Tuesday, 26 July 2016

தர்மபுரி (தகடூர்) கோட்டை கல்யாண காமாட்சி!


 
கொடை வள்ளல் அதிய மான் ஆட்சிபுரிந்த `தகடூர்' தான் இன்றைய தருமபுரி.  அன்னை, கல்யாண காமாட்சியாக எழுந்தருளியுள்ள  தலம்.

`கோட்டை காமாட்சி யம்மன் கோயில்' என்றுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

அரிதிலும் அரிதான குடவேல மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில் இது.

கன்னிராசியில் அஸ்த நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய தலமும் இதுவே.

ஐராவதம், ராமர் துர்வாசர், அர்ச்சுனன் முதலியோர் வழிபட்ட தலம்.

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

இறைவர் திருப்பெயர் : மல்லிகார்ச்சுனர்.

இறைவியார் திருப்பெயர் : கல்யாண காமாட்சி!

தல மரம் : வேளா மரம். (தற்போதில்லை)

வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர்



மூன்று கோயில்கள்!

தகடூர் கோட்டைக் கோயிலுக்குள்ளே மூன்று தனிக்கோயில்களாக காட்சி தருபவை, மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதி, காமாட்சியம்மன் சந்நதி மற்றும் இன்று சித்தே சுவரர் என்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதிகளே ஆகும்.

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து மகாமண்டபத்தை அடைகிறோம். நான்கு வரிசைகளில் 16 தூண்களைக் கொண்டது அது. பாசுபதம் பெற்ற பார்த் தன், சிவபக்த ஆஞ்சநேயர், சம்பந்தர் பெருமான் இப்படி ஒவ்வொரு தூணிலும், அழகிய சிற்பங்கள்.

தென்கோடியில் வீரபத்தி ரர் சிலையைக் கடந்து சென் றால், நிருத்த மண்டபம். `ஐராவத மண்டபம்' என்றும் இதனை அழைப்பர். பழமையும் புதுமையும் சேர்ந்து, அவற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியாத நிலை.

கருவறையையொட்டி அமைந்ததே நவரங்க மண்ட பம். தெய்வீகக் கலைத்திறனும், கலாசாரப் பெருமையும் ஒன்றையொன்று மிஞ்சிடும் நிலை. நுளம்ப பல்லவர் காலத்துச் சிற்பிகளின் கைவண்ணம்!



கருவறையில் நாம் தரி சிப்பது, நான்கடி உயர சிவலிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ள, மல்லிகார்ஜுனரைத்தான். சுயம்பு மூர்த்தி!

அர்ச்சுனன் வழிபட்ட திருமேனி!



அன்னை காமாட்சியின் திருக்கோயில், மல்லிகார்ஜுனே சுவரர் சந்நதிக்கும், சோமேசுவரர் சந்நதிக்கும் இடையே உள்ளது. பதினெட்டுப் படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். எதிரில் நான்கு கால் மண்டபம். அதற்கும் ஓர் அழகிய விமானம், புதுமையானதோர் அமைப்பு.



தாமரை மலரைப் போல 48 இதழ்கள், மூலைகள், 44 தளங்கள், 43 கோணங்கள் கொண்ட அந்தக் கரு வறையைத் தாங்கி நிற்பவை பதினெட்டு யானைகள். 18 யானைகளின் மத்தகங்கள் மீது நிற்பது அன்னையின் கருவறை.

சோமசூத்திர பிரதட்ச ணம் போல, வலமிருந்து இடப் புறமாகச் சுற்றி வந்தால், அதிஷ்டானத்தின் அடிவரிசையிலே, ஓர் அடி உயரமும், இரண்டடி நீளமும் கொண்ட பலகைச் சிற்பங்களாக நாம் கண்டு அதிசயிப்பது, ராமாயண காதையைத்தான்.

