புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் புவனேஸ்வரியே. புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் இல்லாத மந்திரமே இல்லை எனலாம். தேவி புவனேஸ்வரி வசிக்கும் இடம் மணித்வீபம் எனப்படுகிறது. நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டது இந்த த்வீபம். மூவுலகிலும் இதற்கு ஈடான அழகு வாய்ந்த நகரம் கிடையாது. அமுதமயமான கடலின் நடுவில் உள்ள இத்தீவில் சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரரின் மடியில் அமர்ந்து அருள்கிறாள்.
ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசிய ஸ்தனங்கள், சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள்.
லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள். விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள்.
ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ. ஹ்ரீம் மந்திரத்தால் புகழப்படுபவள்.
புவனேஸ்வரரின் பத்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள். பிறரைக் கட்டுப்படுத்தும் பாசத்தை நான் கட்டுப்படுத்தி வைத்துள்ளேன் என்பதைக் குறிக்கவும் கட்டுண்டு கிடக்கும் ஜீவன்களை விடுவித்து முக்தியளிக்கத் தன்னால் முடியும் என்பதைக் குறிக்கவும் அன்னை புவனேஸ்வரி பாசம் ஏந்திய கரத்தினளாய் துலங்குகிறாள்.
அங்குசம் பக்தர்களின் அகந்தையை அடக்கிவிடுகிறது. வரத முத்திரை ‘என் பாதாரவிந்தமே என்றும் கதி என இரு’ என்பதைக் கூறாமல் கூறுகிறது. ஜீவராசிகள் வேண்டியதை அளிக்கச் சித்தமாயுள்ளாள் என்பதை வரத முத்திரை குறிக்கிறது. பயம் வந்தால் அதைப்போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள்.
உதிக்கும் ஆயிரம் சூரியனுக்குச் சமமான செந்நிற ஒளியுடையவள். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் கடார்க்களம் எனும் யந்திரத்தின் மீது தன் செந்தாமரைப் பாதங்களைப் பதித்தருள்பவள். பிறைச் சந்திரனின் கிரணங்களால், அழகிய மணிகளால் ஆக்கப்பட்ட கிரீடத்தைத் தரித்தவள். லலித ரூபத்துடன் பிரகாசிப்பவள். ஜகஜ்ஜனனியான புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சக்தியின்றி உலகம் படைக்கப்படவில்லை.
ஸ்ரீமாதாவான தேவி ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் பிரமாண்டத்தில் உள்ள அனைத்தையுமே படைத்துக் காத்து ரட்சித்து வருபவள். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ஆப்ரஹ்மகிரீடஜனனீ என்று போற்றுகிறது. மேலும், கருணையில் கடல் வடிவானவள் என்பதை கருணார ஸாகரா எனும் நாமம் உணர்த்துகிறது. மனிதர்கள் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத கொடிய தவறுகளையும் மறந்து மன்னித்து தடுத்தாட்கொண்டு ரட்சிக்கும் கருணை இந்த புவனமாதாவான புவனேஸ்வரி தேவிக்கு உண்டு. சகல அண்டங்களில் உள்ள சக்திகளுக்குக் காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருப்பவள் இந்த புவனேஸ்வரி.
சகல புவனங்களையும் நியமித்து நடத்தும் புவனேஸ்வரி தசமகாவித்யா தேவிகளுள் நான்காவது வடிவம் கொண்டவள். இவள் பரம்பொருளின் ஞான சக்தி. அனைத்திற்கும் ஆதாரமான ஆகாசதத்துவமே இவள் திருவுருவம்.
திருமூலர் தன் திருமந்திரத்தில்,
‘‘ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரியாகி ஐவரைப் பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!’’ என்கிறார்.
புவனேஸ்வரி என்ற உடனேயே சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கி பின் கேட்கும் வரங்களுக்கு கொடுக்க ஒன்றுமில்லாமல் பக்தர்களிடம் கடனாளியாகிவிடுவாள், புவனேஸ்வரி! அவ்வளவு கருணை கொண்டவள் என்கிறார், வியாசராஜர். ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி.
புவனேஸ்வரியின் உபாசனையால் உலகங்களை ஜெயிக்கும் ஆற்றலை சாதகன் அடைகிறான். அளவில்லா செல்வமும் வாழ்க்கை வளமும் பதவி உயர்வும் நிச்சயமாகப் பெறுகிறான். நோய்நொடியற்றவனாய் கருணையுடன் கூடியவனாய், த்ரிகால ஞானியாகவும் விளங்குவான். ராஜவசியம், தன வசியம் கிட்டும். உபாதைகள் நீங்கும். மன்னர்களாலும் வணங்கப்படுவான். உலகங்கள் எல்லாம் தன் ஆத்மாவே என்ற ஸர்வாத்மபாவம் (எங்கும் நானே உளன் என்கிற ஞானத்தை) நிச்சயம் பெறுவான். நிலவுலகில் புவனேஸ்வரியை உபாசித்து வழிபட்டவர்கள் தன்
No comments:
Post a Comment