Friday, 23 December 2016

பத்மாவதி தாயார் தெப்பத் திருவிழா!


தெப்போற்சவம்!

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆனி  மாத பௌர்ணமியை ஒட்டி, ஏகாதசி முதல் பௌர்ணமி வரை ஐந்து நாட்கள் பத்ம சரோவரம் திருக்குளத்தில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.
 
இந்த தெப்போற்சவத்தில் முதல் நாள் ருக்மணி சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணரும்,
 
2ம் நாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ சுந்தர ராஜ பெருமாளும்,
 
அடுத்த 3  நாட்களும் பத்மாவதி தாயார் மட்டும் சர்வாலங்கார  பூஷிதை யாக தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து அருள் மழை பொழிவார்.
 
 
தோட்டோத்ஸவம்! 
 
பிரதி வெள்ளிக்கிழமை திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு   தோட்டோத்ஸவம் நடைபெறும். ஆலயத்திலிருந்து 100 அடி தூரத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டம் தோழப்பா பூங்கா என்றும் , வெள்ளிக்கிழமை தோட்டம் எனவும்  அழைக்கப்படும்.

அந்த பூந்தோட்டத்தின் மையத்தில் 16 தூண்களோடு ஓர் வசந்த மண்டபம் இருக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை மதியம் தாயாரின் திருமஞ்சனம் மற்றும் நைவேத்தியம் இங்கு தான் நடைபெறும்.

திருமஞ்சனத்திற்கு பின்னர் தாயார் சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு புறப்படுவார்.


 
வசந்தோத்ஸவம்!


சித்திரைக் கத்திரி துவங்கி வைகாசி மாதம் பிறந்த பிறகு வருடந்தோறும் வசந்தோத்ஸவத் திருவிழா, திருச்சானூர் பத்மாவதித் தாயார் திருக்கோயிலில் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  இந்த உத்ஸவம்  பௌர்ணமியன்று நிறைவு பெறும்.

வசந்தோத்ஸவத் திருவிழா யொட்டி, கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் உற்ஸவமூர்த்தியான பத்மாவதி தாயார் எழுந்தருள, 

அவருக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், கஸ்தூரி, குங்குமப்பூ, தேன், கோரோஜனம், குங்கலியம், சந்தனம், பலவித நறுமண மலர்கள், பழங்கள், மூலிகை கலந்த வெந்நீர் ஆகியவற்றால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டு,

சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறும்.

தாயாருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படும்.
பிறகு இரவில் பத்மாவதித் தாயார் யானை வாகனத்தில் மாடவீதிகளில் திருவீதியுலா வந்து திருக்காட்சி தந்து அருள் பாலிப்பார். இதையடுத்து தாயாருக்கு தீபாராதனை காட்டப்படும் அதேவேளையில் மூலவருக்கும் பூஜைகள் நடைபெறும்.

பௌர்ணமி அன்று தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளி அனைவருக்கும் ஆசி வழங்குவார்!



ஆண்டிற்கு 3 முறை தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளுகிறாள்!

வசந்தோத்ஸவத்தின் இறுதி நாளான வைகாசி மாத  பௌர்ணமி அன்றும், வரலக்ஷ்மி விரத நாள் அன்றும், கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தின் கருட வாகன வீதி உலா அன்றும்  தாயார் தங்கத்  தேரில் எழுந்தருளி ஆசி வழங்குவார். 

ஓம் நமோ வெங்கடேசாய!

 

No comments:

Post a Comment