Tuesday, 1 December 2015

குபேர பூஜை



 
 
 
குபேரன் செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவர். இவர் வடக்கு திசைக்கு உரிய காவல் தெய்வம் என்றும், இவர் வடக்கு திசையில் இருந்து உலகை பாதுகாக்கிறார் என்றும் சொல்வதுண்டு இந்து சமயக் கதைகளில் குபேரன் சிவபெருமானின் தீவிர பக்தர் என்று சொல்லப்படுகிறது. சிவனை நோக்கித் தவமிருந்த இவருக்குச் சிவபெருமான் இவரை அழகாபுரி வேந்தனாக நியமித்து, இவருக்குச் சங்கு நிதி, பதும நிதி, யோக நிதி ஆகியவற்றை வழங்கினார்.

சங்கு நிதி என்பது சங்கிலிருந்து ஒழுகும் நீரைப் போல தினசரி கிடைக்கும் செல்வத்தைக் குறிப்பிடுகிறது.

பதும நிதி என்பது தாமரை (பதுமம் என்றால் தாமரை என்று பொருள்) மலர்களைப் போல் அடுக்கடுக்காக இருப்பதைப் போல் அடுத்தடுத்துச் செல்வம் கிடைப்பதைக் குறிப்பிடுகிறது.

யோகநிதி என்பது எதிர்பாராது திடீர் என்று கிடைக்கும் செல்வத்தைக் குறிப்பிடுகிறது.

குபேரன் மகாலெட்சுமியின் கீழ் இயங்கும் ஒரு தெய்வமாக கருதுகின்றனர். குபேரனிடம் பத்ம நிதி, மகாபத்மநிதி, மகரபத்மநிதி, கட்சபபத்மநிதி, குமுத நிதி, நந்தநிதி, சங்கநிதி, நீலநிதி, பத்மினிநிதி எனும் ஒன்பது பெயர்களிலான நவநிதிகள் இருப்பதாகச் சொல்கின்றனர்.

குபேரன் வைஸ்வரவா என்பவரின் மகன் என்கின்றனர். வைஸ்வரா என்பதற்கு புகழ் என்று பொருள். குபேரன் முழு உலகத்தையும் ஆட்சி செய்யும் செல்வத்தின் கடவுள் ஆகச் சொல்லப் படுகிறது.


குபேரனை பொதுவாகத் தீபாவளி அன்றும் அட்சய திருதியை   அன்றும் வணங்குவர். குபேரனுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் பூச நட்சத்திர நாளிலும் வணங்கலாம். வெள்ளிக்கிழமை அன்றும் அமிர்தயோகம் அல்லது சித்தயோகத்தில் செய்வது சிறப்பாகும். குபேரனுடைய படத்தை வைத்து அத்துடன் முறையான குபேர எந்திரத்தை வைத்து பூஜை செய்யலாம். குபேரனுக்கு நவ தானியங்களைப் படைத்து அத்துடன் தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளைப் படைத்துச் செய்ய வேண்டும்.
பொதுவாக குபேரனுக்கு கிராம்பு, ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருள்கள் சேர்த்த பாலையோ அல்லது பால் பாயாசத்தையோ படைத்து வணங்க வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு இதைப் பலருக்கும் கொடுக்கலாம். சிலர் லட்டு படைத்து வணங்குவதுண்டு.

குபேரனை வணங்குவதால் பொருளாதார பிரச்சனைகள் தீரும். தொழில் சார்ந்த வருமானங்கள் கூடும். கொடுக்கல் வாங்கல் சிறப்புறும். குபேரனை வணங்கும் பொழுது வெள்ளி,தங்கம் மற்றும் நாணயங்களை முன் வைத்து வணங்கலாம். பொதுவாக குபேரனை தியானம் செய்யும்பொழுது குபேர முத்திரை இட்டு செய்வது மிகவும் சிறப்பாகும்.

குபேர முத்திரை என்பது பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களை ஒன்று சேர்த்து, மீதமிருக்கும் இரண்டு விரல்களை மடித்து வைக்க வேண்டும். இந்த முத்திரையைச் செய்து வணங்குவதால் தன்னம்பிக்கை பெருகி பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.



No comments:

Post a Comment