Tuesday, 8 March 2016

திருமண வாழ்வருளும் திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி!


 
திருவாவடுதுறை ஆதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டதும்; காவிரி தென்கரைத் தலங்களில் 61-ஆவது தலமாகத் திகழ் வதும்; மூவரால் பாடல்பெற்றதும்; சேந்தனார் அருளிய திருவிசைப்பா, அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்று விளங்குகின்ற தலமிது. திருமால் சக்ராயுதம் பெற்றதும் இத்தலத்தில்தான். சிறந்த திருமணத்தலமாகவும் விளங்குகிறது- திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வீழியழகர், தேஜிநீவனேஸ்வரர்;
இறைவி: சுந்தரகுஜாம்பிகை (அழகிய மாமுலையம்மை);
விநாயகர்: படிக்காசு விநாயகர்;
திருவுலாமூர்த்தி: கல்யாணசுந்தரர், மாப்பிள்ளை சுவாமி.


இத்தலம் பூகைலாசம், கல்யாண புரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, ஷண்மங்கள ஸ்தலம், சுவேதகானனம், ஆகாச நகரம், பனசாரணியம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் என பத்து திருநாமங்களைக் கொண்டது. திருஞானசம்பந்தர்-14, திருநாவுக்கரசர்-8, சுந்தரர்-1 என 23 தேவாரத் திருப்பதிகங்களால் பாடல்பெற்ற தலமாக சிறந்து விளங்குகிறது. இத்தலத்தில் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு திருமுறைகளில் பெரிதும் குறிக்கப்பெற்றுள்ளது.

சக்கரம் பெற்ற திருமால்


திருக்கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதி சமேதராய் சிவகணங்கள் புடைசூழ, நந்திதேவர் கையில் பொற்பிரம்பு தாங்கி வழிவகுத்துப் பணிசெய்ய,  இரு பக்கத்திலும் வேதங்களும் ஆகமங்களும் ஒலிக்க, தேவ துந்துபிகள் முழங்க திருக்கொலு வீற்றிருந்தார்.

அப்போது திருமால் பெருமான்முன் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ""பெருமானே, என்னுடைய சக்கரம் மிகவும் வலிமை குன்றி யிருக்கிறது. ஆதலால் முன்னே சலந்தரனை வதைத்தருளிய சக்கரத்தை எனக்கு அனுக்கிரகிக்கவேண்டும்'' என்றார். அதற்குப் பரமன், ""காவிரிக்குத் தெற்கேயுள்ள தேஜிநீவனம் என்னும் தலத்தையடைந்து தவம் மேற்கொள்வீர்'' என்று திருவருள் புரிந்தார்.

உடனே திருமால் விடைபெற்று இத்தலத்தை அடைந்தார். தாமரைத் தடாகம் இயற்றக்கருதி காவிரி நதியை அழைத்தார். காவிரி நதியானது திருவலஞ்சுழிக்கு மேற்கே பிரிந்து அரிசொலாறு (அரிசில்) என்ற பெயரோடு திருவீழிமிழலையின் தென்திசையை அணுகியது. பின்பு வடக்கு நோக்கி சுவாமி சந்நிதியில் க்ஷீ ரநதியோடு (முட்டையாறு) சங்கமமாகி கிழக்கே சென்று கடலில் கலந்தது. விஷ்ணு ஓர் தடாகம் (பத்மதீர்த்தம்) இயற்றிச் செந்தாமரைகளை உண்டாக்கினார். பதினாறு சிங்கங்கள் தாங்குகின்ற விண்ணிழி விமானத்தைக் கொணர்ந்து, பரமனை அதில் எழுந்தருள்வித்தார். அனுதினமும் தீர்த்தப்புஷ்கரணியிலும், அரிசொல் நதியிலும் நீராடி, விபூதி உருத்திராக்க தாரணியாய் விதிப்படி ஆயிரம் தாமரைகளால் பூஜித்து வந்தார்.


இப்படி அனுதினமும் ஆயிரம் தாமரைகளால் பேராயிரம் சொல்லி அர்ச்சனை செய்துவந்தார். ஒருநாள் ஒரு பூ குறைந்தது. மறுபடியும் எண்ணிப்பார்த்தார். பின்னும் குறையக் கண்டார். இது இறைவன் திருவருள் என்றுணர்ந்தார். தாமரை மலருக்கு பதிலாக தன் கண்மலரை (அதாவது தனது வலது கண்ணைப் பறித்து) ஈசனின் திருவடியில் சமர்ப்பித்தார். அப்பொழுது சிவபெருமான் திருமால்முன் தோன்றி, சலந்தரனை வதைத்த சக்ராயுதத்தை அனுக்கிரகம் செய்தார். பின்பு திருமால் சிலகாலம் இங்கு தங்கி, தன் பெயரால் ஓர் தீர்த்தம் உண்டாக்கி (விஷ்ணு தீர்த்தம்) ஈசனை வழிபட்டு தன்னுலகு எய்தினார்.