கருவறையின் பின்னால் உள்ள இரண்டாவது யானை யின் பக்கம் துவங்குகிறது ராமகாதை. புத்ரகாமேஷ்டி யாகத்தில் தோன்றிய அமுத கலசத்தை தசரதன் மூன்று பத்தினிமார்களுக்கும் அளித் தல், ராம லட்சுமண, பரத, சத்ருகன் அவதாரம். அதனையடுத்து குருகுலவாசம், வசிஷ்டரிடம் சிறுவர்கள் கல்வி பயிலுவது, விசுவாமித்ரர் வருகை, தாடகை வதம், சீதா கல்யாணம், கைகேயி வரம், குகனோடு கங்கையை கடத்தல், சூர்ப்பனகை மானபங்கம், கர தூஷண வதம்...

மாயமானாக மாரீசன் வருகை, சீதா அபகரணம், சுக்ரீவன் நட்பு, அனுமனின் சாகசங்கள், சேது பந்தனம், இலங்கைப் போர், மேக நாத னின் மாயப்போர், கும்பகர் ணன் வதம், இலங்கேசுவர வதம், விபீஷணபட்டாபிஷேகம், ராமபட்டாபிஷேகம், சீதை வனம் செல்தல், லவகுசா ஜனனம், அசுவமேத யாகம்... இப்படி, முப்பத்தைந்து சிற்பங்களில் முழுக்கதையும் நம் கண் முன்னே!
 
அன்னை கல்யாண காமாக்ஷி அம்பிகைக்கு ஆடிப்பூர  வளையகாப்பு விழா !





ஈசனின் கருவறையை விட பெரியதாக அமைந்துள் ளது அன்னை காமாட்சியின் கருவறை. அவள் அழகும், கருணையும் எல்லையற்றவை. தங்கக் கவசம் சார்த்திய கோலத்தில் அன்னையைத் தரிசித்திட பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.



நான்கு கரங்களோடு, அபய வரத ஹஸ்த கோலம் கொண் டுள்ள அன்னை காமாட்சி, கருணை ததும்பும் தனது பார்வையினாலேயே நமது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் அருட்கோலம் அது.

பதினெட்டுப் படிகள் ஏறி சாட்சியம் சொல்வதும், சத்தியப் பிரமாணம் செய்வதும் அந்த நாட்களில் வழக்கமாக இருந்ததாம். கல்யாண காமாட்சி முன்னே உள்ள `உலோகத்தினால் ஆன கிளி' ஒன்று அதற்கு சாட்சி. ஊர்ப் பஞ்சாயத்தில், காமாட்சியே கிளி வடிவில் பறந்து சென்று சாட்சி சொன்னாளாம்.

சற்று வித்தியாசமாக, வட்ட வடிவில் அமைந்த பலகைச் சிற்பமாக பைரவர் சிலையையும் காண்கிறோம்.

ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சுயரூபக் காட்சி!

"சூலினி" ராஜதுர்க்காம்பிகை!


 இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’ எனப் போற்றப்படுகிறாள். தர்மர் இருபத்தேழு மூல மந்திரங்களால் வழிபட்ட மூர்த்தினி இவள்.
 
சங்கு சக்ரம் ஏந்தி மகிஷனை வதைக்கும் கோபரூபத்தில் இவள் இருந்தாலும் நாடிவரும் அன்பருக்கு நலங்கள் பல சேர்ப்பவள். செவ்வாய் தோஷம் போக்குபவள்.
 
ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருளுகிறாள் சூலினி. இங்கு ப்ரத்யங்கிரா தேவியும் சிறப்பாக வழிபடப்படுகிறாள்.
 

"சூலினி" ராஜதுர்க்காம்பிகை!

சூலினி ராஜ துர்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட மகிஷன் கத்தி, கேடயங்களுடன் கீழே விழுந்திருப்பது போலவும், மகிஷனின் கொம்பை ஒரு கரத்தில் பற்றியும், இடது காலால் மகிஷனின் கழுத்தை மிதித்தபடியும் சம்ஹாரத் தோற்றத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவரையில் கிழக்கு நோக்கி இருப்பது இந்தக் கோயிலின் சிறப்பாகும்.
 

