மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில், பாரதத்திலுள்ள புனித நதிகள் யாவும் கலந்துகொள்கின்றன. இத்திருக்குளத்திலுள்ள இருபது தீர்த்தக்கிணறுகளில் மகத்தன்று புதிய ஊற்றுகள் ஏற்பட்டு, நீராடுபவர்களுக்கு புத்துணர்ச்சியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன.
பௌர்ணமியுடன்கூடிய இந்த மாசிமக நன்னாளில் புனித நீராடியபின் பிதுர்பூஜை செய்து அன்னதானம் அளித்தால், பிதுர்களின் ஆசியுடன் வளமான வாழ்வு கிட்டுமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.
இந்த மாசி மக நீராடல் குடந்தையில் மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள அனைத்து திருத்தலங்களிலும் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும். சில தலங்களில் தெப்போற்சவம் நடைபெறுவதையும் காணலாம்.
இந்த நாளில் கடலில் நீராடுவதும் போற்றப் படுகிறது.
மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால் நீர்நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தியையும் ஏற்படுத்து கிறது. இது இயற்கை தரும் கொடை. அச்சமயத்தில் கடலில் நீராடுவோரின் மனமும் உடலும் ஆரோக்கியத்துடன் திகழ்வதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் கூடும். இதை விஞ்ஞானமும் கூறுகிறது.
அதனால், கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் உள்ள கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு புராணக்கதை ஒன்று சொல்லப்படுகிறது.
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தார். அதனால் கடலரசன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியுடன் திருமால் வைகுண்டம் சென்றுவிட்டதால், "நாம் எப்போது மீண்டும் மகாவிஷ்ணுவைக் காண்பது' என்று கவலைப்பட்டார் சமுத்திரராஜன். இதனையறிந்த மகாலட்சுமி திருமாலைப் பார்க்க, "நான் ஆண்டுக்கு ஒருமுறை கடற்கரைக்கு வந்து தரிசனம் தருகிறேன்' என்று அருளினார்.
அந்த நாள்தான் மாசிமகம் என்கிறது புராணம். அதனால்தான் கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணியில் அருள்புரியும் ஸ்ரீபார்த்த சாரதி கருடவாகனத்தில் புறப்பட்டு, தெற்கு மாட வீதி, துளசிங்கத் தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலைவேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.
இதேபோல் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் மூலவர் தீர்த்தபாலீஸ்வரரும் மாசி மகத்தன்று அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரியுடன் சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தம்பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். மேலும், மயிலை கபாலீஸ்வரர், அம்பாள் ஸ்ரீகற்பகாம்பிகை ஆகியோரும், மயிலையிலுள்ள சிவாலயங்களில் அருள்புரியும் தெய்வங்களும் கடற்கரைக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள்.
நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்று கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம். இங்குள்ள கடலில் நீராடுவது ராமேஸ்வரம் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடுவதற்கு சமம். இங்கு தலசயனப்பெருமாள் கிழக்குமுகம் நோக்கி சயனக் கோலத்தில் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.
புண்டரீக மகரிஷி தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணி கடற்கரைக்கு வந்தார். மலர்க்கூடையை கரையில் வைத்துவிட்டு, கடல்நீரை இறைத்து விட்டால் பெருமாளைக் கண்டுவிடலாம் என்றெண்ணி, கைகளால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். அப்போது, "நாராயணா நாராயணா' என்றபடியே ஸ்ரீமன் நாராயணன் முதியவர் வேடத்தில் அங்கே வந்தார். அவர் புண்டரீக மகரிஷியிடம், ""எனக்கு பசியாக இருக்கிறது. நீங்கள் ஊருக்குள் சென்று ஏதேனும் உணவு வாங்கிவாருங்கள். அதுவரை கடல்நீரை நான் இறைத்துக்கொண்டி ருக்கிறேன்'' என்றார்.
சிறிது நேரத்தில் உணவு வாங்கிவந்த முனிவர் கடல் நீர் உள்வாங்கி யிருப்பதைக் கண்டார். அந்த வயோதிகரைக் காணவில்லை. அந்த சமயத்தில் ஓர் ஒலி கேட்டது. அந்த திசையில் முனிவர் பார்த்தபோது, அங்கே முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரை மலர்கள் அடங்கிய கூடையிருந்தது. அதிலிருந்த மலர்களை தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்டு சயனக் கோலத்தில் சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன். திருமால், தன் திருக்கரங்களால் கடல்நீரைத் தொட்டு இறைத்ததனால் இத்தலம் அர்த்தசேது என்று போற்றப்படுகிறது.
முனிவருக்கு பெருமாள் அருள்புரிந்த நன்னாள் மாசிமகம் என்பதால், இத்தல பெருமாள் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி காண்கிறார். அன்று இக்கடலில் நீராடி, தலசயனப் பெருமாளை தரிசித்தால் சகலபாக்கியங்களும் கிட்டுமென்பது ஐதீகம்.
பொதுவாக மாசிமகத்தன்று கும்ப கோணத்தில் அமைந்துள்ள அமிர்தகுளமான மாமாங்கக் குளத்தில் நீராடுவது சிறப்பு. அதுவும் இந்த வருடம் மகாமகம் என்பதால் மிகவும் போற்றப்படுகிறது. அங்குசெல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெறலாம்.
No comments:
Post a Comment