Friday, 18 March 2016

கேதார கௌரி விரதம்!

கணவன், மனைவி ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக இணைபிரியாது வாழ வரம் தரும் விரதம் 

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் - கேதார கௌரி விரதம்

ஆண்டு தோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஸ்ண பட்சத்து சதுர்த்தசியீறாக (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும்.
கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்சனையுள்ளவர்கள் இவ்விரதத்தினனை அனுஷ்டிபதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபீட்சமான வாழ்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இவ் விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுட்டிக்கின்றனர். விரதம் ஆரம்பமான நாளிலிருந்து இருபத்தொரு இழைகளைக் கொண்ட  நூலில் நாள்தோறும் ஒவ்வொரு முடிச்சுகளாக இடப்பட்டு, இறுதி நாளன்று அந்நூலை கோயில் குருக்களைக் கொண்டு  ஆண்கள் தமது வலது கையிலும், பெண்கள் தமது இடதுகையிலும் அணிந்து கொள்வர்.
பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானதுசக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.
சிவனின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் பல இருந்த போதிலும் கேதார கௌரி விரதம் பலவகையிலும் சிறப்புடைய விரதமாகக் கொள்ளப்படுகின்றது. பக்தர்கள் இவ்விரதத்தினை என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
இதனை விட சர்வலோக மாதாவாகிய பார்வதி தேவியே இந்நோன்பினை முதன் முதலில் அனுஷ்டித்து பரம்பொருளின் இடது பாகத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும், இவ் விரதத்திற்கு வழங்கப்படும் அடுத்த சிறப்பாகும். ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயது வேறுபாடோ இன்றி, வாழ்க்கையின் எந் நிலையில் இருப்போரும் இவ் நோன்பினை தமக்கு வேண்டிய வரங்களை வேண்டி அனுஷ்டித்து இக, பர இன்பத்தினைப் பெற்று இன்புற்று வாழ வழி செய்கின்றது. இத்தகைய சிறப்பு பெற்ற"கேதார கௌரி விரதம்' பற்றி ஓர் புராண வரலாறு உண்டு.
கைலயங்கிரியின் சிகரத்தில் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில்  உமதேவி  சமேதராய் விளங்கும் பரமசிவன் பக்த கோடிகள் தரிசிக்கும் பொருட்டு தேவசபையில் வீற்றிருக்கின்றார். அங்கே தேவவாத்தியங்கள் முழங்க கிருதாசி, மேனகை முதலிய தேவமாதர்கள் நாட்டியம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நடன ஸ்திரீகளில் சவுந்தர்யம் மிக்கவளாகிய அரம்பையானவள் அற்புதமான நடன விசேடங்களை நடித்துக்காட்டுகிறாள்.

