Sunday, 17 April 2016

குருவாயூரப்பன்!

குருவாயூரப்பன்

திரும்பியப் பக்கமெல்லாம் ஆறுகள், ஓடைகள் என தண்ணீரும், தென்னை மரங்களும் செழுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக, மனதிற்கு இதமளிக்கின்றன. இவ்வளவு வளங்களுடன் செழிப்பாக இருக்கும் கேரள மாநிலத்தை, கடவுளின் சொந்த நாடு என்றுக் கூறிக்கொள்வதில் அளவிலாத பெருமை அவர்களுக்கு. அது உண்மையிலேயே கடவுளின் நாடோ, இல்லையோ, ஆனால் மகாவிஷ்ணுவே வழிப்பட்ட சிலையை நாமும் வணங்க வேண்டுமென்றால் குளுகுளு கேரளாவிற்குதான் செல்லவேண்டும்.
தேவர்களின் அதிபதி குருவும், காற்றின் அதிபதி வாயுவும், மிக புனித இடமாகக் கருதி மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி அவரே வழிப்பட்ட சிலையை கொண்டுவந்து நிறுவிய இடம் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில், இருக்கும் குருவாயூர். குருவும்,வாயுவும் இணைந்து ஏற்படுத்திய கோயிலாதலால்தான் இவ்வூருக்கு இப்பெயரே வந்தது.

தல வரலாறு:
பிரஜாபதி சுடாப்பா என்பவரும், அவரது மனைவி ப்ரிஸ்னியும் பிரம்மாவை நோக்கி கடும் தவமியற்றி வந்தனர். அவர்கள் முன் தோன்றிய பிரம்மா அவர்களுக்கு மிக அழகான மஹாவிஷ்ணுவின் விக்கிரகத்தை கொடுத்து வணங்கும்படி கூறினார். அதன்படியே மிக சிரத்தையாக வணங்கி வந்த அவர்களின் பக்தியை கண்டு மெச்சிய மஹாவிஷ்ணுவே அவர்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். அதனால் பெருமகிழ்ச்சியடைந்த அந்த தம்பதியர் ஆர்வமிகுதியில் உங்களைப் போலவே ஒரு மகன் எங்களுக்கு வேண்டும் என மூன்று முறைக் கேட்டனர். அதைக் கேட்ட மஹாவிஷ்ணு தொடர்ந்து, ’மூன்று ஜென்மங்களிலும் உங்கள் மகனாக நானே வந்து அவதரிப்பேன். மேலும் அந்த மூன்று ஜென்மங்களிலும் பிரம்மா உங்களுக்கு வழங்கிய இந்த விக்கிரகமும் கிடைக்கப்பெறும்...’ என ஆசி வழங்கினார். அதன்படியே முதல் ஜென்மத்தில், சத்யா யுகத்தில் ம்ஹாவிஷ்ணு ’ப்ரிஸ்னிகர்ப்பா’வாகவும், இரண்டாவது ஜென்மத்தில்  பிரஜாபதி சுடாப்பா காஷ்யபராகவும், பிரிஸ்னி அதிதியாகவும் பிறந்தனர். அவரது மகனாக வாமன அவதாரமெடுத்தார் மஹாவிஷ்ணு. மூன்றாவது ஜென்மமாகிய துவாபரா யுகத்தில் வசுதேவர், தேவகிக்கு மகனாக கிருஷ்ணராக அவதாரமெடுத்தார்.  மூன்று ஜென்மங்களிலும் அந்த விக்கிரகமும் கூடவே இருந்தது. அந்த சிலையை கொண்டு கிருஷ்ணர் துவாரகையில் மிகப்பெரிய கோயிலைக் கட்டினார். பின்னர் துவாபரா யுகம் முடியும் சமயத்தில் தனது பக்தரான உதவாவிடம் குரு மற்றும் வாயுவின் உதவியோடு தென்னிந்தியாவில் ஏதேனும் ஒரு புண்ணிய இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படி குருவும், வாயுவும் தேடிப் பிடித்த இடம்தான் குருவாயூர்.
அங்கே சிலை நிறுவப்படும் அந்த பொன்னானத் தருணத்தில் சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் அங்கு வந்திருந்ததாகவும் அங்கே கோயிலினுள்ளே நிற்க இடமில்லாததால் சற்று தள்ளி நின்று வாழ்த்திய இடம்தான் இன்றைய மாமியூர் கோயில் எனக் கூறப்படுகிறது. குருவாயூர் செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக மாமியூர் சென்று வரவேண்டும் எனவும் ஒரு ஐதீகம் உண்டு.

