தல வரலாறு: சிவன் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரது கண்களை தேவி வேடிக்கையாக பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. ஏனெனில் சூரியனும், சந்திரனும் சிவனின் கண்களாகும். அதன் பின் சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளி தந்து உயிர்களைக் காப்பாற்றினார். உயிர்களுக்குத் தீங்கிழைத்த பாவம் தீர தேவி பூலோகம் சென்று தவம் செய்ய ஆணையிட்டார்.
அம்பிகையும் பூலோகத்தில் பத்ரிகாசிரமம் என்னும் தலத்தில் காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்தாள். "காத்யாயினி' என்று பெயர் பெற்றாள். யோக தண்டம், ஜபமாலை ஆகியவற்றை தந்தையிடம் பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள். வரும் வழியில் காசியில் மழை வளம் இன்றி இருப்பதைக் கண்டாள். அங்குள்ள மக்களின் பசிப்பிணி தீர அன்னபூரணியாக மாறி உணவு அளித்தாள்.
அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த காத்யாயினி, ஒரு மாமரத்தின் அடியில் மணலில் லிங்கம் வடித்து வழிபட்டாள். காவலர்களாகத் தன் தோழியரை நியமித்தாள். அம்பிகையின் தவத்தைச் சோதிக்க விரும்பிய சிவன் தன் திருமுடியில் இருந்து கங்கையை பெருகச் செய்தார். நீர் பெருகி வரவே, சிவலிங்கம் உடைந்து விடுமோ என்ற பயத்தில் "கம்ப... கம்ப' என்று அம்பிகை அலறினாள். இதற்கு "பயம்...பயம்' என்று பொருள். இதன் காரணமாக இங்கு ஓடும் நதி கம்பா நதி என்றானது.
அவளது தோழியரில் ஒருத்தி காளி வடிவெடுத்து தன் கையில் இருந்த கபாலத்திற்குள் வெள்ள நீரை அடக்கினாள். ஆனாலும் சிவன் விடவில்லை. அந்த கபாலத்தில் இருந்தும் வெள்ள நீரை பெருக்கெடுக்கச் செய்தார். இதைக் கண்டு பயந்த அம்பிகை மணல் லிங்கத்தைப் பாதுகாக்கத் தன் கைகளால் சிவலிங்கத்தை அணைத்தாள்.
அம்பிகையின் பக்தி கண்டு மகிழ்ந்த சிவன் நேரில் தோன்றி அவளை ஆட்கொண்டார். இவரே காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். அம்பிகை ஏலவார் குழலி என்று அழைக்கப் படுகிறாள்.
பங்குனி திருவிழா: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இக்கோவிலில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. விழாவின் பத்தாம் நாளான பங்குனி உத்திரத்தன்று ஏலவார்குழலி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடத்தப்படும். விநாயகர், முருகன், ஏகாம்பரேஸ்வரர், ஏலவார்குழலி ஆகியோர் ராஜவீதியில் உலா வருவர். சுவாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் சுமங்கலிகள் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆண்டுதோறும் காஞ்சிப்பெரியவர் இதில் விருப்பமுடன் பங்கேற்று, திருமணத்தை தரிசிப்பதோடு பக்தர்களுக்கு ஆசியும் வழங்குவார்.
இதில் பங்கேற்று அம்பிகையைத் தரிசித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ.,தொலைபேசி: 044 - 2722 2084
No comments:
Post a Comment