அப்போது அந்தரங்க பக்தராகிய பிருங்கி மகரிஷி பக்தியோடு விசித்திரமான விகட நாட்டியம் ஒன்றை ஆடிக் காட்டுகிறார். பார்வதியும் அங்கே இருக்கின்றாள். தேவர்கள் ஆனந்தத்தால் சிரித்து மகிழ்கின்றார்கள். பார்வதக்குகை அச் சிரிப்பொலியால் கலகலவென எதிரொலிக்கின்றது. பரமசிவனும் பிருங்கியின் நாட்டியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்கிறார். பரமசிவன் அனுக்கிரகமும் பிருங்கி மகரிஷிக்குக் கிடைக்கிறது. அதைக் கண்டு சபையிலுள்ளோர் பிருங்கி மகரிஷியை கௌரவித்து பாராட்டுகிறார்கள். 
இவ்வேளை பிரம்மா, விஷ்ணு, தெய்வேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அட்டதிக்குப் பாலகர்களும், முனிவர்களும், பதினெண்ணாயிரம் ரிஷிகள் என்போரும் இருவரையும் மூன்று தடவை பிரதர்சனம் செய்து வணங்கிச் சென்றனர்.
ஆனால்; அந்த நேரத்தில் பிருங்கி மகரிஷி வண்டின் உருவம்பெற்று,  பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து  பயபக்தியோடு  வணங்கினார். (வண்டின் உருவம் பெற்றதால் இம் முனிவர் "பிருங்கி முனிகள்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்). பிருங்கி என்றால் வண்டு.
பிருங்கி ரிஷியின் இச்செய்கையைக் கண்டு கோபமுற்ற பார்வதிதேவி, பரமேஸ்வரனிடம் காரணம் கேட்க, பரமேஸ்வரனும் அர்த்தபுஷ்டியான ஒரு புன்முறுவலுடன் பின்வருமாறு கூறினார். தேவி! பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மாறாக மோட்சத்தை நாடுபவர். மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் உன்னை வணங்காது மோட்சத்தை நல்கும் என்னை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே எனக்கூற, இதனைக் கேள்வியுற்ற லோகமாத மேலும் கோபமுற்றவளாக எனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் உங்கள் பக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாது அவ்வாறான சக்தியைக் கொடுக்கும் என்னை ஏளனம் செய்தாய்.
ஆதலால் "நிற்க முடியாமல் போகக் கடவாய்' என முனிவருக்கு சாபம் கொடுத்தார். நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார். இந்நிலையில் என் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றை சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம் என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கி தனது ஆச்சிரமத்தை அடைந்தார்.
இதனைக் கண்ட லோகமாதாவுக்கு மேலும் கோபம் உண்டாகின்றது. பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் மற்றவர்கள் முன்பு என்னை அவமதித்த உங்களுடன் இனி நான் வாழப் போவதில்லை எனக் கூறி கைலையை விட்டு நீங்கிப் பூலோகத்துக்கு வருகிறாள். வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனத்தில் ஓர் விருட்சத்தின் அடியில் அமர்ந்திருக்கிறாள்.
ஆனால் ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியின் திருப்பாதங்கள் அவ்வனத்தில் பட்டதும், மரஞ் செடி, கொடிகள் எல்லாம் புத்துயிர் பெற்று தளிர்த்தன. மல்லிகை, முல்லை, மந்தாரை, பாரிஜாதம் போன்ற செடிகள் பூத்துக் குலுங்கியதுடன் அவற்றின் நறுமணம் வனத்தின் நாற்றிசையும் வீசுவதைக் கண்ட வால்மீகி மஹாரிஷி; தனது ஞானக் கண்ணால் தனது ஆச்சிரமம் அமைந்துள்ள வனத்தில் பரமேஸ்வரி எழுந்தருளி உள்ளதைக் கண்டார்.

முனிவர் பார்வதி தேவி எழுந்தருளியுள்ள வில்வமரத்தடிக்கு வந்து, ஆச்சரியத்துடன் தேவியை நோக்கி மும் மூர்த்திகளிலும் முதற் பொருளே! லோக மாதாவே! முக்கண்ணரின் தேவியே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவியே! தாங்கள் பூலோகம் வந்து சிறியோனின் பர்னசாலை அமைந்துள்ள வனத்தில் எழுந்தருளி இருப்பதற்கு யான் என்ன தவம் செய்தேனோ எனக் கூறி, அன்னையை மெய்சிலிர்க்க வணங்கி, தாயே! தாங்கள் பூலோகம் வந்ததற்கான காரணத்தை அடியேன் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே? என வினாவி மீண்டும் வணங்கி நின்றார்.

அதற்கு பார்வதி தேவி "பிருங்கி முனிவரின் அலட்சியத்தால் கோபமுற்ற நான் பிரியக் கூடாத என் நாதனை விட்டுப் பிரிந்து மிகவும் நீண்ட தூரம் வந்து விட்டேன்” என தனது தவறை உணர்ந்து கவலையுடன் கூறினார்.

வால்மீகி முனிவர்
 பரமேஸ்வரியை தனது ஆச்சிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருக்கையில் அமரச் செய்து தினமும் வணங்கி வந்தார். இவ்வேளை பார்வதிதேவியானவள் வால்மீகி முனிவரை நோக்கி எனது அறிவீனத்தால் என் சுவாமியைப் பிரிந்து இங்கே (தற்போது தென் இந்தியாவில் உள்ள மாங்காட்டு அம்மன் ஆலயம்) வந்து விட்டேன். எனவே இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத ஒரு விரதத்தினை அனுஷ்டித்து இறைவனை மீண்டும் அடைந்து ஆறுதல் அடைய விரும்புகின்றேன். எனவே, அவ்வாறான விரதம் இருப்பின் கூறும்படி கேட்டார். அதற்கு வால்மீகி பின்வருமாறு கூறினார்.