" ராகுவை போல் கொடுப்பார் இல்லை"எனும் முதுமொழிபடி ராகு கிரக அதி தேவதை ஸ்ரீ துர்க்கையை ஸ்ரீ தர்மர் முதலானோர் வழிபட்டு, இழந்த நாடு முதல் அனைத்தையும் பெற்றுள்ளார்.
 

ஆடி 2-ம் செவ்வாய்,
"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. வெள்ளி கவச அலங்காரம்.

ரத்னத்ரயம் எனும் வகையில் மூவகை சூலங்களுடன் காரண, காரணி, அதற்கான பலன் எனும் மூவகை பயன்களை அருளும் ஸ்ரீ சூலினியை முழுவதும் சந்தனக் காப்பு தோற்றத்தில் வருடத்தில் ஆடி 3 ம் செவ்வாய்க் கிழமை மதியம் 4.15 முதல் இரவு 9.15 வரை மட்டுமே தரிசிக்க முடியும்.



"சூலினி" ராஜதுர்க்காம்பிகை. சந்தன காப்பு அலங்காரம்.
 
நிகழ்ச்சி நிரல்:
 



 
ஆடி 3 ம் செவ்வாய்க்கிழமை
 
காலை 9 மணிக்கு கோட்டை முனியப்பன் சுவாமி கோயிலில் இருந்து பால் குடம் ஊர்வலம்.
 
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை பால் குடம் அபிஷேகம்,அன்னப்பாவாடை சமர்ப்பித்தல்,மஹாதீபாராதனை.

  
மதியம் 12 மணிக்கு அன்னதானம்
 
மதியம் 3.45 மணிக்கு ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சுயரூபக் காட்சி
 
 
மாலை 6 மணிக்கு அருள்தரும் அன்னை எம்பிராட்டி ஸ்ரீ ராஜ துர்காம்பிகை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா.
 
இரவு 9.30 மணிக்கு ஸ்ரீ ராஜ துர்காம்பிகைக்கு மஹாஅபிஷேகம்.
 
இரவு 11 மணிக்கு மஹாதீபாராதனை.
 
ஆதி காமாக்ஷி அம்பிகைக்கு சௌபாக்ய திரவ்யங்கள் சமர்ப்பணம்..
 


 
அமாவாசை நாட்களில், பெண்கள் பதினெட்டுத் திருப்படிகளிலும் திருப்படி பூஜை செய்வதோடு, உற்சவ திருமேனியைத் தாங்களே சுமந்து கோயிலினுள்ளே வலம் வருவது சிறப்பு. 
 
 
சித்தேசுவரர்

மூன்று கோயில்களில், வடபுறம் அமைந்துள்ள சந் நதியே `சித்தேசுவரர்' என இன்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதி. சந்திரனுக்கு அருள் செய்தவர். மனக்குழப்பம் நீங்க, உள்ளத் தெளிவு பெற, சோமேசுவரரை வழிபடுதல் பயன்தரும்.

ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது.

இவை தவிர, கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் எல்லாம் கோட்டை காமாட்சியம்மன் கோயிலில் உண்டு. வில்வ மரத் தடியில் நாகர் சிலைகளும், ரேணுகாதேவி சிலையும் உள் ளன.

சனத் குமார நதியைத் தவிர, மூன்று அழகிய திருக்குளங் கள் இருந்ததாம். அவற்றில் ஒன்று மட்டும் உருமாறி, பெயர் மாற்றத்துடன் ஒரு குறுகிய சந்தில் உள்ளது.

இங்குள்ள பைரவர் சந்நிதி விசேஷமானது. வாகனத்துடன், சூரிய சந்திரர் இருபுறமும் விளங்க, கோயிலின் குபேர பாகத்தில் எழுந்தருளியுள்ளார்.


தொங்கும் தூண்கள்!





சர்வ மங்கள கல்யாண காமாட்சி!


ஆடிப்பூர  வளையகாப்பு விழா!





ஆடிப்பூர  வளையகாப்பு விழா!





மூன்றாம் வெள்ளி - மஹாமேரு நிலயா
த்ரிபுர சுந்தரி




 



 

 

 

 

 

ஆடிப்பூரம்,அம்மனுக்கு வளை காப்பு!

