கர்ப்பவதி கோலத்தில் மேடிட்ட வயிற்றுடன் சீதா தேவியை எங்காவது நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட அபூர்வ சீதையின் முன் நின்று, கண் மூடிப் பிரார்த்தனை செய்தாலே குழந்தை வரம் கிட்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும்.
சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்த தலம் இதுதான்.
சீதா-ராமனின் குழந்தைகளான லவனும் குசனும் வழிபட்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த வைகுண்ட வாசன் திருக்கோயில்.
சிவன் கோயில் வடக்குப் பார்த்தபடி இருக்கிறது என்றால், இந்தப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி 115 அடி நீளத்துடனும் 188 அடி அகலத்துடனும் அழகுற அமைந்திருக்கிறது. உள்ளே நுழைந்ததும் காணப்படும் தசாவதாரக் காட்சி பரவசப்படுத்துகிறது. எதிரில் லவ குசர்கள் நீராடிய திருக்குளம். குளக்கரை வாசலில் ஆஞ்சநேயர் ஆலயமும் அமைந்துள்ளது.
பெருமாள் கோயில்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏதாதசியன்று மட்டும் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்குமே! அந்த வைகுண்ட வாசன்தான் இந்த ஆலயத்தில் வருடம் பூராவும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
வைகுண்டவாசன் என்றாலே ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இங்கே ஸ்ரீ தேவி, பூமாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிவது, மிகுந்த சிறப்பானதாகும்.
ஏன் இப்படி?
வால்மீகி முனிவர் வைகுண்டவாசனைத் தியானித்த போது, பெருமாள் உடனடியாக வந்து அருள்பாலித்தார். அதாவது அமரக் கூட நேரமாகுமே என்று விரைந்து வந்து நின்ற கோல தரிசனம். அத்தனை மகிமை வாய்ந்த வைகுண்ட வாசப் பெருமாளை வணங்கினால், நினைத்ததெல்லாம் நடக்கும்.
108 லட்சுமி ஹார மாலையும், 108 சாளக்கிராம மாலையும் அணிந்து கம்பீரமாகத் தாயார்களுடன் காட்சி தரும் பகவானைப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது!
சக்ரவர்த்தித் திருமகனான ராமபிரானைப் பட்டாபிஷேகக் கோலத்துடன் பலகோயில்களில் பார்த்திருப்பீர்கள். இங்கே கிரீடமோ, ஆபரணங்களோ இல்லாமல் மரவுரி தரித்த கோலத்தில் ராமரைக் காணலாம்.
காரணம் என்ன? மகன்களுடன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை, ராணி அலங்காரமெல்லாம் இல்லாமல் கோடாலிக் கொண்டை முடிச்சுடன் சராசரி பெண்ணாகக் காட்சி தருவதால், ராமரும் மனம் நெகிழ்ந்து, எளிய கோலத்தில் காட்சி தருகிறார்.
அதுமட்டுமா? எல்லாக் கோயில்களிலும் காணப்படுவது போல ராமரின் பக்கத்தில் லட்சுமணனோ, ஆஞ்சநேயரோ கிடையாது.
ஏன்? நெடுங்காலம் பிரிந்திருந்து ஒன்று சேர்வதால் சீதையும் ராமரும் ஏகாந்தமாக இருக்கட்டும் என்று லட்சுமணனும், அனுமனும் நகர்ந்து விட்டார்கள்?!
கர்ப்பவதியாக மட்டுமல்ல, கோடாலிக் கொண்டையுடனும் சீதை இங்கே காட்சி தருகிறாள்!
கர்ப்பிணி சீதாப்பிராட்டிக்குப் பக்கத்தில், ஒரே கல்லில் உருவான, பவ்யமே உருவாக லவனும் குசனும் வால்மீகி முனிவரின் பக்கத்தில் நிற்கும் காட்சியும் பரவசம் தரத்தக்கது.
பிராகாரத்தில் இரண்டு வில்வ மரங்களுக்கு இடையில் ஒரு வேப்பமரம் பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கிறது. வேப்பமரம், பார்வதி. வில்வமரங்கள் சிவனும் விஷ்ணுவும், அதாவது விஷ்ணு தன் தங்கையை சிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்ததையே இந்த மரங்கள் மெய்ப்பிப்பதாக நம்பிக்கை. திருமணத்திற்கும் குழந்தைப் பேற்றிற்கும் இங்கே பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
கனகவல்லித்தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.
அர்த்த மண்டப நுழைவாயிலின் அருகே சுரங்கப்பாதை ஒன்று அமைந்துள்ளது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலுள்ள உற்சவர்களைப் பாதுகாப்பதற்காக, வனப் பகுதியாக இருந்த இங்கே சுரங்கப்பாதை மூலம் கொண்டு வந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
கோயில் பூஜைகள், ஆகமத்தை வழிமுறைப்படுத்திய விகனஸ ஆசார்யாரும் இங்கே அருள்பாலிக்கிறார், அவருக்கான உற்சவ உபயத்தை பட்டாசார்யார்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.
சிவன் கோயிலின் தலமரமான குறும்பலா மரம், பெருமாள் கோயிலில் காணப்படுவதும் ஒற்றுமைக்கு ஓர் உதாரணம்.
``வைகுண்டவாசப் பெருமாள் கோயில் எங்கிருக்கிறது?''
``கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பத்து நிமிடத் தொலைவு, குறுங்காலீஸ்வரர் கோயில் அருகில்.''
``கோயில் எப்போது திறந்திருக்கும்?'' ``காலை 7-10.30, மாலை 5-8.30''
``சிறப்புகள்?'' ``மக்கட் பேறு மற்றும் வீடுபேறு.''
No comments:
Post a Comment