தாயே! இவ்வுலகில் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அதனை மெய்யன்புடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்தால் விரத முடிவில் பரமேஸ்வரனின் அருள் பூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் எனக் கூறி, அத்தகைய சிறப்புப் பெற்றதும் யாராலும் இதுவரை அனுஷ்டிக்கப்படாததுமான விரதம் "கேதார கௌரி விரதம்" எனக் கூறி இவ்விரதத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விரத நியதிகளை பின்வருமாறு கூறுகின்றார்.
புரட்டாதி மாதம் சுக்கிலபட்ச தசமி தொடக்கம் ஐப்பசி மாதத்துக் கிருஷ்ண பட்சத்துத் தீபாவளித் திருநாளான அமாவாசை வரை 21 நாள்கள் பிரதி தினமும் நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆலமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து 21 வாழைப்பழம், 21 பாக்கு, 21 மஞ்சள், 21 அதிரசம், நோன்பு நூல் என்பவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடல் வேண்டும் என்று கூறினார். சிவனை மனதில் தியானம் செய்து விதிப்படி வணங்கியதால் 21 ஆம் நாள் அம்பிகையின் விரதத்தில் மகிழ்ந்து அம்பாளின் முன் தேவ கணங்கள் புடைசூழ ரிஷபவாகனத்தில் பூலோகத்தில் அம்பிகையின் முன் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் தேவி? எனக் கேட்டார். அப்போது "இமைப் பொழுதும் உமைப் பிரியாத வரம் வேண்டும் சுவாமி" என்றார். தந்தோம் தேவி என தனது இடது பாகத்தை ஈஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வர மூர்த்தம் பெற்று கைலாயம் சென்றார். இறைவி இவ் விரதத்தை அனுஷ்டித்தமையால் ஓர் உயிரும் ஓர் உடலுமாகஇறைவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் என புராணங்கள் கூறுகின்றன.
இவ்விரத முடிவில் 21 இழையினால் ஆன காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக் கையிலும் முழங்கையிற்கும் தோள்பட்டைக்கும் இடையில் கட்டுதல் வேண்டும். மேலும் முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார். இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது.
இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை. இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று, அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார். எனவே நாமும் இவ் அரிய நோன்பினை நோற்று பரம் பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!'
 
கேதாரகௌரி விரதம அனுட்டிக்கும் முறை:
கேதாரகௌரி விரதம் ஆலயத்தில் அனுஷ்டிப்பவர்கள் கேதாரகௌரி விரத ஆரம்பதினத்திலன்று கௌரி அம்பிகைசமேத கேதீஸ்வரநாதரின் சன்னிதானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கும்பத்தின் முன்பதாக அமர்ந்திருந்து பூசனை வழிபாட்டிற்குரிய வலதுகையில் ஞானவிரலாகிய மோதிரவிரலில் தர்ப்பைப் பவித்திரம் அணிந்து சிவாச்சாரியர் மூலம் உங்கள் பிறந்த நட்சத்திரம் பெயர் ஆகியவற்றைக் கூறி குடும்பத்தவர் அனைவரது நன்மைகளுக்காகவும் விரத பூஜைகளை நடாத்துவதாகச் சங்கற்பம் செய்து ஸ்ரீ வரசித்தி விநாகர் வழிபாட்டுடன் ஆரம்பித்தல் அவசியமாகும்.

