Monday, 30 November 2015

திருவருள் புரியும் திரிபுரசுந்தரி!



லலிதா பரமேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வணங்கப்படுபவள் இந்த அம்பிகை. ஸ்ரீசக்ர வழிபாட்டின் நாயகியே இவள்தான். இவளின் இருப்பிடம் வானுலகில் ஸ்ரீநகரம்; பூவுலகில் ஸ்ரீசக்ரம். இந்த ஸ்ரீசக்ரத்தில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஆவரணம் என்று அழைக்கப்படும். அந்த ஒன்பது ஆவரணங்களிலும் திரிபுரா, திரிபுரேசி, திரிபுரசுந்தரி, திரிபுரவாசினி, திரிபுராஸ்ரீ, திரிபுரமாலினி, திரிபுராஸித்தா, திரிபுராம்பிகா எனும் சக்ரேஸ்வரிகள் அந்தந்த பிரிவின் தலைவிகளாக அருள்கின்றனர்.

திரிகோணத்தின் மூன்று மூலைகளிலும் காமேஸ்வரி, வஜ்ரேஸ்வரி, பகமாலினி எனும் தேவிகள் வீற்றிருக்க அதன் நடுவில் பிந்து எனப்படும் மையத்தில் திரிபுரசுந்தரி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனுக்ரஹித்தல் என்ற ஐந்தொழில்களையும் காமேஸ்வரனோடு கூடிய காமேஸ்வரியாக  இந்த உலகை பரிபாலனம் செய்து கொண்டு  திருவருள்பாலிக்கிறாள். இவள் அமர்ந்திருக்கும் ரத்னமயமான கட்டிலின் கால்களாக ருத்ரன், ஈசன், நான்முகன், திருமால் எனும் நால்வரும் துலங்க சதாசிவனே அந்த மஞ்சத்தின் பலகையாக இருக்க அவன் மேல் அமர்ந்து அருளும் திருக்கோலம் கொண்டவள் இவள். பரப்ரம்ம மஹிஷியான இவளே அன்பின் சக்தியாகவும் கொண்டாடப்படுகிறாள். இத்தேவிக்கு மாத்ருகாவர்ணரூபிணி என்றும் பெயர் உண்டு. ஆளும் தன்மை, கீர்த்தி, செல்வம், வைராக்கியம், மோக்ஷம், ஐஸ்வர்யம் எனும் ஆறு பகங்களுக்கு இவளே அதிபதி எனவே இவள் பகவதி என்றும் வணங்கப்படுகிறாள்.

அழகே உருவானவள் இந்த அம்பிகை.  இவளே அரசிகளுக்கு எல்லாம் அரசி. அன்பின் திருவுரு. நளினத்தின் உறைவிடமான லலிதா. மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா. தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும் திரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள். திரிபுரசுந்தரிக்கு வெளிப்படையான அர்த்தம் இது.  ஸ்தூலம், சூஷ்மம், காரணம் எனும் மூன்று சரீரத்திலும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவள். ஒன்பது வாயில் உள்ள ஒரு தேக பட்டணத்தில் ஆத்மா வசிக்கிறது என்பதை கீதையும் உபநிஷதங்களும் கூறுகின்றன. இம்மூன்று சரீரங்களையும் ஜீவ களையுடன் அழகாக இருக்கச் செய்வதாலும் அம்பிகை திரிபுரசுந்தரி என வணங்கப்படுகிறாள். பரஞ்ஜோதி முனிவர் தன் திருவிளையாடற் புராணத்தில் ஈசனை கற்பூர சுந்தரன், பூங்கடம்பவன சுந்தரன், மகுட சுந்தரன், சோமசுந்தரன் என பல்வேறாக போற்றியுள்ளார். சுந்தரனின் மனைவி சுந்தரிதானே?

சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ போன்ற நாமங்கள் தேவியின் தோற்றப் பொலிவை எடுத்துக் கூறுகின்றன. கோமளாகாரா எனில் பேரழகே வடிவெடுத்தவள் என்று பொருள்.

சோபனா என்றால் சௌந்தர்யமே வடிவெடுத்தவள் என்று பொருள். மங்களங்களோடு கூடிய அழகு இது. மங்களமான அழகிற்கு மனதை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தி உண்டு. சர்வ வர்ணோபஸோபிதா என்றால் எல்லாவிதமான நிறங்களையும் எடுத்து மிளிர்பவள் என்று பொருள். 

இந்த மகாதிரிபுர சுந்தரி அம்பிகை உதிக்கின்ற செங்கதிர் போல் ஆயிரம் மடங்கு ஒளியுடன் பிரகாசிப்பவள். மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். இவள் திருக்கரங்கள் தாங்கியுள்ள பாசத்திலிருந்து அஷ்வாரூடா தேவியும் அங்குசத்திலிருந்து ஸம்பத்கரி தேவியும் கரும்பு வில்லிலிருந்து ராஜமாதங்கியும் கமலம், கைரவம், சிவந்த கல்ஹாரம், இந்தீவரம், சஹகாரம் எனும் ஐந்து வகை மலர்களால் ஆன புஷ்பபாணங்களிலிருந்து வாராஹியும் தோன்றியதாக லலிதோபாக்யானம் கூறுகிறது.

