Monday, 25 July 2016

குருவருள் நிறைக்கும் தெட்சிணாமூர்த்தி!

ஆலங்குடி தெட்சிணாமூர்த்தி!
குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா.

என்பது தட்சிணாமூர்த்தி துதி. "அனைத்து உலகங்களுக்கும் குருவாக இருப்பவர்; பிறப்பு- இறப்பு என்னும் கடலைக் கடந்திட மருந்தானவர்; ஞானம் அளிப்பவர்- அத்தகைய குருவுக்கு வணக்கம்' என்பது இதன் பொருள்.
 

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.

 

தாம்பத்ய தெட்சிணாமூர்த்தி! சுருட்டப்பள்ளி!

தேவ்யாலிங்கித வாமாங்கம் பாதோ தபஸ் மூர்திம் சிவம்!
நந்தி வாஹன மீஸானம் ஸ்ரீதாம்பத்ய தட்சணாமூர்த்தியே நமஹ!!


தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.
 
தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும்.

வியாழக்கிழமைகளில் அவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சளாடை உடுத்தி, மல்லிகை, முல்லை, வில்வம் போன்றவற்றால் அர்ச்சித்தால் குருவருள் சித்திக்கும்.

குருவின் சின்முத்திரை

வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.

"கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
யாறங்க முதல் கற்ற கேள்வி
வல்லோர்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்
எல்லாமா யாவதும்
இருந்தபடி இருந்துகாட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்'

என்னும் பாடலைப்பாடி வணங்கி னால் சிவகுருவின் அருள் சித்திக்கும்.
வியாக்யான தெட்சிணாமூர்த்தி

தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

பத்து தெட்சிணாமூர்த்திகள்

மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு - ஆலங்குடி
வீராசன நிலை - சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்
 
 
 

No comments:

Post a Comment