Sunday, 17 April 2016

லக்ஷ்மி குபேரர் கோயில்-வண்டலூர்


இந்தியாவில் கொண்டாடப்படும் எண்ணற்ற பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் வைத்திருக்கும் நம் இந்து மதம் அதை கொண்டாடும் முறையிலும் சில முக்கிய சடங்குகளை வைத்துள்ளது. சாதாரண சிறுப் பண்டிகைகளுக்கே அப்படியென்றால் பண்டிகைகளின் தலைவர் தீபாவளிக்கு இல்லாமல் இருக்குமா? தீபாவளிக் கொண்டாடும் காரணங்கள் அனைவரும் அறிந்ததே. மேலும் அவைப்பற்றி நாமும் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதால் அதைப் பற்றி இங்கே விளக்கவில்லை. ஆனால் தீபாவளியன்று நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் ஸ்ரீலக்ஷ்மி குபேரர் பூஜை.

குபேரன் யார்?

 ’விச்ரவசு’ எனும் முனிவர் ஒரு மகா பக்திமான். எந்நேரமும் சிவப்பெருமானை நினைத்து தவம் செய்துக் கொண்டிருப்பார். சில யாகங்கள் செய்ய வேண்டுமென்றால் வேதங்கள் அறிவுறுத்தும்படி திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காக பரத்வாஜ மகரிஷியின் மகளை திருமணம் செய்தார். அவர்களுக்கு ‘வைஸ்ரவணன்’ என்று ஒரு மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போலவே சிறந்த பக்திமானாக இருந்து எந்நேரமும் தவத்தில் இருந்தான்.

ஒரு சமயம் பெற்றோரின் ஆசியுடன் பிரம்மனை நோக்கி தவமிருக்க ஆரம்பித்தான். அவனது தவத்தை ஏற்ற பிரம்மா சகல தேவர்கள் புடை சூழ வந்து வைஸ்ரவணனுக்கு காட்சியளித்து ’என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டார். ஆனால் வைஸ்ரவணனோ ‘தங்களை தரிசித்ததே பெரும் பாக்கியம் இதைவிட வேறென்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்டு திகைக்க செய்தான். இதைக் கண்டு அசந்துப் போன பிரம்மன் இத்தனை பக்தியுடன் இருக்கும் ஒருவனுக்கு தகுந்த பதவி ஏதேனும் கொடுக்க வேண்டும் என விரும்ப அனைத்து தேவர்களும் இதற்கு இசைந்தனர். அப்பொழுது அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக வடக்கு திசைக் காவலராக சகல செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதியாக நியமித்தனர்.

அசுரர்களும் தேவர்களும் பாற்கடல் கடைந்தப் போது அதிலிருந்து தோன்றியவள் மகாலட்சுமி. குபேரனின் சகோதரி எனக் கருதப்படும் மகாலட்சுமி தனதேவதை என்பது நாம் ஏற்கெனவே அறிந்ததே! அதனால் நாம் இவ்விருவரையும் சேர்ந்தே வணங்குகிறோம்.

குபேரனை என்று வழிப்படுவது?

தீபாவளித் திருநாளில் குபேரனை வழிப்படுவது மிகவும் சிறந்தது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் வரும் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களிலும், வியாழக்கிழமையன்று வரும் பூச நட்சத்திர நாட்களிலும் இப்பூஜையை செய்யலாம். தேய்ப்பிறை பிரதமை திதி, மற்றும் சித்தயோகம், அமிர்தயோகம் கூடிய அஷ்டமி, நவமி அல்லாத எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் குபேரனை வழிப்படலாம்.

குபேரன் பிறந்த நட்சத்திரம் - பூசம்
குபேரனுக்குரிய திசை- வடக்கு
குபேரனுக்கு உகந்த கிழமை- வியாழன்

குபேர பூஜை செய்யும் முறை:

ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாள் குபேரனுக்கு மிகவும் உகந்த நாள். இதே நாளில்தான் தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து மேடையமைத்து அதில் விரிப்பின் மீது வாழையிலை விரித்து அதில் நவதானியங்களையும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியே பரப்பி வைத்து அதன் நடுவே லக்ஷ்மி குபேர யந்திரத்தையோ அல்லது படத்தையோ வைத்து சந்தனம் குங்குமம் பூசி, பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். யந்திரத்தின் வலப்பக்கத்தில் கலசத்தில் நீர் நிரப்பி அதில் மஞ்சள் கலந்து மாவிலை வைத்து மலர்கள் சாத்தி வணங்க வேண்டும். சுலோகங்கள் எதுவும் தெரியாதவர்கள் கூட குபேரனின் பெயரையும் மகாலக்ஷ்மியின் பெயரையும் மனதார உச்சரித்தாலேப் போதும். நைவேத்தியமாக ஏலம், லவங்கம் போன்ற வாசனை திரவியங்கள் கலந்த பால் மற்றும் கேசரி செய்து வைக்கலாம்.


குபேர மந்திரம்:

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தன தான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா!

இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் நினைத்தது நடக்கும்.

குபேரன் ஆலயம்:

வளங்களை அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேரருக்கு சென்னை வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக  ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு அருகே இருக்கும் வேங்கட மங்கலம் பெருமாளின் பெயரோடு இருப்பதாலும், ரத்னமங்கலம் எனும் பெயரிலேயே மங்களம் இருப்பது மட்டுமின்றி குபேரனுக்கு உகந்த ரத்தினமும் இருப்பதால் இங்கே கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கே அமாவாசையன்று நாணயங்களால் நாமாகவே பூஜை செய்யலாம். இங்குள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பௌர்ணமியன்று 33 தங்கக் காசுகளால் பூஜை செய்வதும் விசேஷமாக இருக்கிறது.

ஸ்ரீ அரைக்காசு அம்மன்:




புதுக்கோட்டை திருகோகர்ண பிரகாதாம்பாளைப் போல ரத்னமங்களத்திலும் அரைக்காசு அம்மனுக்கு என தனி சன்னதி இருக்கிறது. ஞாபக மறதியாக நாம் கைம்மாற்றி வைத்து காணாமல் போனப் பொருட்கள் திரும்ப கிடைக்க அரைக்காசு அம்மனை வழிப்படுவது வழக்கம். அப்படி பொருள் கிடைத்தவுடன் வீட்டிலேயே வெல்லத்தை பிள்ளையார் போல பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த வெல்ல பிள்ளையாரையே நைவேத்தியமாக உட்கொள்ளலாம்.
குபேரன் திருக்கல்யாணத்தன்று மகாலட்சுமி உருவம் பதித்த டாலர் காணாமல் போக அது திரும்பக் கிடைத்தால் அரைக்காசு அம்மனுக்கு சிலைப் பிரதிஷ்டை செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்பட காணாமல் போன செயின் பெருக்கும்போது குப்பையில் கிடைத்தது. அதை நினைத்து அதிசயித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சிலை செய்யும் ஸ்தபதியும் ஸ்ரீலக்ஷ்மி குபேரர் சன்னதிக்கு வர உடனேப் பேசி முடிவு செய்து பதிமூன்றே நாட்களில் அம்மன் அருளால் ஸ்ரீஅரைக்காசு அம்மனுக்கு சன்னதி கட்டி முடிக்கப்பட்டது.

சகல செல்வங்களையும்  அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி குபேரரை ரத்தினமங்களம் சென்று ஒருமுறை தரிசித்து வரலாமே!

 

No comments:

Post a Comment