Tuesday, 26 July 2016

16 பேறுகளும் அருளும் பஞ்சபூதத் தல நாயகிகள்!

ட்சிணாயனம் எனும் தெற்குதிசைநோக்கி சூரியன் பயணிக்கத் தொடங்கும் கடக மாதமான ஆடி மாதத் தினை அம்மனுக்குரிய மாதமென்று  போற்றுவர். இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றும் திருநாட்களாகும். அந்தவகையில் ஆடிப்பௌர்ணமி மிகவும் போற்றப்படுகிறது சந்திரனை மனோகாரகன் எனச் சொல்கிறது ஜோதிட நூல்.  எனவே இந்நாளில் இறைவழிபாட்டின் மூலம் நம் சிந்தனையை ஒருமுகப் படுத்தினால், மனோகாரகனான சந்திரன் சகல நன்மைகளையும் தந்தருள்வான் என்கின்றன வேத நூல்கள்.

சந்திரனுக்கு அதிபதி அம்பிகை. ஆகவே, இந்நாளில் அம்பிகையை தரிசித்து வழிபடுவதால் பூரண அருளும் ஆரோக்கியமும் கிட்டும். மேன்மேலும் உடல்நலம் வளம்பெற்று, ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றன வழிகாட்டி நூல்கள்.

அன்னை பராசக்தியை நிறைமதி நாளில் பெண்கள் பூஜை செய்துவந்தால், அன்னை தன் பரிபூரண அருளை அக்குடும்பத்திற்கு வாரிவழங்குகிறாள்.

அம்பாளை வழிபட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஏராளம். அந்தவகையில், பஞ்சபூதத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் அம்பாளை வழிபட, அனைத்து அம்பிகையையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பர்

பஞ்சபூதங்களில் நிலம் எனும் பூதத்தின் தலமாகத் திகழ்கிறது காஞ்சி. இங்குள்ள காமாட்சியம்மன் கோவிலில் ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

கருவறையில் அருள்புரியும் தேவியை மூலகாமாட்சி என்பர். இந்த தேவியின் வலப்புறம் காட்சி தருபவள் தபஸ்காமாட்சி. ஒற்றைக்காலில் முள்முனையில் நின்று தவம் செய்கிறாள் இந்த தேவி. கருவறையின் கீழ்ப்பகுதியில் குகை போன்ற அமைப்புடைய பிலாத்துவாரம் ஒன்றுண்டு. இதனுள் அருள்புரிவது பிலாகாச காமாட்சி. இங்குள்ள ஸ்ரீசக்கர ரூபத்தை ஸ்ரீசக்கர காமாட்சியாக வணங்குவர். அடுத்து, பாததரிசனம் மட்டும் அருளும் காமாட்சியென்று ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

காஞ்சியில் அன்னை எழுந்தருளக் காரணமென்ன?

ஒருசமயம் கயிலையில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அன்னை. அதனால் உலகங்கள் யாவும் இருண்டன. இதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை பூவுலகில் தவமியற்றுமாறு பணித்தார். அதன்படி பூவுலகில் காஞ்சிக்கு வந்த அம்பிகை, வேகவதி ஆற்றங்கரையில் மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வணங்கித் தவமிருந்தாள். அம்பிகையை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேகவதி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுக்க வைத்தார். நீரின் வேகத்தில் மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தழுவிக்கொண்டாள் அன்னை.

அம்பிகையின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி கொடுத் தருளினார். இவ்வாறு தவமிருந்த ஆதிசக்தியான அன்னையே ஸ்ரீகாமாட்சியானாள். இந்த தேவியை பௌர்ணமியன்று தரிசித்தால் மாங்கல்ய பலம் நீடிக்குமென்பது ஐதீகம்.

திருவானைக்கா நீர்த்தலமென்று போற்றப்படுகிறது. இங்கு ஜம்புகேஸ்வரர்-  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அருள்புரிகிறார்கள். இங்குள்ள ஈஸ்வரி தனித்தன்மை பெற்றவ ளென்று புராண வரலாறு கூறுகிறது. ஆதிகாலத்தில் அசுரன் ஒருவனை வதம் செய்த ஈஸ்வரி இங்கு எழுந்தருளியதால், உக்கிரத்துடன் காட்சி தந்தாள். இதனால் பக்தர்கள் இந்த அம்பாளை வழிபட அஞ்சினர். இந்த நிலையில் இத்தலத்திற்கு யாத்திரையாக வந்த ஆதிசங்கரர், அம்பாளது உக்கிரத்தைத் தணிக்க விரும்பினார். அம்பாளின் காதுகளில் ஏற்கெனவே தோடுகள் இருந்தாலும், முறைப்படி மந்திரப் பிரயோகம் செய்து ஸ்ரீசக்கர ரூபமான இரு காதணிகளை அம்பாளுக்கு மேற்கொண்டு அணிவித்தார். மேலும், அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்ய, அம்பிகையும் சாந்தரூபமாகக் காட்சிதந்தாள். இன்று அம்பாள் காதுகளில் இரண்டு தாடங்கங்கள் இருப்பதை தரிசிக்கலாம். ஒன்று ஆதிகாலத்தில் அணிந்திருந்த தாடங்கம்.

