Thursday, 29 October 2015

அன்னப்பாவாடை மகோற்சவம்!


  அன்னப்பாவாடை என்பது அன்னத்தால் படையல் செய்வது.
 
இதில் சாதம், சர்க்கரைபொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம், பருப்பு, பழவகைகள், இளநீர் ஆகியவற்றை படையல் செய்வது ஆகும்.

இதில் சர்க்கரை பொங்கலின் மீது குளம் மாதிரி செய்து அதில் நல்ல சுத்தமான நெய்யை காய்ச்சி ஊற்றி நெய்க்குளம் செய்வார்கள். இதில் அம்மனது திருவுருவம் காட்சியளிக்கும்.

இந்த அன்னப்பாவாடை அல்லது திருப்பாவாடை என்னும் மகா நைவேத்தியத்தில் அம்மனை தரிசிப்பது லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்த பலனை தரும்.
 
அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும் என்பது பழமொழி. 
 
 
 அரிசி என்பதில் அரியும் சிவனும் இருப்பதாக கூறுவார்கள். அரிசியின் வடிவமும் லிங்க ஸ்வரூபம் தான். மற்றொருவகையில் சாளக்கிரம வடிவமாகவும் நோக்கினால் விஷ்ணு அரிசியில் உறைகிறார். அரிசியை இறைக்கக் கூடாது என்பார்கள்.
 
அன்னம் பரப்ரம்ம சொரூபம் என்பார்கள்.



ஐப்பசி பவுர்ணமியில் ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
 
உலகத்து உயிர்கள் அனைத்திற்கும்  அன்னம் என்பது உணவு. இந்த உணவை தரும் அன்னபூரணி வடிவினள் அன்னை. அத்தகைய அன்னைக்கு நன்றிக்கடனாக அன்னப்பாவாடை என்னும் படையல் செய்து வழிபடுவது நம் மரபு.
 
ஜீவராசிகளுக்கு படியளக்கும் பரப்பிரம்ம சொரூபிணியான அன்னைக்கு ஆண்டில் ஒரு நாள் இப்படி அன்னப்பாவாடை என்னும் படையல் வழிபாடு செய்து போற்றுதல் தொன்று தொட்டுவரும் செயலாக அமைந்துள்ளது.


இந்த அருமையான படையல் நிவேதனம் தென்னகத்தில் பேரளம் அருகே உள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை சன்னதியில் மட்டும் ஆண்டு தோறும் சித்திரை பூர்ணிமா  அன்று நடப்பது வழக்கம்.
 
அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர்சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

 சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டு களித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு பின் அந்த படையல் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
 
இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அம்மனின் அருள் பெறுவோமாக!

No comments:

Post a Comment