யாகத்தீயில் தோன்றிய அம்பிகை


திருவீழிமிழலையில் காத்யாயனர் என்ற ரிஷி இருந்தார். அவர் மனைவியின் பெயர் சுமங்கலை. அவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை. ஆதலால் தீர்த்தக் குளக்கரையில் தவச்சாலை அமைத்து, தினமும் முறைப்படி அழகிய மாமுலையம்மையையும் வீழிநாதரையும் தம் பத்தினியோடு வழிபட்டு அருந்தவம் புரிந்து வேள்விகளைச் செய்தார்.

ஒருநாள் யாகத்தீயில் அம்பிகையானவள் இடக்கரத்தில் அன்னபாத்திரமும், வலக்கரத்தில் அன்னம் படைக்கும் அகப்பையோடும் அன்னபூரணியாகக் காட்சியளித்து, ""முனிவரே, நீர் வேண்டும் வரம் யாது?'' என்று கேட்டாள். ""தாயே, நீயே எங்களுக்கு மகளாகப் பிறக்கவேண்டும். உன்னை நாங்கள் பரமேஸ்வரனுக்கு மணம் செய்து பார்க்கவேண்டும்'' என்று கேட்டார்கள். அவளும் அவ்வாறே வரம் தந்தாள்.

சில ஆண்டுகளுக்குப்பின்... சுமங்கலை நீராடச் சென்றபோது ஒரு பெரிய நீலோத்பவ மலரில் குழந்தை ஒன்று இருப்பதைப் பார்த்தாள். தேவியே குழந்தையாக வந்திருக்கிறாள் என்றறிந்து அதை அன்புடன் எடுத்துச் சென்றாள். குழந்தைக்கு காத்யாயினி என்று பெயரிட்டனர்.

சிவபக்தியும் அறிவும் ஆற்றலும் கொண்டு அவள் வளர்ந்தாள். காத்யாயினிக்கு மணப்பருவம் வந்தது. அவளுக்குத் திருமணம் செய்ய நினைத் தனர் தம்பதியர். காத்யாயனர் பரமனைக் குறித்து தவம்புரிந்தார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற
அவர்முன் தோன்றினார் சிவபெருமான்.

இறைவன் திருவடிகளில் வணங்கி, ""பெருமானே! இக்கன்னிகையை தேவரீர் மணக்கோலத்தோடு வந்து திருமணங்கொண்டருள வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.

பரமன், ""சித்திரை மாதத்து மக நட்சத்திரத் திருநாளில் நாம் வந்து உம்மகளை மணப்போம்'' என்று அருள்புரிந்தார். அவ்வாறே சிவபெருமான் வருகை தர, முனிவரும் அவர் மனைவியும் மகள் காத்யாயினியை சிவபெருமானுக்கு கன்னிகாதானாம் செய்துகொடுத்தனர் என்கிறது திருவீழிமிழலை தலபுராணம்.

திருமணம் கைகூட...


இறைவனைத் திருமணம் புரிய உமையம்மை தவமிருந்து தம் எண்ணம் ஈடேறப் பெற்ற தலமாதலால், திருமணமாகாத பெண்கள் இத்தலத்திற்கு வந்து கல்யாணசுந்தரருக்கு மாலை அணிவித்து சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒரு மண்டலம் (48 நாட்கள்) காலையில் எழுது நீராடி,

"தேவேந் திராணி நமஸ்துப்யம்
தேவேந்திரப் பிரிய பாமினி
விவாகபாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம் ச தேஹிமே
பதிம்தேஹி சுதம்தேஹி
சௌபாக்யம் தேஹி மேசுபெ
சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
தேஹிமே சிவசுந்தரி
காத்யாயினி மகாமாயே
மகாயோகிந்தீஷ்வரி
நந்தகோப சுதம் தேவம்
பதிம்மே குருதே நமஹ நமஹ'

என்ற சுலோகத்தை பக்தியோடு ஓதிவந்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்று இத்தல மான்மியம் கூறுகிறது.

நல்ல கணவனை அடைய வேண்டுமென்று நினைப்பவர்கள் காத்யாயினி விரதம் மேற்கொள்ளவேண்டும். திருவீழிமிழலையில் காத்யாயினியாக வத்த உமாதேவி நோற்ற நோன்பு இது. இந்த விரதத்திற்குத் தலைவியும் அவளே! சீதாதேவி காத்யாயினி விரதமிருந்தே ராமனை கணவனாக அடையப்பெற்றாள் என்கிறது துளசி ராமாயணம். ருக்மிணி இந்த விரதமிருந்து கிருஷ்ணனை கணவனாகப் பெற்றாள் என்கிறது பாகவதம்.

