Monday, 23 May 2016

திருமாலிருஞ்சோலை!



Pazhamuthir Cholai

ஞானநட மேபு ரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுகம் ஆறிரண்டு விழியோனே
சூரர்கிளை மாளவென்மற கதிர்வேலா
சோலைமலை மேவிநின்ற பெருமாளே!

மதுரைக்குப் 19கி.மீ தொலைவில் அமைந்த அழகர்கோவில் திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது அழகர்கோவில் திருமாலிருஞ்சோலை விளங்குகின்றார்.
திருச்செந்தூரில் மருகனாகிய முருகன் தயவில் மாமனாகிய திருமால் கோயில் அமைந்துள்ளது. இங்கே மாமன் தயவில் மருகன் கோயில் கொண்டுள்ளார் என்பர். இப்போது அழகர் மலை என்று வழங்கும் இடம் இரண்டு அழர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது. ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள், மற்றும் ஒருவன், 'என்றும் இளையாய் அழகியாய்’ என்று போற்றும் முருகன். சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு. பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது.

Pazhamuthir Cholai

அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை நூபுரகங்கை என்றும் சொல்வர். இதற்குப் போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு என்று நம்பி வணங்கினர்.


Pazhamuthir Cholai


''பலவுடன் வேறு பல்துகிலின் நுடங்கி அகில் சுமந்து.... இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழவோனே" (திருமுருகாற்றுப்படை 296-317) என நக்கீரர் வருணித்துள்ள இயற்கைக்காட்சிகளை இன்றும் இங்கே நாம் கண்டு இன்புறலாம்.

மதுரையிலிருந்து இத்தலத்திற்கு வருவோர் கள்ளழகர் கோயிலுக்கருகில் பஸ்ஸில் வரலாம். கள்ளழகர் கோயிலிருந்து மலைமீது நூபுரகங்கை வரை (2மைல்) செல்ல நல்ல தார்சாலை உள்ளது. அதில் சென்றால் பழமுதிர்சோலை (3 கி.மீ) முருகன் திருக்கோயிலை அடைகின்றோம்.


மலையின் நீளம் கிழக்கு மேற்கில் 16 கி.மீ உள்ளது. எழில்மிகும் இயற்கை - இன்பம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. இத்தலம் இடபகிரி (விருஷபகிரி) எனவும் அழைக்கப்படுகின்றது. இயமன் இத்தலத்தில் இடபமாகிய தரும வடிவுடன் தவமியற்றித் தன் பெயரால் இம்மலை விளங்க வேண்டுமென இறைஞ்சி இறைவனருள் பெற்றதால் இம்மலை இடபகிரி (விருஷபாத்ரி) என்றும் அமைவதாயிற்று.


தொன்மையான தலமாயிருப்பினும் அண்மைக் காலக்கோயிலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுங் கொண்டு இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். கல்லால் ஆகிய வேலுக்கு தனிச்சிறப்பு உள்ளது.


இத்தலத் தீர்த்தமாக நூபுரகங்கை (திருச்சிலம்பாறு) என்ற சுனை உள்ளது. திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும். நவரத்தின ஒளியும் இதில் தெரியும். திருமாலின் (அழகரின்) திருவடியை இச்சுனை வருடிக் கொண்டு பாய்வதால், திருமாலின் திருவடிக்குப் பணிசெய்யும் திருமகளைப் போன்றுள்ளது. இதில் அனைவரது எண்ணங்களும் பூர்த்தியாவதால் இஷ்டசித்தி எனவும் இதனை அழைப்பர்.


சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் இம்மலையில் உள்ள நூபுரகங்கைச் சுனையின் மாதவி மண்டபத்தில் அமர்ந்து சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர். சிலப்பதிகாரத்தில் இந்தக் குன்றத்தில் புண்ணிய சரவணம் என்ற பொய்கை இருந்ததாகவும், அதில் மூழ்குகிறவர்களுக்கு இந்திரன் இயற்றிய வியாகரணமாகிய ஐந்திரத்தில் மிகு புலமை உண்டாகும் என்றும் ஒரு செய்தி வருகிறது. முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் எல்லாம் சரவணப் பொய்கை இருக்கும். அந்த வகையில் இங்கே சரவணம் என்ற பொய்கை இருந்ததென்று தெரிவதனால், முருகனின் திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெளியலாம்.


Pazhamuthir Cholai



'ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர...
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே...’

என்று நூபுரகங்கையையும் சோலை மலையையும் இணைத்து முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

சுட்ட பழம்... சுடாத பழம்!
மலை ஏறி முருகனை தரிசிப்பதோடு கோயிலின் அருகில் இருக்கும் நாவல் மரத்தையும் தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள். ஒளவையாரிடம், ''சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?'' என்று கேட்டு, முருகன் அருளாடல் நடத்தியதும் அப்போது அவன் அமர்ந்திருந்ததும் இந்த நாவல் மரத்தில்தான் என்கிறார்கள்.


நாவல்மரம்:
ஏனைய நாவல் மரங்கள் விநாயக சதுர்த்தியின் போது பழுக்கும். இம்மரமோ ஸ்கந்தசஷ்டியின் போது பழுக்கும் இயல்புடையது என்பர்.


சங்ககாலத்திலும் அருணகிரிநாதர் காலத்திலும் விளங்கிய கோயில் தற்போது இல்லை. இன்று காணப்படும் அண்மைக்காலக் கோயிலே பழமுதிர் சோலையாகத் திகழ்கின்றது. தினமும் காலை 11 மணிக்கு மட்டுமே ஒருகால வழிபாடு நிகழ்கின்றது. ஆனால் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையில் கோயில் திறந்திருக்கும். தீபாராதனை, அர்ச்சனை முதலியவற்றை அடியார்களே செய்யலாம். கந்தசஷ்டி விழாச் சிறப்புடையது. அப்போது லட்சார்ச்சனை நிகழ்கின்றது.


கள்ளழகர் கோயில் நிர்வாகத்திலுள்ள பழமுதிர் சோலைப் பைந்தமிழ் முருகன்ன் கோயில் முருகப் பெருமானிடம் அடியார்களை ஆற்றுப்படுத்திய நக்கீரர் ஆறாவதாகக் காட்டித் தனது முருகாற்றுப் படையை முடிக்கின்றார். அருணகிரிநாதர் இத்தலத்தில் பாடிய 16 திருப்புகழ்ப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.



"அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன்என வாகி அரியென வாகி அரன்என வாகி அவர்மேலாய்;


இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையு மாகிவருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்;


மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்கனி கூரும் வடிவோனே
வனம்உறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர் காமம் உடையோனே;


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர்ச்சோலை மலைமிசை மேவு பெருமாளே".


"சோதி யுணர்கின்ற வாழ்வு சிவம் என்ற
சோகமது தந்து எனையாள்வாய்" -(வாதினையடர்ந்த...)


"வாழுமயில் மீதுவந்து தாணிணைகள் தாழுமென்றன்
மாயவினை தீரஅன்பு புரிவாயே" -(சீலமுளதாயர்...)


"பாகம்வர சேரஅன்பு நீபமலர் சூடுதண்டை
பாதமலர் நாடியென்று பணிவேனோ" -(வீரமதனுல்...)


"ஊமையேனை ஒளிர்வித்துனது முத்திபெற மூலவாசம் வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோகபேத வகை யெட்டுமிதி லொட்டும்வகை இன்று தாராய் -(ஆசைநாலு...)


"உருவிலாத பாழில் வெட்ட வெளியி லாடுநாத நிர்த்த
உனது ஞானபாதபத்மம் உறுவேனோ" -(துடிகொள்தோய்...)


"திகழ்புகழ் கற்றுச் சொற்கள் பயிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றச்
செனனம றுக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய்" -(தலைமயிர்...)

எனவரும் பழமுதிர் சோலைத் திருப்புகழ் அடிகள் அருணகிரிநாதர் இத்தலத்து முருகனிடம் கோரியவற்றை இனிது காட்டும்.

Pazhamuthir Cholai
மாமனாகிய அழகனையும் மருமகனாகிய அழகனையும் தரிசித்துக்கொண்டு,


''ஆரும் இணையில் அழகா, முருகாபந்
தாரணியும் மார்பா. தனிமுதல்வா - காரணிந்து
மேயதிருச் சோலை மலையுறையும் வித்தகநின்
தூயமலர்ப் பாதம் துணை''


என்று   திருமாலிருஞ்சோலையில் அருளும் திருமுருகனைப் போற்றுவோம்.







No comments:

Post a Comment