 
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். 

இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். 

நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். 



உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும்.

 அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். 



இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். 
 
ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் . இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். 



அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். 



அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.  


அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். 

 

மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.



 இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. 

ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். 

 திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது.
 
 
 
 
 
 
 
 
 

ஆடி பதினெட்டாம் பெருக்கு!



ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். இந்த நாளில் காவிரி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சிறப்பு பூஜைகள் செய்து நீராடுவார்கள்.

ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடிப் பதினெட்டு என்னும் ஆடிப் பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது.
 

வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று "பதினெட்டாம் பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.




காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம். சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தை யும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.


வளம் பெருக்கும் திருநாள்:

ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர். 


 ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.

மறக்காம கோலம் போடுங்க!

 ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள்.


கோலத்தில் மாக்கோலம், இழைக்கோலம், புள்ளிக்கோலம், ரங்கோலி என்று எத்தனையோ வகை உண்டு. கோலத்தை"சித்ரகலா' என்பர். இதற்கு "சித்திர தாமரை போன்ற லட்சுமி' என்று பொருள்

ஆடிப் பதினெட்டு அன்று காவேரி அம்மன் பூப்பெய்தியதாக ஒரு ஐதீகம் உள்ளது.



அன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை, கருகமணி, மலர், மஞ்சள், பழங்கள், வெல்லம் கலந்த புட்டு அரிசி படைத்து, வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டி னையோ வைத்துப் பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வார்கள். ஆண்கள் வலது மணிக்கட்டில் சரடு கட்டிக் கொள்வார் கள். அன்று புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை மற்றும் பரிசுகள் கொடுத்து மரியாதை செய்வதும் உண்டு.

சில இடங்களில் காவேரித்தாய் மசக்கையாக இருக்கிறாள் என்ற அடிப்படை யில் சித்திரான்னங்களைப் படைப்பதுடன், புளிப்பான பழங்களையும் காவேரி நதிக்குப் படைப்பார்கள்.




இதற்கெல்லாம் சிகரம் வைத் ததுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன் னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.


அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.


பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!




 




                                        

உறையூர் வளைகாப்பு நாயகி!


திருச்சி, உறையூர் திருத்தலத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் புராணகாலத் தொடர்புடையது. சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடம் பழமையான இத்திருக்கோயிலில் அருள்புரியும் அன்னை குங்குமவல்லித் தாயாரை வளைகாப்பு நாயகி என்று போற்றுவர்.

உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த கரவாதித்த சோழன் ஒருநாள் மாலை வேளையில் சோலையில் உலா வந்தான். அப்போது காந்திமதி என்ற பேரழகியைச் சந்தித்தான். அவளை திருமணம் புரிந்துகொள்ளும் ஆவலில் மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை வேண்டினான். இறைவனும் ஆசியளிக்க, தேவேந்திரன் ஆசியுடன் அந்த தேவகுலப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறந்த சிவபக்தையான காந்திமதி, தினமும் உறையூரிலிருந்து நடந்து சென்று மலைக்கோட்டையில் தாயுமானவரை வழிபடுவது வழக்கம். கர்ப்பிணியான நிலையிலும் அந்த வழக்கத்தை விடாமல் காத்தாள் அவள்.

ஒருநாள், தோழிகள் யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியாக நடந்து மலைக்கோட்டை நோக்கிச் சென்ற அவள் களைப்பு மேலிட ஒரு நந்தவனத்தின் அருகே மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்த பிறகு, சிவ பூஜை செய்ய இயலாமல் போய்விட்டதே என்றுதான் வருந்தினாளே தவிர, தன் துன்பம் நோக்கவில்லை. அப்போது, அங்கு எழுந்தருளினார் இறைவன். தாயுமானவர் ரூபத்திலேயே காட்சி தந்து அருள்பாலித்தார். இறைவியும் உடன் தோன்றி அவளை ஆசீர்வதித்தாள்.