மற்றொன்று ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரரூபமான தாடங்கம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இங்கு மகாதுர்க்கா, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவியர் இணைந்த அகிலத்தின் நாயகியென போற்றப்படுகிறாள். சக்தி பீடங்களில் திருவானைக்கா வாராஹி பீடமென்பர். சதிதேவியின் முகவாய்க்கட்டை விழுந்த இடம். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் பார்வதி அலங்காரத்திலும், நண்பகலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், இரவில் வெண்ணிறஆடை அணிந்து சரஸ்வதி கோலத்திலும் காட்சிதருகிறாள் ஈஸ்வரி.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மூலவருக்கு ஆடி மாதப் பௌர்ணமியன்று, காலை 10.15 முதல் 12.15 வரை நடக்கும் உச்சிக்காலப் பூஜையின்போது பூணூல் சாற்றப்படுகிறது. இது தனிச்சிறப்பு என்பர். இந்தக் கோலத்தில் ஈஸ்வரியை வழிபட, பெண்கள் தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

உச்சிக்கால பூஜையின்போது, அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனைப் பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். ஆடிப்பௌர்ணமியன்று இத்திருக்கோவில் விழாக்கோலம் காணும்.

ஆகாயத்தலமென்று போற்றப்படுவது சிதம்பரம். இந்த திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப்பெருமான் அருள்புரிகிறார். இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமசுந்தரி, சின்னஞ்சிறு பெண்போல் சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கை குளத்திற்கு மேற்கே, இரண்டு பிராகாரங்களுடன் தனிக்கோவில் கொண்டுள்ளாள். இதுதவிர, பஞ்சாட்சரப் படிகளின்மீது ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரியும் சித்சபையிலும், உற்சவ விக்ரகமாய் அருளாசி வழங்குகிறாள் அன்னை.

ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை போன்ற திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப் பௌர்ணமியன்று சிவகாம சுந்தரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், அன்று பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நாளில் சிவகாம சுந்தரியை தரிசித்தால், வீட்டுக்கு அடங்காத கணவர்கள் மனம்திருந்தி மனைவியை மதித்து நடப்பார்கள் என்பது ஐதீகம். இதன்காரணமாக இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் பெருமளவில் அன்னையை வணங்க வருவார்கள்.

பஞ்சபூதத் தலங்களில் வாயு (காற்று) தலமாகப் போற்றப்படுவது ஸ்ரீகாளஹஸ்தி (திருக்காளத்தி).

இத்திருக்கோவிலின் அம்பிகை ஞானப் பூங்கோதை  என்றும், ஞானப்பிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகையின்முன், சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட "அர்த்தமேரு' உள்ளதைக் காணலாம். அம்பிகையின் இடுப்பிலுள்ள ஒட்டியாணத்தில் கேது பகவானின் உருவம் காணப்படுகிறது.  சந்நிதிக்கு வெளியில், பிராகாரத்தின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது.

இத்தலம் சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆடிப்பௌர்ணமியன்று அம்பிகைக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறுவதுடன், வைரமூக்குத்தியும் தங்கப்பாவாடையும் அணிவிப்பார்கள். இந்த திருக்கோலத்தினை தரிசித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்; பதினாறு வகையான பேறுகளும் பெற்று வளமுடன் வாழலாம்.

இத்திருக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாளத்தீஸ்வரநாதரின் கருவறையில், மற்ற தீபங்களெல்லாம் நின்று ஒளிவிடும்போது, ஒரு தீபம் மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். கருவறையின் கதவுகளை காற்றுப் புகாவண்ணம் மூடினாலும் அந்த தீபம் மட்டும் அசைந்துகொண்டிருக்கும் அற்புதத்தைக் காணலாம். மேலும், இங்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. இத்தலம் நாகதோஷ (ராகு- கேது) பரிகாரத்தலமாகத் திகழ்வதால், தினமும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகளும், யாகங்களும் அம்பிகையின் முன் நடைபெறுகின்றன. அதற்குரிய கட்டணத்தைக் கோவிலில் செலுத்தி பக்தர்கள் அந்த தோஷப் பரிகாரப் பூஜையில் கலந்துகொண்டு நலம் பெறுகிறார்கள். மேலும் ஆடிப்பௌர்ணமியன்று ஸ்ரீஞானப் பூங்கோதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். இங்கு ஸ்ரீஅண்ணாமலையார் புகழ்பெற்றுத் திகழ்கிறார்.

இங்கு அருள்புரியும் அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமுலை அன்னை ஈசனைக் குறித்து தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த இறைவன், கார்த்திகைத் தீபத்திருநாளில் ஜோதி உருவாய் மலைமீது காட்சிதந்து, அம்பிகைக்கு தன் இடப்பாகத் தினை அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே. அம்பிகைக்குரிய ஆடிப்பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் தம்பதி சமேதராக அம்பாளை வழிபட்டால் கணவன்- மனைவிக்குள் அன்பு மேலிடுவதுடன், குடும்பத்தில் ஒற்றுமையும் ஏற்பட்டு, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வில் மகிழ்ச்சி காண்பர் என்பது ஐதீகம்.

மேற்கண்ட ஐந்து தலங்களில் அருள்புரியும் அம்பாளை ஆடிப்பௌர்ணமி நாளில் தரிசிக்க இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபட்டாலும், சகலபாக்கியங் களும் பெற்று நலமுடன் வாழலாம்.


 

No comments:

Post a Comment