அட்சய திருதியை அன்று ஸ்ரீ மகாலெட்சுமி, ஸ்ரீ மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வழிபட்டால் குபேரனுக்கு இணையான பொன்னும், புகழும் வந்து சேரும் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியதாக ஐதீகம். நாட்டில் வறட்சி, வறுமைகள் ஒழியவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் செழிப்புடன் விளங்கவும் அட்சய திருதியை அன்று முன்னோர்கள் தொன்றுதொட்டு பெருமாளை வழிபடுவது மரபு.
அந்த வகையில் கோயில் நகரம், பாஸ்கர சேத்திரம், தென்னக அயோத்தி, பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் மட்டுமே பல நூற்றாண்டுகளாக 12 கருட சேவை நடைபெற்று வருகிறது.
கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவப் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் இந்த தரிசனம் காண கண் ஆயிரம் வேண்டும் என்பார்கள்.
விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு. அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை என்று கருதப்படுகிறது. இந்த திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும். எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம். குசேலன், குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான். எனவே இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.
அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் சாரங்க பாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள், பட்டாபிராமர், சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், வேணு கோபாலசுவாமி, வரதராஜபெருமாள், பட்டாச்சாரியார் தெரு கிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்திலும், இந்த சுவாமிகளுக்கு நேரெதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் ஒரே இடத்தில் எழுந்தருளி 12 கருட சேவை ஒரே நேரத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment