Friday, 12 August 2016

வரலட்சுமி விரதம்!

வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். 
 
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.  
சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.


உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால்,  இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.


மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


 அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.



விரத அனுஷ்டிக்கும் முறை:


இந்த விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.




அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.


உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.







No comments:

Post a Comment