சம்பந்தரும் அப்பரும் படிக்காசு பெற்றது


திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பல தலங்களையும் பணிந்து பாடி, பின் திருவீழிமிழலையை அடைந்து இறைவனைப் பணிந்து, இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். ஐந்நூற்று மறையவர்களுக்கும் மற்ற அடியார்களுக்கும் அமுதூட்டி ஆவன செய்தார்கள். இருவரும் ஆலயத்துக்கு வடபுறத்திலுள்ள திருமடங்களில் தங்கி காலந்தோறும் பரமனைப் பணிந்த வண்ணம் பலநாள் தங்கியிருந்தனர்.

 

சிலகாலம் சென்றதும் அருவிலைக் காலமாகிய பஞ்சகாலம் வந்தது. அப்போது ஞானசம்பந்தரும் அப்பரும், "இக்காலத்தால் அடியார்களுக்கு கவலை வருமோ' என்று வருந்தினர். அச்சமயம் வீழிமிழலைப் பெருமான் இருவருடைய கனவிலும் தோன்றி, "உங்களை வழிபடும் அடியவர்களுக்காக, தினந்தோறும் உங்கள் இருவருக்கும் ஒவ்வொரு பொற்காசு தருகின்றோம். அதுகொண்டு அமு தூட்டி கவலை நீங்குக. பஞ்சம் அகன்றதும் அக்காசு பெறுதல் இலையாகும்' என்றருளினார்.

கனவு நீங்கி, பெருமான் கருணையை வியந்த அவர்கள் வைகறையில் ஆலயத்துக்குச் சென்றனர். கிழக்கு பீடத்தில் ஒரு பொற்காசு காணப்பட்டது. அதை சம்பந்தர் எடுத்துக்கொண்டார். வலம் வரும்போது மேற்கு பீடத்தில் ஒரு காசு இருப் பதைக் கண்டு, அதை அப்பர் பெருமான் எடுத்துக்கொண்டார். அமுதாக்குவாரிடத்தில் அக்காசு களைக் கொடுத்து, வேண்டிய பண்டங்களை வாங்கி அமுதமையுங்கள் என்றார்கள். அவர்களும் வேண்டியவற்றை வாங்கி இரண்டு பொழுதும் திருவமுது செய்தார்கள்.

சில நாட்கள் சென்றன. நாவுக்கரசர் திருமடத்தில் அடியவர்கள் சரியான நேரத்திற்கு உணவருந்துவதையும், தமது திருமடத்தில் காலதாமதமாக அடியவர்கள் உணவருந்துவதையும் ஞானசம்பந்தர் உணர்ந்து, பாகுகர்களை நோக்கி, ""ஏன் காலதாமதம்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ""தேவரீர் பெறுங்காசை கடைவீதிக்குக் கொண்டுசென்றால், நாவுக்கரசர் பெறும் காசுக்கு உடனே கொடுக்கிறார்கள். நம்முடைய காசுக்கு வட்டங் கேட்டு தீர்த்து, பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். அதனால்தான் காலதாமதம்'' என்று கூறினர்.

மறுதினம் ஆலயத்துக்குச் சென்ற சம்பந்தர்,

"வாசிதீரவே காசுநல்குவீர்
மாசின் மிழலையீர், ஏசலில்லையே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே'

என்னும் திருப்பதிகத்தைப் பாடி நற்காசு பெற்றார். அதுமுதல் காலத்தோடு அமுதமைத்து பலகாலம் அமுதூட்டினார்கள். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளைபொருட்கள் மிகுந்தன. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் பலதலங்களை வணங்கத் திருவுளம்கொண்டு, மிழலைப்பெருமானிடத்தில் அருள்பெற்று பிரியாவிடை பெற்றுச்சென்றனர் என்று தலபுராணம் சொல்கின்றது. இதுபோல மேலும் பல சம்பவங்கள் உள்ளன.

கோவில் அமைப்பு


கிழக்கு நோக்கிய ஆலயத்தின் எதிரே விஷ்ணு தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் வலப்புறம், இத்தலத்திற்குப் பெருமைகூட்டும் வௌவால் நந்தி மண்டபம் எனப்படும் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. நடுவில் தூண் இல்லாமல், சுண்ணாம்புக் கலவைகொண்டு ஒட்டிய இம்மண்டபத்தின் அமைப்பை வியக்காத வர் இல்லை. சித்திரை மாதத்திலே இறைவனது திருக்கல்யாண விழா இம்மண்டபத்தில்தான் நிகழும்.

