தட்சனை வதம் செய்ததால் வீரபத்திரரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அவர் திருவள்ளூரிலுள்ள ஹ்ருத்தாபநாசினி தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றாராம். குளத்தில் வாயு மூலையில் தீர்த்தேஸ்வரர் என்னும் சிவபெருமானைக் காணலாம்.
இக்குளம் மகிமை பெற காரணம் என்ன?
நாரதர் திரிலோக சஞ்சாரியாயிற்றே! அவர் ஆகாய மார்க்கமாகப் போய்க்கொண்டிருந்தார். அச்சமயம் இக் குளத்தில் வசிஷ்டர், வாமதேவர், அத்ரி, பிருகு, காஸ்யபர், விஸ்வாமித்திரர், வால்மீகி போன்ற பல ரிஷிகளும், இந்திராதி தேவர்களும் நீராடிக் கொண்டிருந்தார்களாம். அதைக்கண்டு வியந்த நாரதர் கீழே இறங்கிவந்து, "இன்று தை அமாவாசை- உத்ராயன காலம். தாங்கள் கங்கையில் ஸ்நானம் செய்யாது இங்கு செய்வதன் விசேடம் என்ன' என்று வினவினார். அவர்கள் "பிரம்மாவைக் கேள்' என்றனர். நாரதர் பிரம்மாவின் மானசபுத்திரர் அல்லவா. தனயனின் கேள்விக்கு தந்தை பிரம்மா பின்வருமாறு கூறினார்.
தை அமாவாசை பகவத் சாந்நித்யமான திருநாள். பிரத்யும்ன மகாராஜா தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று வலது கால் கட்டை விரல் மட்டும் கீழே பதிய (மாங்காடு காமாட்சி போன்று) மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்தான். தவத்தில் நெகிழ்ந்த பெருமாள் தரிசனம் தந்து, "வரம் யாது தேவை' என வினவினார். அவன் குழந்தை பாக்கியத்துடன், விஷ்ணு தரிசனம் தந்த தை அமாவாசை புனித நாளாகவும், இந்த தடாகம் கங்கையிலும் மேலான பலனைத் தருமாறும் வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.
இங்குள்ள பெருமாள் வீரராகவர் சயன கோலத்தில் உள்ளார். பெருமாள் நின்ற கோலத்தில்தான் அதிகம் காணப்படுவார். அமர்ந்த கோலம் குறைவு. சயன கோலம் அதிலும் குறைவு. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் போன்ற 18 தலங்களில் சயன கோலத்தில் காணலாம்.
பெருமாளுக்கு வீரராகவர் என்று பெயர் வரக் காரணமென்ன?
சாலிஹோத்ர முனிவர் தவம் செய்து பகவானை தரிசிக்க தகுந்த இடம் தேடினார். எந்த இடமும் மோட்சபுரிகளும் அவருக்கு உகந்ததாகத் தோன்றவில்லை. வினோதம். ஆனால் தமிழ்நாட்டு பாக்கியம்- தென்திசை நோக்கிவர, வீக்ஷாரண்யம் என்கிற இந்த இடம் அவர் மனதுக்குப் பிடித்தது. ஒரு வருடம் தவத்திலிருப்பார். பின்னர் விழித்தெழுந்து நிலத்தில் நெல் பொறுக்கி, உமி நீக்கி சமைத்து, எவருக்காவது உணவளித்தபின்பு தான் உண்ணும் நியதியை உடையவர்.
அதுபோல ஒருமுறை சமைத்தபின், யாருக்காவது உணவளிக்க எண்ணினார். ஆனால் கானகம் என்பதால் அப்போது எவரும் தென்படவில்லை. ஒரு வருடம் தவம் மேற்கொண்டதால் மிகுந்த களைப்புடனும் பசியுடனும் இருந்தார் முனிவர். "பகவானே, நீயே துணை' என்று நெகிழ்ந்தார். அப்போது முதியவர் ஒருவர் தள்ளாடியபடி வந்து, "பசி காதை அடைக்கிறது. உண்ண ஏதாவது கிடைக்குமா' என்றார். சாலிஹோத்ர முனிவருக்கு சந்தோஷம். முதியவரின் கால்களைக் கழுவி, இலையிட்டு உணவு பரிமாறினார்.
