கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் அபூர்வ வகை வாகனங்கள், கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன.
இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு.
அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாச்சலுடன், இறைவனையோ இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. இதனை உருவாக்கிட, அவர்களுக்கு ஏழெட்டு தினங்கள் ஆகின்றன. முழுமையான முத்துப்பல்லக்கின் நீளம் முப்பத்தைந்து அடி, அகலம் பன்னிரெண்டு அடி, உயரம் ஐம்பத்தைந்து அடி. இந்த நீள, அகல, உயர பிரம் மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது.
நான்கு சக்கர பட்டறை மீதாக இருபுறமும் நாற்பதடி நீள ஒரே மரவாரினைக் கட்டுகிறார்கள். அதன் மீதுதான் முத்துப்பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. முன்பாக, பல்லக்கை வடிவமைக்கும் இருபது கலைஞர்களும், மூங்கில் பிளாச்சுகளை அளவுகளுக்கு ஏற்றாற்போல் வெட்டி, அலங்கார வடிவங்களை உருவாக்குகின்றனர். ஜிகினாக்களை வெட்டி ஒட்டுகின்றனர். ஜொலிக்கும் முத்துக்களை (டூப்ளிகேட்) பதிக்கின்றனர்.
கீழே கைவேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் அவற்றை அந்தப் பட்டறை மீது ஏற்றி ஆங் காங்கே கட்டி, ஒட்டி மிகப் பிரம்மாண்ட முத்துப் பல்லக்கினை உருவாக்கி விடுகின்றனர். அதன் பிறகு முத்துப்பல்லக்குக்கு மின் விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்படுகின்றன. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கு மிகுந்த பேரழகுடன் தோற்றமளிக்கிறது.
ஆடி மாதம், கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலில் முத்துப்பல்லக்குப் பெருவிழா. அன்று காலை ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கைலாசநாதர் கோயிலிலிருந்து பால் குடம் சுமந்து, பகல் பன்னிரெண்டு மணியளவில் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். மதியம் இரண்டு மணிக்கு உச்சிக்கால பூஜை. அதன் பின்பு மாலை நான்கு மணியிலிருந்து சுவாமி அலங்கார மண்டபத்தில், உற்ஸவர் மாரியம்மனுக்கு இரவு ஏழு மணி வரைக்கும் அலங்காரம் நடைபெறும்.
அலங்கார மண்டபம் எதிரே, இசைக்கலைஞர்கள் பலர் இசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பர். இரவு பன்னிரெண்டு மணியளவில் மல்லாரி இசையினைக் கேட்டபடி, உற்ஸவர் மாரியம்மன் உள் பிராகாரம் வலம் வருவார். இரவு ஒரு மணியளவில் அம்பாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளியவுடன் முத்துப்பல்லக்கு வீதியுலா தொடங்கி விடும். நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்பாள் திருக்கோயில் வந்து சேர, காலை ஆறரை மணியாகி விடும். தொடர்ந்து ஏழு மணியளவில், மீண்டும் மல்லாரி இசை கேட்டபடி, மாரியம்மன் கருவறை முன்மண்டபம் வந்து சேர்வாள்.
ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப்பல்லக்குத் திருவிழாதான் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழா. இது தவிர, ஆவணி மாதம் பிரமோற்ஸவம், ஆவணி கடைசி ஞாயிறு அன்று திருத்தேர் உற்ஸவம் (ஒவ்வொரு ஆவணி ஞாயிறும் மிக விசேஷம்), புரட்டாசி மாதம் வசந்த உற்ஸவ தெப்பத் திருவிழா ஆகியவை இக்கோயிலின் சிறப்பு விழாக்கள்.
No comments:
Post a Comment