Thursday, 21 April 2016

சௌபாக்கிய பஞ்சமி (லாப பஞ்சமி)!


சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி. (வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க

தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் சுக்லபட்ச பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி என்றழைக்கப்படுகிறது.

இதனை கட பஞ்சமி என்றும் ஞான பஞ்சமி என்றும் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில் அல்லது முயற்சிகளை இந்நாளில் தொடங்க, நிச்சயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று புதிய கணக்குகளைத் துவங்காதவர்கள் இன்று துவங்குவார்கள்.

மேலும் இந்நாளில் தான் பாண்டவர்கள் 13ஆம் ஆண்டு அஞ்ஞாத வாசத்தை முடித்து விராட தேசத்தை பாதுகாக்க கௌரவர் படை முன் தோன்றினான் என நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை பாண்டவ பஞ்சமி என்றும் வழங்குவர்.


வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க இந்நாளில் ஈசனையும், விக்னேஸ்வரனையும் உபவாசம் இருந்து பூஜிப்பர்.

இந்நாளில் புதிதாக திருமணமானவர்கள், திருமண வாழ்வில் நலமும், வளமும் பெருக வேண்டி தம்பதியாகவோ, அல்லது புதுமணப் பெண் மட்டுமோ அன்னை கௌரியை அவளின் அருள் வேண்டி வழிபடுகிறார்கள்.

பூஜிக்கும் முறை :

அதிகாலையில் துயிலெழுந்து நீராடி பூஜைக்கு அமர வேண்டும். தூய்மையான இடத்தை தேர்வு செய்து அதில் விநாயகர் மற்றும் சிவபெருமானின் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து அழகாக அலங்கரிக்க வேண்டும். பளிச்சிடும் வண்ணங்களில் கோலமிட்டு தீபங்கள் ஏற்றவும்.

அட்சதை, மலர்கள், அருகம்புல் மற்றும் சந்தனம் கொண்டு விநாயகரைப் பூஜிக்க வேண்டும். அதன் பிறகு ஈசனை வெண்ணிற மலர்கள் கொண்டும், வில்வ இலைகள் கொண்டும் பூஜிக்க வேண்டும்.

பால், மற்றும் இயன்ற பழங்களை நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு அன்று முழுவதும் உபவாசம் இருந்து மறுநாள் பாரணையோடு விரதத்தை நிறைவு செய்யலாம்.

அல்லது மாலை வேளையில், சந்திர தரிசனத்துக்குப் பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய நாள் முழுவதும் கணேசரின் துதிகளைக் கூறிக்கொண்டு இருப்பது சிறப்பான பலன்களைத் தரும்.

வாழ்வின் தேக்கநிலை போக்கும் இந்த விரதத்தை மேற்கொண்டு வெற்றிகளை அடைவோமாக!!!

 

No comments:

Post a Comment