சில நாட்களில் அவளுக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதனால் மகிழ்ந்த காந்திமதி, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த நந்தவனத்தின் அருகில் சோழ மன்னன் உதவியுடன் கட்டிய ஆலயமே குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.

 
காந்திமதி முன்பு, இறைவன் தாமாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். கர்ப்பிணியான காந்திமதியை இறைவன் காத்ததால் இக்கோயில் கர்ப்பிணிப் பெண்களை காக்கும் பிரசித்தி பெற்ற கோயில் ஆனது. இக்கோயிலின் பிரதான நுழைவாசல் வடக்கு திசை நோக்கியிருந்தாலும், இறைவன் கிழக்கு நோக்கி பெரிய ஆவுடையில் காட்சி தருகிறார். இறைவி குங்குமவல்லி தெற்கு திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறாள்.



ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று கர்ப்பிணிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள் ஆகியோர் அன்னை குங்குமவல்லிக்கு வளையல்காப்பு வைபவ விழா நடத்துகிறார்கள்.

மூன்றாம் தை வெள்ளிக்கிழமை அன்று மாலை குங்குமவல்லித் தாயாருக்கு கண்ணாடி வளையல்களை சரம்சரமாக அடுக்கி மலர் மாலைபோல் தொடுத்து அலங்கரிப்பார்கள். இந்த அலங்காரத்தில் அம்பாளைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தரிசிக்கலாம்.

 பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வளையல்கள் அங்குள்ள பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகின்றன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், இவ்வாறு அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை பெறுகிறார்கள்.

இந்த வளையல்களை பெறுவதற்காக வெளியூர்களில் இருக்கும் கர்ப்பிணிகள் சார்பாக அவர்களுடைய பிரதிநிதிகள் வந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

முதல்நாள் குங்குமவல்லித் தாயாருக்கு வளைகாப்பு வைபவம் நடந்ததும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் நலமாகவும் பிறக்க வேண்டும்; தனது மாங்கல்யம் நீடூழி நிலைக்க வேண்டும் என்று கண்ணாடி வளையல்களைச் சமர்ப்பித்து வேண்டிக்கொள்வார்கள். இரண்டாம் நாள் திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்று கண்ணாடி வளையல்களைச் சமர்ப்பித்து வேண்டிக் கொள்வார்கள். மூன்றாம் நாள் குங்குமவல்லித் தாயாருக்கு பூப்பாவாடை சார்த்தி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.



கோயில் வளாகத்தில் நடுநாயகமாக திறந்த வெளியில் எழுந்தருளியிருக்கும் தில்லைக்காளி என்னும் ஜெய்காளி அனைவரின் கவனத்தையும் கவரும் வண்ணம் காட்சி தருகிறாள். சுமார் எட்டடி உயரத்தில் காட்சி தரும் இந்தக்காளி, தனது எட்டுத் திருக்கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி, பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தருகிறாள்.

இந்தக் காளி தினமும் ஒரு புதுப்புடவை அணிந்து அழகாக காட்சி தருவாள்.

குடும்பப் பூசல்களை உடனே தீர்ப்பதற்காக ‘வரமிளகாய்’ தீபமிட்டு வேண்டிக்கொண்டால் உடனே பிரச்னைகள் தீருகின்றனவாம்.

 அமாவாசை அன்று இரவில் இந்தக் காளிக்கு ‘ரத்த அபிஷேகம்’ என்ற சிறப்புப் பூஜை நடைபெறும். அதாவது, சிவப்பு குங்குமத்தை ஒரு குடம் நீரில் நன்கு கரைத்து அபிஷேகம் செய்வது. 

தேய்பிறை அஷ்டமியில் வெள்ளைப் பூசணிக்காயில் தீபம் அமைத்து வழிபட்டால் தீராத நோய் தீரும். அநியாயமாகவும், பொறாமையாலும் வழக்கு தொடர்பவர்கள், புறம் பேசுபவர்களுக்கு இக்காளி தகுந்த தண்டனை வழங்குவாளாம்.

