்கள். யாகத்தின் பலனை மும்மூர்த்திகளில் ஒருவருக்கு அளிப்பது என்று முடிவானது. மூவரிலும் தகுதியானவர் யார் என்பதை அறியும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது. பிருகு முனிவருக்குப் பாதத்தில் ஞானக் கண் உண்டு. எதிர்காலத்தை உணரும் சக்தியும் உண்டு. இதைப் பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம்! இதனால் உண்டான அவரது கர்வத்தை பங்கம் செய்ய பரம்பொருளும் தருணம் எதிர்பார்த்திருந்தது.
பிருகு முனிவர் முதலில் சத்தியலோகம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு, அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்துவிட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார். இதனால் கோபம் கொண்ட பிருகு, ‘பக்தனை வரவேற்காத பிரம்மனுக்கு உலகில் பூஜையே நடக்காது’ எனச் சபித்துவிட்டு, திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கே, சிவ பார்வதியர் தனித்திருந்தனர். அங்கும் தடைகளைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்தார். சிவனாரும் கோபத்துடன் அவரைக் கண்டித்தார். பக்தர்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லையே என்று கருதி, ஈசனுக்கும் சாபம் தந்தார் பிருகு. ‘பூலோகத்தில் உமக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும்’ என்று சபித்தவர், அடுத்து வைகுண்டத்துக்கு சென்றார்.
அங்கே சயனத்தில் இருந்த திருமால், முனிவரின் வருகையை அறிந்தும் அறியாதவராக அரிதுயில் கொண்டிருந்தார். மிகுந்த கோபம் கொண்ட பிருகு, பகவானின் மார்பில் எட்டி உதைத்தார். ஆனால் எம்பெருமானோ கோபம் கொள்ளவில்லை. குழந்தை மார்பில் உதைத்தால், தந்தைக்கு சினம் எழுமா என்ன? அதேநேரம், குழந்தையின் துடுக்குத்தனத்தை களைய வேண்டாமா?
பிருகுவின் பாதம் நோகுமே என்று பிருகுவின் பாதத்தைப் பிடித்துவிடுபவர்போல் அதிலிருந்த ஞானக் கண்ணையும் பிடுங்கி எறிந்து விட்டார் பகவான். பிருகு முனிவர் பகவானின் சாந்தத்தைக் கண்டு, அவரே யாக பலனை ஏற்கத் தகுதியான மூர்த்தி என்று முடிவு செய்தார். ஆனால், தான் வசிக்கும் எம்பெருமானின் திருமார்பை முனிவர் எட்டி உதைக்கிறார், அவரை தன் நாயகன் கண்டிக்கவில்லையே என்ற கோபம் திருமகளுக்கு. எனவே, பெருமாளைவிட்டுப் பிரிந்தாள். பூலோகத்தில் ஆகாசராஜனின் மகளாக அவதரித்தாள்.
மாலவனால் மலர்மகளைப் பிரிந்திருக்க முடியுமா? அவளைத் தேடி, அவர் பூலோகத்துக்கு இறங்கியதும், அவரை வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத்வகுளாதேவி மகனாக ஏற்றதும், பின்னர் அவர் வேடனாக வந்து பத்மாவதியை சந்தித்ததும், அவளை மணந்துகொள்ள ஆசைப்பட்டதும், வகுளாதேவியின் முயற்சியால் ஆகாசராஜனின் அனுமதி பெற்று பத்மாவதியை பெருமாள் மணம் புரிந்ததும், கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன்பட்டு, அந்தக் கடனை இன்றுவரையிலும் அவர் செலுத்திக்கொண்டிருக்கும் கதையும் எல்லோரும் அறிந்ததுதானே!
ஏழுமலையானுக்கு இங்கு கோயில் எழுப்பியது ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். பெருமாளுக்கு பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம்.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் இவருக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா?
வெறுங்கை வேடன்!
திருப்பதி மலைமேல் உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்றெல்லாம் போற்றுவர்.
வைகாசி திருவோணம்!
திருமலை திருவேங்கடவனுக்கு உகந்த தினம்.
நாமும் பெறுவோம் அவனருள் தினமும்.