Tuesday, 13 September 2016

பெண்களின் சபரிமலை! ஆற்றுக்கால் பகவதி அம்மன்!


கேரளத்தில் பகவதி அம்மன் கோயில்கள் ஏராளம். இவற்றில் திருவனந்தபுரத்திலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளிலும் இக்கோயில் பிரசித்தி பெற்றுவிட்டது. இதற்கு வருடந்தோறும் மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பொங்கல் விழாதான் காரணம்.

இந்தப் பொங்கல் விழாவைக் காணக் கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் தவிர உலகில் வேறு எந்த பகுதியிலும் ஒரே இடத்தில் இவ்வாறு பல லட்சம் பெண்கள் கூடுவதை பார்க்க முடியாது. கடந்த 1997ம் ஆண்டு இக்கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இந்தச் செய்தியும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இத்தனை சிறப்பு கொண்ட இக்கோயிலில் குடிகொண்டுள்ள தேவிக்கு தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருவனந்தபுரம் நகரின் மையப்பகுதி வழியாக ஓடும் கிள்ளி ஆற்றின் ஒரு கரையில்தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உள்ளது. பல நூற்றாண்டுகள் முன்பே உருவான இக்கோயில் பொங்கல் விழா குறித்து பல ஐதீகங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, மதுரையை எரித்த கண்ணகி குறித்து கூறப்படுவது.



மதுரையை எரித்த பின்னர் கண்ணகி நேராக ஆற்றுக்காலுக்கு வந்து இங்கேயே குடியமர்ந்ததாகவும், கண்ணகியின் சினத்தை குறைப்பதற்காகவே பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் பொங்கல் விழா நடைபெறும் 10 நாட்களிலும் கண்ணகி குறித்த வரலாறு, ‘தோற்றம் பாட்டு’ என்ற பெயரில் பாடப்பட்டு வருகிறது. அடுத்ததாக, மகிஷாசுர வதம் முடிந்த பின்னர் பக்தர்களின் முன் தோன்றிய தேவியை பெண்கள் பொங்கல் வைத்து வரவேற்றதாகவும் இதன் காரணமாகவே காலம் காலமாக பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கும் பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அம்மனுக்குக் காப்பு கட்டி, குடியிருத்தல் சடங்குடன் விழா தொடங்கும். பூரம் நாளும், பௌர்ணமியும் ஒன்றாக வரும் திருவிழாவின் 9வது நாளில் பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடைபெறும். மறுநாள் குருதி தர்ப்பண சடங்குடன் 10 நாள் பொங்கல் திருவிழா நிறைவடையும். திருவிழாவின் முதல் நாள் முதல் 10வது நாள் வரை கோயிலின் நேர் எதிரே ஒரு குடில் கட்டி 3 பேர் கண்ணகி சரித்திரத்தை பாடுவார்கள்.



இந்த பொங்கல் திருவிழாவில் இன்னும் 2 சிறப்பம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘குத்தியோட்டம்’, இன்னொன்று ‘தாலப்பொலி’. குத்தியோட்டம் என்பது 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான திருவிழா. 3வது நாள் முதல் இறுதி நாள் வரை கடும் விரதமிருந்து கோயிலுக்குள்ளேயே அந்தச் சிறுவர்கள் தங்கியிருப்பார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து கோயில் பூஜைகளில் கலந்து கொள்ளவேண்டும். 7 நாட்களும் இந்த சிறுவர்கள் கோயிலுக்குள்தான் தங்கியிருக்க வேண்டும். கோயில் சார்பில் வழங்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடவேண்டும். இந்த விரதத்தில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, ஒழுக்கம், அறிவு உட்பட எல்லா வளங்களும் பெருகும் என்பது ஐதீகம். வருடந்தோறும் இந்த குத்தியோட்ட விரதத்தில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடுத்ததாக தாலப்பொலி என்பது 10 வயதுக்கு குறைவான சிறுமிகள் பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் ஒரு தட்டில் பழங்கள், அரிசி மற்றும் பொருட்களுடன் பொங்கல் தினத்தன்று கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகும்.

குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் இருப்பதற்காகவும், வருங்காலத்தில் நல்ல வரன் கிடைப்பதற்கும், ஐஸ்வர்யத்திற்காகவும் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு இந்த நேர்ச்சையை நடத்துகின்றனர்.

தொடக்க காலத்தில் கோயில் முன் உள்ள சிறிய மைதானத்தில் மட்டுமே பெண்கள் பொங்கலிட்டார்கள். ஆனால் தற்போது கோயிலைச் சுற்றிலும் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் பெண்கள் பொங்கலிடுகின்றனர். வருடந்தோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய புதிய இடங்களிலும் பொங்கல் பானைகளை தற்போது பார்க்க முடிகிறது. இதனால் இக்கோயில் ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று திருவனந்தபுரம் நகருக்குள் பஸ்கள் உட்பட எந்த வாகனமும் நுழைய முடியாது. பெண்கள் அதிக அளவில் குவிவதால் பொங்கல் தினத்தன்று கோயிலுக்கு அருகே முறையான அனுமதி இல்லாத ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பொங்கலின் சிறப்பு குறித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளுக்கும் இதன் புகழ் பரவிவிட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு பொங்கலிடுவதற்காக ஏராளமான வெளிநாட்டு பெண்கள் வருவதுண்டு. இது தவிர பொங்கல் நடைபெறும் அதே சமயத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் அவரவர் ஊர்களில் பொங்கலிடுகின்றனர்.


 

No comments:

Post a Comment