Tuesday, 26 July 2016

உறையூர் வளைகாப்பு நாயகி!


திருச்சி, உறையூர் திருத்தலத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் புராணகாலத் தொடர்புடையது. சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடம் பழமையான இத்திருக்கோயிலில் அருள்புரியும் அன்னை குங்குமவல்லித் தாயாரை வளைகாப்பு நாயகி என்று போற்றுவர்.

உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த கரவாதித்த சோழன் ஒருநாள் மாலை வேளையில் சோலையில் உலா வந்தான். அப்போது காந்திமதி என்ற பேரழகியைச் சந்தித்தான். அவளை திருமணம் புரிந்துகொள்ளும் ஆவலில் மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை வேண்டினான். இறைவனும் ஆசியளிக்க, தேவேந்திரன் ஆசியுடன் அந்த தேவகுலப் பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறந்த சிவபக்தையான காந்திமதி, தினமும் உறையூரிலிருந்து நடந்து சென்று மலைக்கோட்டையில் தாயுமானவரை வழிபடுவது வழக்கம். கர்ப்பிணியான நிலையிலும் அந்த வழக்கத்தை விடாமல் காத்தாள் அவள்.

ஒருநாள், தோழிகள் யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியாக நடந்து மலைக்கோட்டை நோக்கிச் சென்ற அவள் களைப்பு மேலிட ஒரு நந்தவனத்தின் அருகே மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்த பிறகு, சிவ பூஜை செய்ய இயலாமல் போய்விட்டதே என்றுதான் வருந்தினாளே தவிர, தன் துன்பம் நோக்கவில்லை. அப்போது, அங்கு எழுந்தருளினார் இறைவன். தாயுமானவர் ரூபத்திலேயே காட்சி தந்து அருள்பாலித்தார். இறைவியும் உடன் தோன்றி அவளை ஆசீர்வதித்தாள்.

சில நாட்களில் அவளுக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதனால் மகிழ்ந்த காந்திமதி, தனக்கு இறைவன் காட்சி கொடுத்த நந்தவனத்தின் அருகில் சோழ மன்னன் உதவியுடன் கட்டிய ஆலயமே குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம்.

 
காந்திமதி முன்பு, இறைவன் தாமாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். கர்ப்பிணியான காந்திமதியை இறைவன் காத்ததால் இக்கோயில் கர்ப்பிணிப் பெண்களை காக்கும் பிரசித்தி பெற்ற கோயில் ஆனது. இக்கோயிலின் பிரதான நுழைவாசல் வடக்கு திசை நோக்கியிருந்தாலும், இறைவன் கிழக்கு நோக்கி பெரிய ஆவுடையில் காட்சி தருகிறார். இறைவி குங்குமவல்லி தெற்கு திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறாள்.



ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று கர்ப்பிணிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், கன்னிப்பெண்கள் ஆகியோர் அன்னை குங்குமவல்லிக்கு வளையல்காப்பு வைபவ விழா நடத்துகிறார்கள்.

மூன்றாம் தை வெள்ளிக்கிழமை அன்று மாலை குங்குமவல்லித் தாயாருக்கு கண்ணாடி வளையல்களை சரம்சரமாக அடுக்கி மலர் மாலைபோல் தொடுத்து அலங்கரிப்பார்கள். இந்த அலங்காரத்தில் அம்பாளைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தரிசிக்கலாம்.

 பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த வளையல்கள் அங்குள்ள பெண்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகின்றன. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், இவ்வாறு அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை பெறுகிறார்கள்.

இந்த வளையல்களை பெறுவதற்காக வெளியூர்களில் இருக்கும் கர்ப்பிணிகள் சார்பாக அவர்களுடைய பிரதிநிதிகள் வந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

முதல்நாள் குங்குமவல்லித் தாயாருக்கு வளைகாப்பு வைபவம் நடந்ததும் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாகவும் நலமாகவும் பிறக்க வேண்டும்; தனது மாங்கல்யம் நீடூழி நிலைக்க வேண்டும் என்று கண்ணாடி வளையல்களைச் சமர்ப்பித்து வேண்டிக்கொள்வார்கள். இரண்டாம் நாள் திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்று கண்ணாடி வளையல்களைச் சமர்ப்பித்து வேண்டிக் கொள்வார்கள். மூன்றாம் நாள் குங்குமவல்லித் தாயாருக்கு பூப்பாவாடை சார்த்தி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.



கோயில் வளாகத்தில் நடுநாயகமாக திறந்த வெளியில் எழுந்தருளியிருக்கும் தில்லைக்காளி என்னும் ஜெய்காளி அனைவரின் கவனத்தையும் கவரும் வண்ணம் காட்சி தருகிறாள். சுமார் எட்டடி உயரத்தில் காட்சி தரும் இந்தக்காளி, தனது எட்டுத் திருக்கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி, பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தருகிறாள்.

இந்தக் காளி தினமும் ஒரு புதுப்புடவை அணிந்து அழகாக காட்சி தருவாள்.

குடும்பப் பூசல்களை உடனே தீர்ப்பதற்காக ‘வரமிளகாய்’ தீபமிட்டு வேண்டிக்கொண்டால் உடனே பிரச்னைகள் தீருகின்றனவாம்.

 அமாவாசை அன்று இரவில் இந்தக் காளிக்கு ‘ரத்த அபிஷேகம்’ என்ற சிறப்புப் பூஜை நடைபெறும். அதாவது, சிவப்பு குங்குமத்தை ஒரு குடம் நீரில் நன்கு கரைத்து அபிஷேகம் செய்வது. 

தேய்பிறை அஷ்டமியில் வெள்ளைப் பூசணிக்காயில் தீபம் அமைத்து வழிபட்டால் தீராத நோய் தீரும். அநியாயமாகவும், பொறாமையாலும் வழக்கு தொடர்பவர்கள், புறம் பேசுபவர்களுக்கு இக்காளி தகுந்த தண்டனை வழங்குவாளாம்.

கோயில் வளாகத்தில் வடதிசை நோக்கி அஷ்ட பைரவர்களை தங்கள் பத்தினியுடனும் வாகனத்துடனும் நின்ற நிலையில் சுதை உருவங்களாக தரிசிக்கலாம். சுற்றுப் பிராகாரத்தில் சொர்ணாகர்ஷண பைரவர் தன் பத்தினியுடன் தனிச்சந்நதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். விநாயகப் பெருமானும், வள்ளி&தேவசேனா சமேத முருகப்பெருமானும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

நவகிரகங்கள் தங்கள் மனைவியருடன் காட்சி தருகிறார்கள்.

வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் திருச்சி மலைக்கோட்டையில் அருள்புரியும் தாயுமானவரையும் அன்னை மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார், மாணிக்கவிநாயகரை தரிசித்தபின், சுகப்பிரசவம் அருளும் குங்குமவல்லித் தாயாரையும் தரிசித்து வளையல்கள் சமர்ப்பித்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்கிறார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அருள்புரிகிறாள் குங்குமவல்லி அன்னை.

 

No comments:

Post a Comment