பாசம் இச்சா சக்தியாகவும் அங்குசம் ஞான சக்தியாகவும் கரும்புவில்-புஷ்பபாணங்கள் க்ரியா சக்தியாகவும் செயல்படுகின்றன. சந்திரன், குபேரன், லோபாமுத்திரை, மன்மதன், அகஸ்தியர், நந்தி, சூரியன், திருமால், ஸ்கந்தன், சிவன், துர்வாசர், போன்றோர் இந்த அம்பிகையை உபாசித்தவர்களில் அதிமுக்கியமானவர்கள். அம்பிகையின் கைகளில் அபயவரதமும் ஸ்படிகமாலையும் புத்தகமும் இருக்கும்படி தியானிப்பதற்கு வாக்சித்தி தந்த்ரம் என்றும் அம்பிகையையும் வசினி முதலிய எண்கோண சக்திகளையும் அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணங்கள், அபயம், வரதம், புத்தகம், ஸ்படிகமாலை போன்றவற்றுடன் தியானிப்பதற்கு சக்திகூட தந்திரம் என்றும் செந்நிறமாக அம்பிகையை ஐந்து கோசங்களினால் ஆன நம் உடலில் இருந்தி தியானிப்பதற்கு சமரிகூடதந்திரம் என்றும் பெயர்.

இடையில் ஒட்டியாணம் அணிந்துள்ளாள். இரு செவிகளிலும் எழிலோங்கிப் பொலியும் தாடங்கங்களின் ஒளி கன்னத்தில் வீசுகிறது. நிறைமதி முகத்தினள். மன்மதனின் வில் போன்ற புருவங்கள் கொண்டவள். சம்பக மலர் போல் நாசி. கருணை மழை பொழியும் கண்கள். தேவி தன் நெற்றியில் கஸ்தூரி திலகம் அணிந்துள்ளாள். முத்துகளும் வைரங்களும் பதிக்கப்பெற்ற கீரிடம் அங்கு உறையும்படி பெற்ற பேறுதான் என்னவோ! திங்கட்பிறை அங்கே ஒளிர்ந்து துலங்குகிறது. அம்பிகைக்கு சர்வாபரணபூஷிதா என்று ஒரு திருநாமம் உண்டு. நவமணிமகுடம் முதல் மாணிக்கப்பாதுகைகள் வரை 26 வகையான ஆபரணங்களை தேவி சூட்டிக்கொண்டிருப்பதாக கல்பசூத்ரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கும். முத்து மாலை வெண்ணிறம். இது ஞானப்பிரகாசத்தைக் குறிக்கும். குருவிந்தமணி எனும் பத்மராகங்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை தியானித்தாலே மங்களம், விஷ்ணு பக்தி போன்றவை அதிகரிக்கும். சூரிய, சந்திரனே தாடங்கங்களாய்ப் பொலிகின்றன. பெண்களுக்கு காதணிகள் முக்கியமானவை. ‘தேவி உன் தாடங்க மகிமையால்தான் ஈசன் ஆலகால விஷத்தை அருந்தியும் உயிரோடிருக்கிறார்’ என்கிறார், ஆதிசங்கரர்; தன் ஆனந்தலஹரியில். மேலும் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கியதும் தேவியின் தாடங்கம்தானே! 

கணபதியும் கந்தனும் தன் தெய்வ நிலையை விட்டு அன்னையின் பிள்ளைகள் என்ற நிலையில் தேவியை வணங்கும் அழகுதான் என்ன! இந்த திரிபுரசுந்தரியே ஸ்ரீசக்ர ரதத்தில் ஏறி பண்டாசுரனை அழித்தவள். காஞ்சி காமாட்சி லலிதா திரிபுரசுந்தரியின் வடிவமே. ஸ்ரீசக்ரத்தின் படம் வீட்டில் இருப்பதே ஒரு ரட்சை போன்றது. தினமும் அதற்கு பூக்களைப் போட்டு நைவேத்யம் செய்து வணங்கி வரவேண்டும். முக்கோணத்தின் ஒரு முனை கீழ் நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.  ஸிம்மாஸனேஸ்வரி, லலிதா, மகாராக்ஞீ, வராங்குசா, சாபிநீ, திரிபுரா, மகாதிரிபுரசுந்தரி, சுந்தரி, சக்ரநாதா, ஸம்ராக்ஞீ, சக்ரிணி, சக்ரேஸ்வரி, மகாதேவி, காமேசி, ராஜப்பிரியா, காமகோடிகா, சக்ரவர்த்தினி, மகாவித்யா, ஸர்வபாடலா, குலநாதா, ஆம்னாய நாதா, ஸர்வாம்நாய நிவாஸினி, சிருங்கார நாயிகா எனும் திவ்யநாமாக்களால் அம்பிகையை அர்ச்சிக்க வேண்டும். தூப, தீப, நைவேத்தியங்களோடு நலம் பல அருளும் நவராத்திரி நாயகியை நாமணக்க, மெய்சிலிர்க்க வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
 
 

No comments:

Post a Comment