Saturday, 26 March 2016

திருமால்பூர் அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர்!

 

ஒரே நாளில் எல்லா சிவன் கோவிலுக்கும் போக வேண்டுமா?

வேலூர் மாவட்டத்திலுள்ள திருமால்பூரில் சிவன், மணிகண்டீஸ்வரராக கோவில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்டால் எல்லா சிவன் கோவில்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:
ஒருசமயம் கயிலாயத்தில் பேசிக் கொண்டிருந்த பார்வதி, விளையாட்டாக சிவனின் கண்களை மூடினாள். சிவனின் கண்களே சூரிய, சந்திரராக இருப்பதால் உலகம் இருண்டது. அந்த ஒரு கண நேரத்தில் உயிர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. தன்னால் உலக மக்கள் சிரமப்பட்டதைக் கண்ட பார்வதி தன்னால் அந்த பாவம் தீர சிவனின் அனுமதியுடன் லிங்க பூஜை செய்ய பூலோகம் புறப்பட்டாள். பூலோகத்தில் பாலாற்றங்கரையில் இருந்த வில்வ மரத்தடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள். அங்கும் சிவன் தன் திருவிளையாடலை நடத்தினார்.

தன் தலையில் இருந்த கங்கையை பாலாற்றில் பெருகி ஓடச் செய்தார். வெள்ளம் சூழ்ந்ததால் பார்வதி, மணல் லிங்கத்தைப் பாதுகாக்க தன் கைகளால் அணைத்தாள். சகோதரரான திருமாலை உதவிக்கு அழைத்தாள். திருமால் வெள்ளத்தை தடுத்து நிறுத்தினார்.இதன் பின் பார்வதி சிவபூஜையை நிறைவேற்றினாள். இத்தலத்தில் திருமால் ஈசனிடம் சுதர்சன சக்கரம் பெற்றதாக காஞ்சிப்புராணம் கூறுகிறது.

நின்ற நிலையில் நந்தி:
ராவணன் இங்கு வந்த போது நந்தியை வணங்காமல் சிவலிங்கத்தை தரிசிக்க முயன்றான். கோபமடைந்த நந்தி அவனைத் தடுத்தது. உடனே, ராவணன் ஆவேசமுடன், "நீ வானர முகத்தை அடைவாய்,'' என நந்தியை சபித்தான். நந்தியும் "ராவணா! என் முகத்தை குரங்காக்கிய உனக்கு, ஒரு குரங்கால் தான் அழிவு வரும்,'' என்று சபித்தார். வானர முகம் பெற்ற நந்தி, பிரகார வாசலில் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். கோவிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. அருகில் விநாயகர், ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

மூலவருக்கு எதிரில் திருமால் சிவனை வணங்கிய நிலையில் இருக்கிறார். சித்திரை நட்சத்திரத்தினருக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது. அம்பிகை அஞ்சனாட்சி இங்கு அஷ்டலட்சுமி பீடத்தில் வீற்றிருக்கிறாள். பவுர்ணமியன்று இவளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.

சடாரி தீர்த்தம்:
முதலாம் பராந்தக சோழன் கட்டிய இக்கோவில் 1500 ஆண்டுக்கு முந்தையது. பராந்தகனின் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இங்கு வழிபட்டால் எல்லா சிவன் கோவில்களையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும். திருமால் இங்கு வந்து பூஜை செய்ததால், இங்கு பக்தர்களுக்கு சடாரி சாத்தி, தீர்த்தம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பிடம்: காஞ்சிபுரத்தில் இருந்து 12 கி.மீ., அரக்கோணத்தில் இருந்து 15 கி.மீ.,

திறக்கும் நேரம்: காலை 7.00- பகல் 12.00 மணி, மாலை 4.30- இரவு 8.30 மணி.
அலைபேசி: 90952 22708

No comments:

Post a Comment