கோயில் வளாகத்தில் வடதிசை நோக்கி அஷ்ட பைரவர்களை தங்கள் பத்தினியுடனும் வாகனத்துடனும் நின்ற நிலையில் சுதை உருவங்களாக தரிசிக்கலாம். சுற்றுப் பிராகாரத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் தன் பத்தினியுடன் தனிச்சந்நதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். விநாயகப் பெருமானும், வள்ளி&தேவசேனா சமேத முருகப்பெருமானும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் காட்சி தருகிறார்கள்.

வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் திருச்சி மலைக்கோட்டையில் அருள்புரியும் தாயுமானவரையும் அன்னை மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார், மாணிக்கவிநாயகரை தரிசித்தபின், சுகப்பிரசவம் அருளும் குங்குமவல்லித் தாயாரையும் தரிசித்து வளையல்கள் சமர்ப்பித்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்கிறார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அருள்புரிகிறாள் குங்குமவல்லி அன்னை.

 

சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி!


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.



சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையாக தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக்  கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும் மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின. மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண் ணிய பலன்களும் பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான் அவன். அதனால் ஆணவம் கொண்டு  முனிவர்களைத் துன்புறுத்தினான்; அனைவருக்கும் பல கொடுமைகள் இழைத்தான்.



அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த  புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. முனிவர்களும் ரிஷிகளும் யாகம், பூஜை என்ற தம் நித்திய கடமைகளைச் செய்ய முடி யாமல், உயிருக்கு பயந்து குகைகளிலும் பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்விப்பதற்கான யாகங்கள் நடைபெறவில்லை.  அதனால் மழை பொய்த்துப் போனது. பயிரினங்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ் சம், அன்ன ஆகாரம் இன்றி உயிரினங்கள் மடிந்தன.



அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச் சாரலில் ஒன்று கூடி பராசக்தியை நோக்கி, ‘‘தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர் களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா?’’ என வேண்டினர்.



இந்த பிரபஞ்சத்தையே படைத்த  பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப் பயிர், காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில  நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையாகப் பொழிந்தன.

உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி, தன் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்கத் தீர்மானித்தாள். நெ ருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி, அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர் கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர். யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும்! அதனால்  தேவி அழிக்கும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவே அவனை அழிக்கும் வளையமுமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று  தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். அதனால் பலன்களை இழந்த  துர்க்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.



உலக மக்களின் பஞ் சத்தைக் கண்டு மனம் வருந்தி, தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் வெள்ளமாகப் பெருக, ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி,  குளங்களையெல்லாம் நிரம்பின. தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர, உலகம் சுபிட்சமானது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்றும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்றும் அழைத்து, பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்று முதல் சாகம்பரி தேவி வழிபாடு தொடர்கிறது. துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு.

சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப்  பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங் கப்படுகிறாள்.



நிறைமணிக்காட்சி!

அன்று முதல் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது  என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள்  உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தல் உருவாக்கி மகிழ்வர்.

சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில்  பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடு வர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும். நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள்.



தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந் தளிக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர், மயிலை கபாலீஸ்வரர் - வெள்ளீஸ்வரர் - காரணீஸ்வரர், திருவாரூர் தியாகராஜர் ஆலயங் களில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.



சாகம்பரி த்யானம்

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி

ஓம் சாகம்பர்யை வித்மஹே
சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.




சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன.

சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.


 

லலிதா நவரத்தின மாலை!

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானா னந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தரன் ஆற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கன வான தவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

4. பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ
தேன்பொழிலாமீது செய்தவள் யாரோ
எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்
மந்திரவேத மயப் பொருளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

5. மாணிக்கம்

காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

6. மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரிதபதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்றடியவர் குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீ மேல் இடினும் ஜெயசக்தி எனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

8. புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணீ
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையாறொலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அளவற்று அசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே 
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே!

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார் 
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே.