Friday, 18 March 2016

அழகும், ஐஸ்வர்யமும் தரும் ரம்பா திரிதியை!

 
 
முற்காலத்தில் பொன் வைத்துப் பெண் எடுக்க வேண்டும் என்றும் பொன்னைப் பூட்டிப் பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்றும் சொல் வழக்கைக் கொண்டு வந்தார்கள்.  பெண்களை மகிழ்விக்கும் பொன்னை அணிந்து கொண்டு தேவி அருளைப் பெறச் செய்யும். அந்தத் தங்கத் திருநாள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமாவாசைக்குப் பிறகு மூன்றாம் நாள் வருகிறது. இந்த நாள் தாயை வணங்கி மகிழ்வித்து, ஆசி பெறும் நாளாகவும் அறிந்து அதனை முறைப்படி செய்ய வேண்டும். ரம்பா திருதியை எனப்படும் இந்தத் திருநாள் எப்படி வந்தது?
தேவசபையில் அழகியர் நடனம்:

 
ஒரு சமயம் இந்திரனது அவையில் மனைவி இந்திராணியுடன் தேவேந்திரனும் அமர்ந்திருக்க, தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர், சில மணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இந்த ஆட்டத்தின்போது, மூன்று அழகிகளுக்கும் மனதில் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு சுழன்று ஆடிக் கொண்டிருக்க தேவேந்திரன் பலே பிரமாதம்... நன்றாக சுழன்று ஆடுங்கள் என்று கைதட்டினான். இந்திரன் தன்னுடைய ஆட்டத்தை மட்டுமே பாராட்டுகிறான் என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்ட அழகிகள் மூவரும் அசுரத்தனமாக சுழன்று ஆடத் தொடங்கினர். அடுத்த சில நிமிடங்களில், ரம்பையின் பிறைச்சந்திரனும், நெற்றிப் பொட்டும் கழன்று கீழே விழுந்தது. ஆட்டத்தை நிறுத்த ரம்பையைப் பார்த்து, மற்றவர்கள் க்ளுக் என்ற ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்தனர். கிம்புருவும், நந்தியாரும் மத்தளத்தை நிறுத்தி விட, மகரிஷிகளும் தேவர்களும் கொல் லென்று சிரித்து விட தேவலோக முதல் அழகி பட்டம் பெற்ற ரம்பை அவமானத்தால் கூனிக் குறுகி கீழே விழுந்து தெறித்த தனது மணிகளை எடுத்துக் கொண்டு, தன் அறையை நோக்கி ஓடினாள். அன்று இரவு முழுவதும் வெளியில் வராமல் அறைக்குள் முடங்கிக் கிடந்தவள் காலையில் அரசவைக்குள் தனியாக உலவிக் கொண்டிருந்த இந்திரனைச் சந்தித்தாள்.

 
இந்திரனின் உபதேசம்: 
 
நேற்று அவையில் மூவரும் ஆடிக் கொண்டிருந்த சமயம் எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டது? என்று கண்ணீருடன் இந்திரனைப் பார்த்துக் கேட்டாள் ரம்பை. அதற்கு இந்திரன், பெண்கள் பொன்னகை அணிகிறார்களோ இல்லையோ பொறுமை என்னும் நகையை அணிந்து பெருமை கொள்ளுதல் வேண்டும், நீங்கள் மூவரும் பரத நாட்டியக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியவர்கள். பரதத்தையும் - ஐம்பதங்களையும் தாண்டி, ஒரு கேலிக் கூத்தாகவே ஆடி விட்டீர்கள். பிரம்ம தேவனின் தர்மபத்தினி கலைவாணி பார்த்துக் கொண்டிருந்தாள். பொறுக்க முடியாமல் உனது அணிகலனைக் கழற்றி விட்டாள். உன் அழகிப் பட்டமும் கையை விட்டுப் போய் விட்டது. இன்னும் சில காலங்களுக்கு பொறுமையுடன் காத்திரு என்றான். அவன் வார்த்தையில் சமாதானம் அடையாத ரம்பை, இதற்குச் சரியான தீர்வைக் கூறும்படி கேட்டாள்.

தேவருலகத்தில் கலையைத் தெய்வக் குற்றம் போல் செய்து விட்ட உனக்கு அந்தப் பார்வதி தேவிதான் வழி காட்ட வேண்டும். பூவுலகில் அம்பிகை பார்வதி தேவி பரமனைக் குறித்துத் தவம் செய்வதற்காக கவுரி அன்னையாக அவதாரம் எடுத்து ஒரு மகிழமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். நீ அந்த தேவியைக் கண்டு வணங்கி, விரத வழிபாடு செய்து சரணடைந்தால், இழந்ததைப் பெறுவாய் என்று உபதேசித்து அனுப்பினான்.

இந்திரனின் உபதேச வார்த்தைகளில் மகிழ்ந்த ரம்பை உடனடியாக பூவுலகத்திற்குப் புறப்பட்டாள். இதென்ன ஆச்சர்யம். பூமி எங்கும் ஒளிமயமாய் இருக்கிறது என்று எண்ணியபோது பிறகுதான் நினைவுக்கு வந்தது  அது கார்த்திகை மாதம். தீப வழிபாடு செய்கின்ற தினம் என்று. அதிலும் மிகுந்த ஒளியோடு காணப்பட்ட ஓரிடத்தைக் கண்டு அங்கே சென்றபோது, அன்னை பார்வதி தேவி கவுரி அன்னையாக சிவஜெபம் செய்து வருவதைக் கண்டு மகிழ்ந்தாள்.


ரம்பை செய்த கவுரி விரத பூஜை: 
 
 
அம்பிகை கவுரி தேவியை வணங்கி விட்டு, கலசத்தில் ஆவாகனம் செய்து மஞ்சளால் பிரதிமை செய்து, அலங்கரித்து முறையாக விரதமிருந்து பூஜை நடத்தினாள். மங்களகரமான பொருட்களோடு மஞ்சளால் சிலை செய்து வழிபட்டதால், இது கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாள், திந் திரிணீ கவுரி விரதம் எனப்படுகிறது. ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த கவுரி தேவி, மறுநாள் காலை உதயகாலத்தில் அழகன் முருகனைக் (கார்த்திகேயனை) மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாகக் காட்சி தந்தாள்.
  
 ரம்பையே. நீ வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்றதும், தன் அழகிப் பட்டம் திரும்ப வந்து சேர வேண்டும், அழகுடன் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ரம்பை கேட்டபடியே தேவலோக அழகிப் பட்டம் திரும்பப் பெற்றிட ஆசி வழங்கிய பின், பொன்னும், மணிகளும் அளித்து வசீகரமான முக அழகையும் கொடுத்து வாழ்த்தி விட்டு இன்றுமுதல் இந்தத் திருதியை தினம் ரம்பா திருதியை என்று உன் பெயரால் பெண்கள் கொண்டாடக்கூடிய தங்கத் திருநாளாக ஆகட்டும் என்று அறிவித்தாள். இதுவே ரம்பா திருதியை உருவான திருக்கதை.
 
வடதேசத்தில் ரம்பா திருதியா என்ற பெயரில் இனிப்பு வகைகளுடன் படையலிடப்பட்டு, பொன்னகை வாங்கி பூஜை செய்து அணிந்துகொள்ளும் தினமாக ஒருசாரர் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் ரம்பைக்கு, தெய்வத்தன்மையை கவுரி அன்னை அருள் செய்து உள்ளதால் பெண்கள் அம்பிகையுடன் ரம்பையையும் தேவிரூபமாகவே வழிபட்டு வருகின்றனர். ரம்பையை வழிபடும்போது, எட்டு அரம்பையர்களாகிய மன்மதா, புஷ்பதந்தா, சம்மோகனா, சித்ரலேகா, சவுந்தர்யா, ரமா நேகா, மஞ்சுளா ஆகியவர்களையும் வழிபட வேண்டும். இவர்களைச் சுற்றிலும்; நான்கு வாசல்கள், நான்கு வகை வாசனை மலர்களைக் கொடுக்கும் தோட்டங்கள் அமைந்திருக்க, கிழக்கில் முல்லை மலர்களைக் கொடுக்கும் தோட்டங்கள் அமைந்திருக்க, கிழக்கில் முல்லை மலர், மேற்கில் பத்மமலர், வடக்கில் அசோகம், தெற்கில் நீலோத்பல மலர்கள் பூத்துக் குலுங்கிட, பூஞ்சிற்பக் கூடம் போன்று காட்சி தருகின்றன.


பெண்களின் தங்கத்திருநாள்: 
 
 
முதல் நாள் திந்திரிணீ கவுரி விரதம் இருந்து அம்பிகையை கலசத்தில் எழுந்தருளச் செய்து வழிபட்டு, மறுநாள் காலையில் கவுரி தேவியை,

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ கவுரி பிரசோதயாத்


என்ற காயத்ரி மந்திரத்தை மூன்று முறை சொல்லி, பெண்கள் சேர்ந்து, மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.

கவுரியே உனக்கு நமஸ்காரம்
கந்தனின் தாயே நமஸ்காரம்
காளினி நீயே நமஸ்காரம்
பொன்னைத் தருவாய் நமஸ்காரம்
பொலிவையும் அருள்வாய் நமஸ்காரம்
பூஜைகள் ஏற்பாய் நமஸ்காரம்
ஜெய ஜெய தேவி ஜெயசக்தி ஜெயம்


- என பாடி மகிழ்ந்திடுவோம்.


கோயில் வழிபாடுகள்:
 
 
நம் தேசத்தில் கவுரி தேவியின் கோயில்கள், பார்வதி, அம்பிகை, மகாலட்சுமி சன்னதிகளில் ரம்பா திருதியை அன்று விசேட தரிசனங்களைச் செய்து வழிபட்டு வரலாம். குறிப்பாக ரம்பா திருதியை தொடர்புடைய கோயில்களாக கேரளாவில் சேர்த்தலையில் ராஜ கோபுரத்துடன் கூடிய கார்த்தியாயினி கவுரி தேவி, திருவாரூர் மாவட்டத்தில் தில்லையாடி, காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் சன்னதி, தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை கார்த்தியாயனி கோயில், கர்நாடகாவில் மகாலட்சுமி கோயில், தேனி மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கார்த்தியாயினி, கேரளத்து ஆலப்புழா சாலையில் விசேஷ சன்னதி மும்பை நெருன் 18 அடி உயர கார்த்திகாயினி ரூபம். தென்சென்னையில் குன்றத்தூர், சென்னை - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய இடங்களில், விசேட அலங்கார தரிசன சேவை செய்யலாம்.


வழிபாட்டுப் பலன்கள்: 
 
 
பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும். புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும். அன்னை கவுரிதேவி காட்சி தந்து ஆசீர்வாதம் செய்த படியால், தாயை வணங்கித் தெய்வமாக வழிபடுவதால் நமக்கு மகதைச்வர்யங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று இந்த பூஜா விதியில் சொல்லப்பட்டுள்ளது.  ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம் என்ற தங்கம் சேர்க்கும் துதியை படித்து சப்தமுகீ என்னும் ருத்ராட்சத்தை வழிபடுவோருக்கு பொன் பொருள் சேர்கின்ற அதிர்ஷ்டயோகமும் உண்டாகும்.
 
 
 
 

No comments:

Post a Comment