வித்தியாசமான பூஜை முறையைக் கொண்ட பெனர்கட்டா பஸ் நிலையத்தின் அருகில் (குன்றி மணி) மாரி அம்மன்! அங்குள்ள மாரி அம்மன் அற்புதமாக காட்சி தருகிறாள்.
அந்த சன்னிதானத்தின் அருகில் தனியாக ஒரு அம்மன் சிலையை குந்து மணி நிரம்பிய தாம்பாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அனவரவருக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு அந்த அம்மனிடம் மனதில் வேண்டிக் கொண்டு அந்த தாம்பாளத்தில் உள்ள குந்துமணிகளை இரு கை நிறைய எடுத்துக் கொண்டு அந்த அம்மன் மீது அபிஷேகம் செய்வது போல மூன்று முறை போட வேண்டும். அதன் பின் அந்த அம்மனை வணங்கி விட்டு வந்தால் எண்ணியது நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கிராமங்கள் சிலவற்றில் குந்துமணியை அம்மனின் கண்களாக பாவித்து அதை பூஜிப்பார்களாம். அம்மனின் சிவந்த முகத்தில் உள்ள கரிய கண்களை பிரதிபலிக்கிறதாம் அந்த கருப்பு நிற விழி போன்ற பாகம். அதனால்தான் அந்த காலங்களில் செய்யப்பட்ட தெய்வ பொம்மைகளின் முகத்தில் கண்களாக குந்துமணிகளைப் பதிப்பார்களாம். அதன் ஐதீகம் என்ன என்றால் அந்த பொம்மையை வைத்து உள்ளவர்கள் வீட்டில் அம்மனே துணையாக விழித்திருந்து காப்பாற்றி வருவாராம்.
குருவாயூர் ஆலயத்திலேயே கிருஷ்ணரை வேண்டிக் கொண்டு அங்கு ஒரு உருளியில் வைக்கப்பட்டு உள்ள குந்துமணிகளை கையில் எடுத்துக் கொண்டு அவற்றை அதில் மீண்டும் போட வேண்டுமாம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய் நொடிகள் தீரவும் இந்த விதமான பிராத்தனை நடைபெறுகிறதாம். மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் வரும் காலத்தில் சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் குந்துமணிக்கு முக்கியத்துவம் வந்ததின் பின்னணிக் கதை ஒன்றைக் கூறுகிறார்கள். ஒருமுறை கிருஷ்ணரின் பரம பக்தையான ஏழை ஒருவள் அவள் வீட்டில் இருந்த குந்துமணி மரத்தில் இருந்து எடுத்த குந்துமணிகளை விற்பனை செய்ய கடைவீதிக்கு சென்றாள். வழியில் அவளுக்கு கிருஷ்ணரைக் காண ஆசை வந்துவிட அந்த ஆலயத்துக்கு சென்றாள். அப்போது அங்கு அரசனின் யானையை அழைத்து வந்த சேவகர்களின் தள்ளுமுள்ளினால் அவள் கீழே விழ அவள் பையில் இருந்து அனைத்து குந்துமணிகளும் மண்ணில் விழுந்தன.
அதன் மீது காலை வைத்து விட்ட யானை மதம் பிடித்து அங்கிருந்த அனைத்தையும் நாசம் செய்தது. அதே நேரத்தில் அந்த நாட்டு மன்னனின் கனவில் வந்த கிருஷ்ணர் தனது பக்தைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பரிகாரமாக இனி அவர் ஆலயத்தில் அந்த ஏழைப் பெண்மணியின் நினைவாக குந்துமணிக்கும் மகத்துவம் இருக்கும் என்று கூறியதினால் கிருஷ்ண பூஜையில் குந்துமணி பூஜையும் முக்கியமானதாக ஆயிற்றாம்.
No comments:
Post a Comment