"பசி தீரவில்லை. இன்னும் போடு போடு' என்று சமையல் முழுவதையும் உண்டார். "உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்ற பழமொழிபோல், "உடல் தள்ளாடுகிறது. தூக்கம் வருகிறது. சிறிது சயனிக்கலாமா? எவ்வுள்?' என்றார். "இவ்வுள் சயனிக்கலாம்' என்று தனது குடிலில் படுக்கை விரித்து சயனிக்கச் செய்து, கால் கைகள் பிடித்துவிட்டார். முனிவர் வலது புறம் உட்கார, அவர் தலைமீது தன் கையை தாங்கலாக இருத்தினார். சிறிது நேரத்தில் படுத்த கிழவர் கல்லாகினார். ஆதிசேடனும் சேர்ந்தார். சின்முத்ரையில் பிரமனை ஆசீர்வதித்தார். அந்த கோலத்தையே இன்று கோவிலில் காணலாம்.
திருஎவ்வுள் ஊர் என்ற பெயரே திருவள்ளூர் என்று மருவியது. நரசிம்மரையும், சீதா, லட்சுமண, ஆஞ்சனேயர் சமேத ராமரையும் இங்கு தரிசிக்கலாம். தனியாக தாயார் சந்நிதியும் உள்ளது. தாயார் பெயர் கனகவல்லி. இதற்கும் ஒரு காரணம் உண்டு.
ராமாவதாரத்தில் இராவணன் கவர்ந்துசென்றது மாயா சீதா. (வேதவதி என்று பெயர்). அசல் சீதை அக்னியில் மறைந்தாள். ஆகவேதான், இராவண சம்ஹாரம் முடிந்ததும், அந்த மாயா சீதா அக்னியில் மறைந் தாள்; அசல் சீதை தோன்றினாள்.
மாயா சீதா அக்னியில் மறையும்முன் ராமபிரானை திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். ராமர், "அது நிச்சயம் நடக்கும். ஆனால் இப்போதில்லை' என்றாராம்.
அந்த வேதவதியே திருவள்ளூரில் (தர்மஸேனபுரம்) தர்மசேன மகாராஜா செய்த தவப்பயனாக வசுமதியாகப் பிறந்தாள். பத்மாவதியைத் தேடி திருப்பதி வேங்கடாசலபதி குதிரை மீதேறிச் சென்றார். வள்ளியைத் தேடி கந்தன் வேடனாக சென்று மன்றாடினான். அதேபோன்று வசுமதியைத் தேடி வீரராகவர் ஒரு இளவரசனாக குதிரைமீது சென்றார். மணம்புரிய வேண்டினார். வசுமதி தனது குலதெய்வமான வீரராகவரை வேண்டினாள்.
தர்மசேனன் தன் மகள் ஒரு இளவரசனை விரும்புகிறாள் என்பதை தோழிகள் மூலம் அறிந்து, அந்த இளவரசனைக் கண்டு, "குலம், கோத்திரம், உற்றார்- உறவினர் எவர்' என்று வினவ, "இந்த வீரராகவக் கடவுள் முன் சத்தியம் செய்கிறேன். உமது பெண்ணுக்கு எந்தக் குறையும் வாராது. கல்யாணம் செய்து கொடும்' என்றார்.
தர்மசேனனும் நம்பி, கல்யாணத்தை விமரிசையாகச் செய்தார். கடைசியில் கரம்பிடித்து கோவில் தரிசனம் செய்ய இருவரும் வர, இளவரசன் மணமகளுடன் கருவறைக்குள் புகுந்து மறைந்தான்.
அப்போதுதான் தர்மசேனர் இளவரசனாக வந்தவர் தன் குலதெய்வமான வீரராகவரே என்பதை உணர்ந்தான்.
வசுமதி தங்க நிறமாக இருந்ததால் கனகவல்லி. (முன்னெல்லாம் திருவள்ளூரில் பெண்களுக்கு கனகவல்லி என்ற பெயர் அதிகம் உண்டு. இப்போது மாறிவிட்டது.)
ஆக, ஹ்ருத்தாபநாசினி தீர்த்தம் நம் மனக் கவலையை மாற்றும்; உடல்பிணி போக்கும். வீரராகவனை தரிசிக்க, மணமாகாத வர்கள் சீக்கிரமே மணமாலை பெறுவர். பிள்ளைப்பேறும் பெறுவர்.
இந்த தை அமாவாசையன்று ஹ்ருத்தா பநாசினி குளத்தில் நீராடி, (பிதுர்கடன் செய்ய வேண்டியவர்கள் செய்து) வீரராகவர்- கனகவல்லி தம்பதியரை தரிசித்து நலன் பல அடையலாம்.
No comments:
Post a Comment