இரண்டாம் கோபுரத்தைக் கடந்தவுடன் வெளித் திருச்சுற்றில் கிழக்கே, சம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடமும்; மேற்கே திருநாவுக்கரசருக்கு படிக்காசு வழங்கிய பலிபீடமும்; அருகில் படிக்காசு விநாயகரையும், அப்பர், திருஞானசம்பந்தர் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.

மூன்றாம் கோபுரவாயிலைக் கடந்தவுடன் முதற்பிராகாரம் உள்ளது. தெற்குப் பிராகாரத்தில் தலவிநாயகரும்; மேற்கே சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி முதலியோரும்; வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். ஈசான்ய திசையில் விளங்கும் சபையில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தை வலம் வரும்போது விண்ணிழி விமானத்தை நன்கு காணலாம். செப்புத்தகடுகள் வேயப்பெற்று தங்கக் கலசத்தோடு தனியழகுடன் திகழ்வது தனிச்சிறப்பு.

சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் வீற்றிருக்கும் தலங்கள் பல உண்டு. அங்கு மூலவரோ
உற்சவரோ மட்டுமே கல்யாண கோலத்தில் இருப்பர். மூலமூர்த்தி, உற்சவமூர்த்தி என இருவருமே திருமணக் கோலத்தில் விளங்கும் தலம் திருவீழிமிழலை ஒன்றே. அதனால்தான் திருவீழிமிழலை நாதரை அப்பர் பெருமான் "நித்தம் மணவாளன் என நிற்கின்றான்' என்று பாடுகிறார்.

திருமணத்தில் இரண்டு கால்களை முக்கியமாகச் சொல்வர். அரசனுடைய ஆணையை சாட்சியாக வைத்து திருமணம் நடக்கிறது என்ற பொருளில் ஒரு மரக் கொம்பினை நடுவர். மணமேடையில் இருக்கும் அந்தக் கொம்பு அரசாணைக்கால் எனப்படும். திருவீழிமிழலை கர்ப்பக்கிரக வாயிலில் அரசாணைக்கால் இருக் கிறது. இந்த அமைப்பு வேறெங்கும் இல்லாத விசேஷ அமைப்பாகும்.

இங்கு மண்டபத்தின் வடக்கில், தெற்குநோக்கி அமைந்துள்ள கல்யாண சபையில் மாப்பிள்ளை சுவாமி இருக்கிறார். இப்படி சபாமூர்த்தியாக- கல்யாணசுந்தராக இருப்பது இங்கு மட்டும்தான். அதேமண்டபப் பகுதியில் பந்தக்கால் என்ற தூணும் இருக்கிறது. இதையடுத்து பிட்சாடனர், காலசம்ஹாரமூர்த்தியும் அருள்புரிகின்றனர்.

மாடக்கோவில் வடிவிலுள்ள சுவாமி சந்நிதிக் குச் செல்லும்போது, பன்னிரண்டு ராசியைக் குறிக்கும் 12 படிக்கட்டுகள்மீது ஏறி, இறங்கும் போது நவகிரகங்களைக் குறிக்கின்ற ஒன்பது படிக்கட்டுகள் வழியாக வரும் அமைப்பில் காணப்படுகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் பாதாள நந்தி அருள்புரிகிறார்.

சுவாமி சந்நிதிக்கு அருகில், தியாகேசர் கையில் சக்ராயுதத்துடன் எழுந்தருளியிருப்பதை தரிசித்துவிட்டு, வடக்குப் பிராகாரத்திலுள்ள வாயில் வழியாக கிழக்கு நோக்கி அமைந்துள்ள அம்பாள் சந்நிதியை அடையலாம். அருள்மிகு சுந்தரகுஜாம்பிகையின் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திகழ்வதைக் காணலாம்.

வியப்புமிகு வாழ்வருளும் வீழிநாதரை வழிபடுவோம். வெற்றிமீது வெற்றி குவிப்போம். ஓம் நமச்சிவாய!

ஆலயத் தொடர்புக்கு: எஸ். பிச்சைமணி சிவாச்சாரியார், அலைபேசி: 75980 07177, டி.கே. மகாலிங்க சிவாச்சாரியார், அலைபேசி: 97100 79277. ஆலயத் தொலைபேசி எண்: 04366- 273050. காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில், பூந்தோட்டம் ரயில் நிலையத்திற்கு மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம், திருவாரூரி லிருந்து பஸ் வசதி உள்ளது.



 

No comments:

Post a Comment