Thursday, 1 December 2016

விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு!





க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந்தவர் விஸ்வாமித்திரர் என்கிறது விஷ்ணு புராணம். சத்யவதி கர்ப்பவதியாக இருக்கும்போது, பிராமணனைப் போன்ற குணமுடைய குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினார்


ரிஷிகா. ஆனால், சத்யவதியின் மனதில், க்ஷத்திரியனைப் போல் வீரமுள்ள குழந்தைதான் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. முதல் குழந்தையான விஸ்வாமித்திரர் தாயின் க்ஷத்திரிய குல சாயலாகவும், பிராமண குல பண்புடனும் பிறந்தார்.


அவர் தம்பியான ஜமதக்னி போர்க்குணம் நிறைந்த பிராமணனாகவும் க்ஷத்திரியர்களை அழிக்கவும் மனம் கொண்டிருந்தார். விஸ்வாமித்ர முனிவர் க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவராக இருந்தபடியால், அவரிடம் கோபம், வேகம், வேட்கை ஆகியவை இயற்கையாகவே இருந்தன.

ராஜ குலத்தைச் சார்ந்ததால், ரிஷி எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் பெற வேண்டும் என்ற ஆணவம் அவரிடம் நிறைந்திருந்தது.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் புத்திரரான வசிஷ்ட மகரிஷியைப் போல் தானும் படைப்பாற்றல் பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த எண்ணம் கொள்ளாமல், சுயநலத் தேவைகளுக்காக படைப்புச் சக்தியைப் பெற பெரும் முயற்சி கொண்டார்.

அதில் தோல்வியையும் கண்டார். இவர் அஷ்டதிக் பாலகர்களைப் பார்த்தாலும், அவர்களைப் போல் தனக்கே அத்துணை சக்திகளும் வேண்டும் என்றே நினைப்பார்.

விஸ்வாமித்திரருக்கு, தான் வசிஷ்டரைப் போல் பிரம்மரிஷியாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இத்துடன் வசிஷ்ட மகரிஷியே தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. அவரின் க்ஷத்திரிய குல அரச குணத்தால், அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.




விஸ்வாமித்திரை சிறந்த பிரம்மகுல ரிஷியாக மாற்ற, இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும், அறிவில் சிறந்தவளுமான மேனகையை முதலில் அனுப்பி, அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து பெண் சக்தியின் ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தார். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை பந்தத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார்.

தன் சுய அறிவினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்று நினைத்த விஸ்வாமித்திரருக்கு, பிரம்மா பாடம் புகட்ட நினைத்தார். விஸ்வாமித்திரர் முன்னால் தோன்றி, அவர் பிரம்ம ரிஷிதான் என்று கூறியவுடன், அதை பிரம்ம ரிஷியான வசிஷ்டர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று கூறினார். வசிஷ்டர் அப்படித் தன்னை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கிற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார்.


வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து, தன் கணவரிடம் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷிதான் என்று அவர் தம் வாயால் கூறி விடும்படி ஆலோசனை வழங்கினார்.
மகரிஷியும் தன் திருவுளம் திறந்து,

அருந்ததியே! நான் விஸ்வாமித்திரரின் மேல் கொண்ட பேரன்பினாலேயே, அவரை பிரம்ம ரிஷி என்று என் மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார்.


வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் க்ஷத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன.


தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி, மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார்.

விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர், விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரம் விழிப்பு உணர்வு பெற, புருவ மத்தியில் தொட்டு ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். பிரம்மரிஷி என்ற பட்டம், அவருக்கு பெருமையைத் தராமல் பொறுமையைத் தந்து விழிப்பு உணர்வையும் தந்தது.

ஆண் குலத்திற்கே விழிப்பு உணர்வு எனும் மூன்றாம் கண்ணைக் கொடுத்த சக்தியை, தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் கண்டுணர்ந்தார். காயத்ரிதேவியின் தரிசனம், பஞ்சமா பாவத்திலிருந்து அவரை விடுதலையாக்கியதுடன், அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது.


விஸ்வாமித்திர
ர் உன்னதமான மூன்றாம் உணர்வு நிலையில் , அதன் வல்லமையை அனைவரும் உணரும் வண்ணமாக காயத்ரி மந்திரத்தைப் போல் சிறந்த மந்திரம் இல்லை என்று சொல்லும்படியாக உருவாக்கினார். கிருஷ்ண பரமாத்மாவும், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கின்றேன் என்று கீதையில் கூறுகின்றார்.


பாவங்களை நீக்கி, சமநிலைப்படுத்தி, சந்தோஷத்தைக் கொடுத்து சக்தியைப் பெருக்கும் மிகவும் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் எனும் மந்திரத்தை விஸ்வாமித்திரரே இந்த உலகிற்குக் கொடுத்தார் என்று ரிக் வேதம் கூறுகின்றது.

ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர்தான் இயற்றினார்.

விஸ்வாமித்திரரின் வாழ்க்கை, முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளை எழுதியதுடன், லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் பெறுவதின் சாபங்களையும் குறித்து எழுதினார் என்று, மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது.


ராமாயணத்தில் ராமபிரானுக்கும், லட்சுமணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்று போதித்து, 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.



ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதியில்  உள்ளது.

விஸ்வாமித்திரமகரிஷி கோவில்








 

No comments:

Post a Comment