குருவாயூர் கோயில் அமைப்பு:
இது இந்தியாவில் இருக்கும் முக்கியமான கோயில்களில் ஒன்று என்றாலும் இதன் அமைப்பு மற்ற கோயில்களைப் போல இருக்காது. ஆனால் இதன் கட்டடக் கலை கூத்தம்பலம், ஆனப்பந்தல் போன்றவற்றோடு கேரளக் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திருக்கோயில்:
திருக்கோயில் என்பதுதான் குருவும், வாயுவும் சேர்ந்து சிலையை பிரதிஷ்டை செய்த கர்ப்பகிரகம். இது சதுர வடிவிலும், இதன் கூரை கூம்பு வடிவிலும் இருக்கும். இதன் சுவர்களும், கதவுகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கதவிற்கு முன்னால் இரு துவாரபாலகர்கள் சிலையும் உண்டு. திருக்கோயிலுக்கு முன்னால் இருப்பது நமஸ்கார மண்டபம். இதுவும் சதுர வடிவிலும், இதன் கூரை கூம்பு வடிவிலும் இருக்கும். திருக்கோயிலை சுற்றி சூழ்ந்திருக்கும் சுவர் நல்லம்பலம் அல்லது சுட்டம்பலம் என்றழைக்கப்படும். திருக்கோயிலின் இடதுப்புறம் ’மணிக்கின்னர்’ என்ற பெயர்பெற்ற கோயில் சன்னிதானம் உள்ளது. வலதுப்புறம் கோயில் சமையலறையான ‘மடப்பள்ளி’ உள்ளது. இதற்கு மிக அருகில் ‘சரஸ்வதி ஆரா’ என்று நவராத்திரி சமயத்தில் சரஸ்வதி பூஜை நடைப்பெறும் இடம் இருக்கிறது.
நல்லம்பலத்திற்கு வெளியே கொடிமரம் அமைந்திருக்கிறது. நல்லம்பலத்தின் வெளிச்சுவரையொட்டி கேரளக் கோயில்களின் விசேஷமான ’விளக்குமட்டம்’ (விளக்கு வரிசைகள்) உள்ளது.
கிழக்கு கோபுரத்திலிருந்து நல்லம்பலத்தின் மேற்கு பகுதி வரையிலான இடம் முழுவதும் ஓடு வேய்ந்திருக்கும். இவ்விடம் ’ஆனப்பந்தல்’ அல்லது ’நாடப்புறா’ என்றழைக்கப்படும். இது கோயில் யானைகளை கட்டி வைப்பதற்கும், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்குமான இடம். துலாபாரம் அமைந்திருப்பதும் இங்கேதான்.
கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்திருப்பது ’கூத்தம்பலம்’ எனும் கூத்து நடக்கும் இடம் உள்ளது. வடக்கு பகுதியில் ‘அக்ரசாலை’ எனும் உணவருந்தும் இடம் உள்ளது. இங்கேயே சொற்பொழிவுகளும் நடைப்பெறும்.

தினசரி பூஜை மற்றும் உற்சவங்கள்:
அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், ஆராதனைகள் முடிந்து மதியம் 1.30 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு 4.30 மணியிலிருந்து இரவு 9.15 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிறப்பு பண்டிகையான ‘விளக்கு’ பண்டிகையன்று மட்டும்  ‘திரிபுகா’ நடைப்பெற்ற பிறகு நடைசாத்தப்படும். அதன் பிறகு விசேஷ தினங்களில் பாரம்பரிய நாட்டிய நாடகம் ‘கிருஷ்ணாட்டம்’ நடைப்பெறும்.
தினசரி பூஜைகளைத் தவிர உற்சவங்களும் படுவிமரிசையாக நடைப்பெறும். ஆண்டுதோறும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் 10 நாட்கள் உற்சவம் நடைப்பெறும். 10வது நாள் ‘ஆராட்டு’ முடிந்து உற்சவம் முடிவுறும். இதைத் தவிர சுக்லபட்ச ஏகாதசி, மண்டல பூஜை, விஷு, சரஸ்வதி பூஜை, திருவோணம், அஷ்டமி ரோகிணி... என பல பண்டிகைகள் விமரிசையாக நடைப்பெறும்.

எப்படி செல்வது?:
குருவாயூருக்கு பல ஊர்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சூரிலிருந்து 5 நிமிடத்திற்கொரு பேருந்து உள்ளது. கேரள போக்குவரத்து கழகம் எல்லா பெருநகரங்களிலிருந்தும் பேருந்து வசதி செய்துக்கொடுத்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்செந்தூர், மைசூர், உடுப்பி போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. ரயில் மார்க்கமாக செல்ல வேண்டுமென்றால் கூட நிறைய ரயில்கள் இருக்கின்றன. சென்னை- மங்களூர் வழியில் திருச்சூர் இருப்பதால் இந்த வழியாக செல்லும் ரயில்களிலும் செல்லலாம்.

எங்கே தங்குவது?
குருவாயூர் தேவஸ்தானம் பக்தர்கள் தங்குவதற்கு வேண்டிய வசதிகளை செய்துக் கொடுத்துள்ளது. குருவாயூரில் நிறைய சத்திரங்களும், ஓய்வில்லங்களும் உள்ளன. அதைத் தவிர தனியார் லாட்ஜ்களும் நிறைய உள்ளன.

இத்தனை அழகும், வசதிகளும் நம்மை ‘குருவாயூருக்கு வாருங்கள். அங்கே குழந்தை சிரிப்பதை பாருங்கள்” என்று நம்மை அழைக்கின்றன. நாமும்தான் ஒருமுறை சென்று குழந்தையின் சிரிப்பை கண்டு வருவோமே!

 

No comments:

Post a Comment