விரத தினங்களிலே பகலில் உணவு தூக்கம் ஆகியவற்றைத் தவிர்த்து, பழச்சாறு பால், நீர்மோர் ஆகியவற்றைமடடுமே அருந்தி தெய்வசிநதனையுடன் கழித்து, மாலையில் ஆலயத்தில் கௌரி மீனாட்சி சமேதரான கேதீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பாக நடைபெறும் அபிஷேக ஆராதனைகளிலும், அர்த்தநாரீஸ்வரராக இறைவனுக்கு நடைபெறும் அர்சனை வழிபாடுகளிலும் கலந்துகொள்வதுடன், கும்பத்தில் 21 தினங்களாக பூஜையில் வைக்கப்பட்டுள்ள, இருபத்தொரு இழைகளினால் உருவாக்கப்பெற்றுள்ள நோன்புக்கயிற்றில் இருக்கும் 21 முடிச்சுக்களுக்குமுரிய (கிரந்தி பூஜை) சிறப்பு மந்திரங்களை குரு மூலம் உபதேசமாகக் காதினால் கேட்டு அதனை திரும்ப உங்கள் வாயினால் பக்தியுடன் உச்சரித்து அதன்பின்னர் சிவலிங்கப்பெருமானை சிவலிங்காஷ்டக ஸ்தோத்திரத்துடன் கையில் பூவும் நீரும் ஏந்தி பிரதட்சிணம்செய்து கும்பத்துக்கு மலர்சொரிந்து வழிபடுவது அவசியமாகும்.

இன்றியமையாத காரணங்களினால் தினமும் வரமுடியாவிடின் இயன்ற தினங்களில் வந்து தவறவிட்ட பிரதட்சிண நமஸ்காரங்களையும் குறைவின்றி நிறைவேற்றிப் பூர்த்தி செய்வது அவசியமாகும். இறுதி நாளன்று பழைய நோன்புக்கயிற்றினை நீக்கிப் புதிய நோன்புக்கயிற்றினை கேதாரிகௌரி ரட்சைக் காப்பாக ஆண்கள் குருமூலம் வலது கையிலும், பெண்கள் குருமூலம் அல்லது கணவர் மூலம் அல்லது சுமங்கலிகள் மூலம் இடது கையில் அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். அன்றையதினம் பூரணமான உபவாசமாக இருந்து மறுநாள் பாரணம் செய்வது மிகவும் உத்தமம்.

ஒருசிலர் ஆரம்பதினத்தில் வந்து சங்கல்பம் செய்து விரதத்தைத் தொடங்கிப் பின் இறுதி மூன்று தினங்களில் அனைத்து பிரதட்சிண நமஸ்காரங்களையும் செய்து முடித்து குருவழிபாட்டுடன் நோன்புக் கயிறு வாங்கி அணிவர். பழைய காப்புக் கயிறை நீர் நிலைகளில் போடவும். பெண்களுக்கு இறுதி நாளில் ஆலயத்திற்கு வந்து பூர்த்தி செய்ய இயலாது, மாத விலக்கினால் தடங்கல் ஏற்பட்டால் அசுத்தமான மூன்று தினங்களும் ஒருவேளை உணவுடன் விரதமாக இருந்து நான்காம் நாள் மங்கள ஸ்நானம் செய்து ஆலயத்தில் வந்து பிரதட்சண நமஸ்காரங்களை நிறைவு செய்து காப்பு அணியலாம். இதற்காக இன்னொரு அமாவாசை வரும் வரை காத்திருப்பது அவசியமில்லை. 
இவ்விரதத்தை ஏனைய ஒருசில விரதங்களைப்போல இத்தனைவருடகாலம் மட்டுமே அனுஷ்டிக்கவேண்டுமென்ற நியதி கிடையாது. தொடர்ந்து அனுஷ்டிக்கும்போது வயோதிபத்தினால் தளர்ச்சியடைந்தவர்களும் நோயுற்று உடல் நலிவடைந்வர்களும் காலையிலேயே பக்தியுடன் பூஜைவழிபாடுகளை நிறைவேற்றி உச்சிப்பொழுதில் பால் பழம் அதிரசம் பலகாரங்களை உட்கொள்வதும் தவறல்ல.
 
ஆலயத்திற்குசெல்ல இயலாது இருப்பவர்கள்; அல்லது ஆலயம் இல்லாத ஊரில் வசிப்பவர்கள்:
புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள், வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்கள் வைத்து, தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். இவ்வாறு கௌதம முனிவர் விரதமஹிமையை உலக மாதாவாகிய கௌரிதேவிக்கு உபதேசம் செய்ய, அதைக்கேட்டு அன்னை கேதாரேஸ்வரப்பெருமானை நினைந்து தவமிருந்து வழிபட, இறைவன் காட்சிகொடுத்து தேவிக்குத் தனது இடப்பாகத்தைக் கொடுத்து தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரனாகி “உமையொருபாகன்” என்னும் சிறப்புத் திருநாமத்தைப் பெற்றார் என்பது வரலாறு. 
தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும்; தம்பதிகள் சேமமாக இருத்தலும், பிணிநீங்கலும், வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும், கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
 
      [கௌரிக் காப்புத் தோத்திரம்]
காப்பு
முன்னின்று செய்யுள் முறையாய்ப் புனைவதற்கு
என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய்
சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும்
எக்குற்றமும் வாராமற்கா.


