இவ்வாலயத்தில் மூலவராக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்புரிகிறார். தாயாராக அம்புஜவல்லி வீற்றிருக்கிறார். இங்கே ஆண்டாள், ஆழ்வார் ஆசார்ய பெருமக்களுக்கும் சந்நிதிகள் உள்ளன. கோயிலின் எதிரில் இரண்டு காளிங்கநர்தன கிருஷ்ணனோடு கூடிய நாகங்களையும் காணலாம்.
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாகத் திகழ்வது தாயார் சந்நிதி எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ பத்ம சக்கரம்.
பத்மம் என்று தாமரை மலரைக் குறிப்பிடுவர். உலகில் தோன்றிய தாவரங்களில் தெய்வாம்சம் பொருந்தியவற்றுள் முதலிடம் வகிப்பது தாமரை. ஸ்ரீமகாலட்சுமி தாமரையை விரும்புபவள். தாமரையில் உறைபவள். தாமரையை தன் திருக்கரங்களில் தரித்தவள். தாமரையின் நிறம் கொண்டவள்.
மகாலட்சுமியை குறித்து சொல்லப்படும் ஸ்ரீசூக்தத்தில் பத்மப் பிரியே, பத்மஹஸ்தே, பத்மாக்ஷி, பத்மஸம்பவே என்று அழைக்கப்படுகிறாள். பாரதியார் "கமலமே திருவே' என்று மஹாலட்சுமியைப் போற்றுகிறார்.
இத்தகைய பெருமைகள் கொண்ட தாமரை மலர் இதழ்கள் போன்று செதுக்கப்பட்டுள்ள அஷ்டதள பத்ம சக்கரம் தாயார் சந்நிதி எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
|
அஷ்டதள பத்ம சக்கரம் |
பீடத்துடன் சுமார் 2 அடி உயரத்தில் இரண்டு புறமும் சிங்கங்கள் சூழ நான்கு ஜ்வாலையுடன் கூடிய அமைப்பில் சுதர்ஸன சக்கரம் போன்றே காட்சியளிப்பது அற்புதம். இதனை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்ட யோகங்கள்,அஷ்ட சித்திகள் பெறலாம் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: காஞ்சிபுரம் - வந்தவாசி தடத்தில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். செங்கல்பட்டிலிருந்தும் செல்லலாம்.
No comments:
Post a Comment