கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!
மாத்ரி மண்டல நட்சத்திரம்!
நானூறு நட்சத்திரங்கள் கொண்ட மாத்ரி மண்டலத்தில் தீ ஜுவாலை போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஆறு நட்சத்திரங்களான அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி,மேகயந்தி,வர்ஷயந்தி ஆகியவை மிக முக்கியமானவை. இவையே கார்த்திகை மாந்தர். கந்தனை வளர்த்தவர்கள்!
மாத்ரி மண்டலம் என்ற பெயரே மாதர்கள் கொண்ட கூட்டத் தொகுதி என்று குறிப்பிடப்படுவது வியப்பிற்குரியது! சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்த முருகனை கார்த்திகை மாந்தர் அறுவரும் தனித் தனியே ஆறு உருவங்களில் சீராட்டி மகிழ்வித்ததால் அவன் கார்த்திகேயன் என்ற பெயர் பெற்றான் என்று புராணம் கூறுவதை அனைவரும் அறிவோம்!
ரிஷப ராசியில் கார்த்திகை நம் தலைக்கு மேலே தோன்றும் போது சந்திரன் தோன்றும். ஆகவே தான் கார்த்திகைக்குத் தமிழர் கார்த்திகை மாதம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.தமிழரின் தெய்வம் முருகன் என்பதாலும் கார்த்திகை தமிழர் மனதில் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது!
கத்தி போல உள்ளதால் கார்த்திகை என்ற பெயரை இந்த நட்சத்திரம் பெற்றது. ப்ளையாடீஸ் என்று மேலை நாடுகளில் புகழ் பெற்றுள்ள இந்த கார்த்திகை நட்சத்திரம் அக்னி,தீபம் என ஒளி சம்பந்தமான எல்லாவற்றுடனும் புராணத்திலும் விஞ்ஞானத்திலும் தொடர்பு படுத்தப்படும் ஒரு அபூர்வ நட்சத்திரம்!
அறிவியல் வியக்கும் அதி உஷ்ண பகுலா!
ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்களாக உள்ளன என அறிவியல் அறிவிக்கிறது. இந்த அதிக பட்ச உஷ்ணம் பூமி வாழ் மக்களின் ‘மித்ரன்’ என்று வர்ணிக்கப்படும் சூரியனுக்கு எப்படிக் கிடைக்கிறது என்ற காரணத்தை நோக்கினால் அது கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்வதால் தான் என்று தெரிய வருகிறது.
வெறும் கூட்டணியிலேயே சூரியனுக்கே இந்த உஷ்ணத்தைக் கொடுக்கிறது என்றால் கார்த்திகையின் உஷ்ணம் எப்படிப்பட்ட அதி பயங்கரமானதாக இருக்க வேண்டும்? நினைத்து நினைத்து பிரமிக்க வேண்டியது தான்!. சதபத பிராமணம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல, நான்கல்ல, கார்த்திகை பல நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது என்று வியக்கிறது. ஆகவே இதற்கு பகுலா (பல நட்சத்திரம் கொண்டது )என்ற பெயரையும் சூட்டுகிறது.
கார்த்திகையின் அதி தேவதை அக்னி!
இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி (க்ருத்திகா நட்சத்திரம் அக்னிர் தேவதா) என்று தைத்திரீய சம்ஹிதா (நான்காம் காண்டம்) கூறும். அக்னியே ஸ்வாஹா; க்ருத்திகாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (III 1.4.2) கார்த்திகை நட்சத்திரத்தைப் புகழும்!:
81000 சுலோகங்கள் கொண்ட ஸ்கந்த புராணம் தான் 18 புராணங்களிலேயே மிகப் பெரிய புராணம்.
இதில் ஸ்கந்தனின் பெருமை விவரிக்கப்படும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் பெருமையும் விவரிக்கப்படுகிறது. அதன் மர்மமும் விளக்கப்படுகிறது.
இதைப் பற்றி வேதத்திலும் வால்மீகி ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் ஏராளமான குறிப்புகளைக் காணலாம்.வால்மீகி “அந்த ஸ்கந்த கடவுளின் மீது நம்பிக்கை கொண்டோர் அவனுடன் சேர்ந்து இருப்பதை அனுபவிக்க முடியும்” என்று உறுதியாகக் கூறி கார்த்திகேயனின் மகிமையை வியக்கிறார்!
மஹாபாரதம் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் அக்னியின் தோற்றம் மற்றும் மகிமையை விளக்குவதாக ஆரம்பித்து சுப்ரமண்யருடைய உற்பத்தி, வீர அணிவகுப்பு ஆகியவற்றை விளக்கமாகக் கூறுகிறார். மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வத்தில் இருநூற்றிருப்பத்தோராவது அத்தியாயம் தொடங்கி இருநூற்றுமுப்பத்து மூன்றாவது அத்தியாயம் வரை ஸ்கந்த சரித்திரம் இடம் பெறுகிறது.
ஸ்கந்த ஜனனம்!
ஒரு சமயம் அக்னி ஸப்த ரிஷிகளின் பத்தினிகளின் மீது ஆசைப்படுகிறான்.அந்த அக்னியின் மீது ஸ்வாஹா தேவி ஆசைப்படுகிறாள். அவள் அருந்ததியைத் தவிர ஏனைய ஆறு பேரின் திவ்ய உருவத்தை எடுத்துக் கொள்கிறாள்.அருந்ததியின் தவத்தினாலும் அவளது பதிபக்தியினாலும் அவள் உருவத்தை ஸ்வாஹா தேவியால் தரிக்க முடியவில்லை.அக்னியோடு சேர்கிறாள்.
கந்தனின் ஜனனத்தை மஹாபாரதம் “காமமுள்ள ஸ்வாஹா தேவியினால் அந்த ஸ்வர்ணகுண்டமென்னும் தடாகத்தில் பிரதமா திதியில் அக்னியினுடைய வீரியமானது ஆறு தடவை போடப்பட்டது. அந்தக் குண்டத்தில் நழுவி விழுந்த அந்த வீர்யமானது தேஜஸினால் சூழப்பட்ட ஒரு புத்திரனை உண்டுபண்ணியது.பிறகு ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அந்த வீர்யமானது ஸ்கந்தனாயிற்று. அந்த வீர்யத்தில் ஆறுதலைகளுள்ளவரும் பன்னிரெண்டு காதுகளும் கண்களும் கைகளும் பாதங்களுமுள்ளவரும் ஒரு கழுத்தோடும் ஒரு தேகத்தோடும் கூடியவராக குமாரர் தோன்றினார்.” என்று விவரிக்கிறது.
விசுவாமித்திரர் பதிமூன்று மங்கள கர்மங்களைச் செய்வித்து ஸ்கந்தருக்கு நாமகரணம் செய்து வைக்கிறார். இந்திரன் தேவ ஸேனாபதியாக ஸ்கந்தனுக்கு முடி சூட்டி தேவசேனையை திருமணம் செய்விக்கிறார். சிவனின் கட்டளைக்கிணங்க தேவ ஸேனையை அணிவகுத்துத் தலைமை தாங்கிச் சென்ற கந்தன் மகிஷாஸ¤ரனைக் கொல்கிறார்.மாத்ரு கண மாதரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு எல்லா உலகங்களும் பூஜிக்கத் தக்க உயர் நிலையை அருளுகிறார்.
ஸ்வாஹா தேவி எப்போதும் அக்னியுடன் சாஸ்வதமாக சேர்ந்து வஸிக்க தன் விருப்பத்தைத் தெரிவிக்க ஸ்கந்தர் ,”தேவியே! நன்னடையுள்ள அந்தணர்கள் மந்திரங்களால் நன்றாகத் துதிக்கப்பட்டிருக்கிற ஹவ்யமோ கவியமோ எதையும் எடுத்து இன்று முதல் ஸ்வாஹா என்கிற மந்திரத்தை அக்னியில் ஹோமம் செய்து கொடுப்பார்கள். அக்னி பகவான் இவ்வண்ணம் உன்னோடு கூட எப்போதும் வாஸம் செய்வான்” என்று அருளுகிறார்! இவை அனைத்தையும் விரிவாக மஹாபாரதம் விளக்குவதைப் படித்து விட்டு வானத்தை நோக்கினால் பிரமித்துப் போவோம்.
கம்பீரமான கார்த்திகை நட்சத்திரத் தொகுதியில் அக்னி, ஸ்வாஹா மற்றும் தேவசேனை உள்ளிட்ட நட்சத்திரங்களின் ஜொலி ஜொலிப்பு,ஸோமதாரை என்று புராணம் விவரிக்கும் காலக்ஸி, நானூறு நட்சத்திரங்களைக் கொண்ட மாத்ரு மண்டலம்,அதன் மேற்கில் ஸப்த ரிஷிகளில் ஆறு ரிஷிகளின் பத்னிகளான நட்சத்திரங்கள், சுரபி என்னும் தெய்வீகப் பசு, அதன் தென் கிழக்கில் விஸ்வாமித்திர நட்சத்திரம் ஆகியவற்றைப் பார்த்து பிரமிக்கலாம்.
அத்தோடு பிரம்மாண்டமான தேவ ஸேனை அணிவகுப்பை கந்தன் தலைமை தாங்கிச் சென்றார் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் ஜொலிக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அணிவகுப்பாகக் கூட்டம் கூட்டமாக கார்த்திகைக்குப் பின்னால் இருப்பதையும் பார்த்து அதிசயிக்கலாம்.இவற்றின் பல்வேறு அதிசய உருவங்களையும் ஜொலிஜொலிப்பில் உள்ள பல்வேறு தரங்களையும் பார்த்து சுப்ரமண்ய சேனையின் மகிமையை முற்றிலுமாக உணரலாம்!
மயில்வாகனன் முருகன்!
முருகனின் வாகனமான மயிலையும் வானத்தில் கண்டு மகிழலாம். இதைப் பற்றி ஜே.பென்ட்லி என்ற ஆங்கிலேயர் வியந்து, “கார்த்திகேயன் மயிலின் மீது ஏறி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவனே கார்த்திகை நட்சத்திரத்தில் தலைமையாக இருப்பதையும் அவன் பின்னால் அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் தொடர் வரிசையாக அணிவகுப்பதையுமே இது குறிக்கிறது” என்று கூறுகிறார்!
புகழ், ஒளி, கீர்த்தி, காந்தி,ஆயுள் ஆகிய அனைத்தையும் முருகன் அருளுவான் என்ற வேத மற்றும் மஹாபாரத வாசகத்தை மனதில் இருத்தி கார்த்திகை மாந்தரையும் கார்த்திகேயனையும் வானத்தில் பார்த்துத் தொழுது மகிழலாம்!
No comments:
Post a Comment