தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். விறகு வெட்டி விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவறமாட்டார். அத்துடன் தன்னால் இயன்ற அளவு சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவபெருமானே வந்து உண்பதாக எண்ணி மகிழ்வார்.
சிவனடியார் களை உபசரித்தபின் தான் அவர் உண்பது வழக்கம்.சேந்தனாரின் பக்திப் பெருமையை அனைவரும் அறியவேண்டுமென்று தில்லைவாசன் திருவுள்ளம் கொண்டார். மார்கழி மாத திருவாதிரை முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக தொடர்மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் விறகு வெட்ட வெளியில் செல்லமுடியாமல் தவித்தார் சேந்தனார். விறகு வெட்டி அதை விற்று வந்தால்தான் அன்றைய பொழுது ஓடும். மறுநாளுக்கென்று எதையும் சேமித்துவைக்க முடியாத வாழ்க்கைச் சூழல்.
அந்த நிலையில் சேந்தனார் வீட்டு வாசல்முன், "திருச்சிற்றம்பலம் சம்போ மகாதேவா...' என்ற குரல் கேட்டது. வெளியே வந்த சேந்தனாரும் அவரது மனைவியும் சிவனடியார் ஒருவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டனர். அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்துச்சென்று ஆசனம் அளித்து பணிவிடை செய்தனர். சிவனடியாரின் பசியைப் போக்க சமைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால், சேந்தனாரின் மனைவி வீட்டிலிருந்த சிறிதளவு அரிசிமாவில், வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். அதை அடியாருக்குப் படைக்க, அவரும் அதை மகிழ்வுடன் உண்டு அவர்களை வாழ்த்திச் சென்றார்.
மறுநாள் காலை சேந்தனாரும் அவர் மனைவியும் நடராஜப் பெருமானை தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலைத் திறந்த தில்லைவாழ் அந்தணர்கள், இறைவன் சந்நிதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் அதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
சேந்தனார் முதல் நாள் நடந்த நிகழ்வுகளைக் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து தில்லைவாழ் அந்தணர்கள் சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றிமகிழ்ந்தனர். அவர்களது பக்தியைப் பலரறியச் செய்தனர்.
அன்றிலிருந்து மார்கழித் திருவாதிரை நாளில்களி செய்து நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது.மார்கழித் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு, ஸ்ரீநடராஜப் பெருமானை தரிசித்து, திருவாதிரைக் களியை உண்பவர்கள் பிறவாப்பேரின்ப நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை!
No comments:
Post a Comment