வேண்டுதற் கூறு
காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மாள் தாயாரே

காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே

காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன்

எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய்

பண்ணும் வினையாவும் பனிபோலப் போக்கிடுவாய்

உண்ணும் உணவாக உயிரினுக் குயிராக

என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய்

காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன்

காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய்

சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே

அரியை உடையவளே அம்மா காளிதாயே

கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே

அசுரக் குணம் யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே

சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய்

பரனை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய்

அரனை நினைத்தல்லோ அம்மாநீ நோன்பிருந்தாய்

சங்கரனை எண்ணீயல்லோ சங்கரிநீ நோன்பிருந்தாய்

ஐங்கரனைப் பெற்றவளே அன்றுநீ நோன்பிருந்தாய்

விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்

அம்மா உமை அணைத்தே அருள்மாரி பொளிந்தானே

வகையாற்றுப் படலமிதை வழிவழியாக் காட்டிடுவீர்

நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய்

காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஓட்டிவிடு

நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு

வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு

காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே

காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே

நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா

வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா

நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா

அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா

பிள்ளை அற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா

பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே

நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா

கல்வி சிறப்பதற்குத் கலைமகளே வாருமம்மா

செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா

வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா

பாட்டுடைத் தலைவியரே பராசக்தி தாயவளே!

ஏட்டுடைத் தலைவியரே எல்லாம்மிகு வல்லபையே

காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா

பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள்

நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா

காளமகா தேவியரே காசினிக்கு வித்தவளே

வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே

எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே

காசினியில் வேற்றுமையை கணபொழுதே மாற்றிவிட்டால்

ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏந்துபுகழ் தேவியளே

காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும்

ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும்

இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும்

நம்பி அணிவோர்க்கு ந்ல்லதெல்லாம் பெருகிவரும்

நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும்

சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே

குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கௌரியம்மா

காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று

ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன்

நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில்

பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன்

காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன்

ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன்

காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன்

ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன்

தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே

காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி

சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை

இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு

பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு

சித்தியெல்லாந்தருவாள் சீர்பெருகு கௌரியவள்

முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வுமுண்டு

எச்சகத்தி லோர்களெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர்

சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே

அச்சக்தி எல்லாம் அருள்வாள் கௌரியவள்

கௌரிக் காப்பதனைக் காலம் தவறாமல்

முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர

ஞானம் ஓங்கிவர ந்ல்லறிவு துலங்கிவர

தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே

காளியாய் வந்தமர்ந்த கௌரியே காப்பறுளும்
ஓம் சக்தி ஓம்
திருச்சிற்றம்பலம்


இவ்விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தியாகும். கணவன்-மனைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்தத் துதியை  வில்வம், தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும் செய்து, திங்கள்கிழமை, பிரதோஷ, பௌர்ணமி, கேதார கௌரி விரத தினங்களில் இத்துதியை பாராயணம் செய்து வர காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.


சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய
கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய

க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய
ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய

நம:சிவாயை ச நம:சிவாய 
விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய
மந்தார மாலா கலிதாலகாயை

கபால மாலாங்கித கந்தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய
அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய
காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய
ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய

சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய
ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம்
யோ பக்த்யா ஸ மான்யோ
புவி தீர்கஜீவீ  ப்ராப்னோதி
ஸெளபாக்ய மனந்தகாலம்.

மேற்கண்ட அர்த்தநாரீஸ்வர துதி மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது.  கணவன்-மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது. இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையேமன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் பலமாக உண்டாக்குவார்.



 

 
 

No comments:

Post a Comment