Saturday, 25 June 2016

திருமண வரமருளும் திருவிடந்தை!


                     
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவில். இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றிப் பாசுரங்கள் பாடி யுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக இத்தலம் போற்றப்படுகிறது.

இந்த ஊரின் பெயர் நித்யகல்யாணபுரி. கடவுளின் பெயர் நித்யகல் யாணப் பெருமாள். கோயில் விமானமோ கல்யாண விமானம். திருக்குளத்தின் பெயர்- கல்யாணதீர்த்தம்.

ஆதிவராகப் பெருமாளும் அகிலவல்லி நாச்சியாரும் ஏன் கோமளவல்லித் தாயாரும் தினசரி காட்சி தருவதும் கல்யாணக் கோலத்தில் தான். ஆலயத்தின் தலமரமோ, மணவிழாவிற்கு உகந்த புன்னை.

நம் ஊர்க் கல்யாணங்களின்போது மாப்பிள்ளை, பெண்ணுக்குக் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வைப்பார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதுபோல் இயற்கையாகவே நித்யகல்யாணப் பெருமாளுக்கும், கோமளவல்லித் தாயாருக்கும் திருஷ்டிப் பொட்டு அமைந்திருப்பது இங்கே பேரதிசயம்.!

பெருமாளுக்கு இங்கே தினந்தோறும் கல்யாணம் நடக்கிறது. 108 திவ்ய தேசங்களுள் இத்திவ்ய தேசத்தில் மட்டுமே ஆண்டின் 365 நாட்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இங்குள்ள பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர் வந்த காரணத்தை தல வரலாறு சுவைபடக் கூறுகிறது.

சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த காலவ மகரிஷி, தெய்வீக அம்சம் கொண்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.முனிவருக்கு ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு சொர்க்க லோகம் சென்று விட்டாள் அவரது மனைவி.அத்தனை பெண் குழந்தைகளை வைத்து, காப்பாற்றச் சிரமப்படும் முனிவர், இறுதியில் இந்த திருவிடந்தைக்கு வந்தார். இங்கே அருள்பாலிக்கும் வராகமூர்த்தியை வணங்கினார்.தேவர்களுடன் போரிட்டதால் சாபம் பெற்ற பலி மன்னனுக்குக் காட்சி தந்து ரட்சித்த வராகர், இவர்தான் என்பதால், தன் மகள்களுக்கும் இவரே நல்வாழ்க்கையை அமைத்துத் தருவார் என்று நம்பினார் காலவ மகரிஷி. தன் 360 பெண்களும் பெரிய பிராட்டியாரின் அம்சம் என்பதும் அந்த வராகர்தான் தன் மருமகன் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.தினம் தினம் திருமணம்!

முனிவரின் கவலையைத் தீர்க்க, வராகப் பெருமாள், பிரம்மசாரி உருவெடுத்து பெண் கேட்டு வந்தார்.தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களுக்கு ஒவ்வொருவராகத் திருமணம் செய்து கொண்டார் பெருமாள்.கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒன்றாகச் சேர்த்து அணைத்து ஒரே பெண்ணாக ஆக்கி தன் இடது பக்கத் திருத்தொடையில் வைத்துக்கொண்டு வராகப் பெருமாளாக அனைவருக்கும் காட்சியளித்தார். (இப்போதும் அதே காட்சியை நாம் தரிசிக்கலாம்).

360 கன்னிகள் சேர்ந்து ஒருங்கே உருவானதால், வராகரின் இடபாகத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லித் தாயார் என்றும் வருடம் பூராவும் திருமணம் செய்துகொண்டதால், வராகருக்கு, நித்யகல்யாணப் பெருமாள் என்றும், இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் பெயர்கள் ஏற்பட்டன. 360 பெண்களில் மூத்தவளின் பெயர் கோமள வள்ளி என்பதால், இங்கே தனிக் கோயிலில் காட்சி தரும் தாயாருக்கும் கோமளவல்லி என்றே பெயர்.

`திரு' (லட்சுமி)வை தனது இடது பக்கத்தில் பெருமாள் வைத்துக் கொண்டதால், இந்த ஊருக்குத் `திருஇடவெந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.

(இதுபோல மனைவியை வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு, வராகர் காட்சி தரும் திருவலவெந்தை என்ற கோயில் மகாபலிபுரத்தில் இருக்கிறது.)கோமளம் என்ற தாயாரின் பெயர் திரிந்தே கோவளம் என்ற பெயரும் ஏற்பட்டது!



தோரணவாயிலின் மேல்மண்டபத்தில், ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- இடது காலை மடக்கி ஆதிசேஷன் தலைமீது வைத்து, அத்தொடையில் அகிலவல்லித் தாயாரைத் தாங்கி கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.



உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். 


ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.  ஆழ்வார்கள், தும்பிக்கையாழ்வார், சத்தியன், அச்சுதன், அநிருத்தன், வைஷ்ணவி ஆகியோரும் இந்த ஆலயத்தில் தரிசனம் தருகிறார்கள்.



ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார்.

வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.

ஆதிசேஷன் தன் பத்தினியுடன் பெருமாளின் காலடியில் சேவை சாதிப்ப தால், ராகு- கேது தோஷ நிவர்த்தி தலமாகவும்; ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் தேவியருடன் காட்சி யளிப்பதால் சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது விளங்குகிறது.

திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என முழு நம்பிக்கையுடன் பக்தர்கள் கூறுகிறார்கள்

விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஒன்று விரும்பும் ஆணோ, பெண்ணோ- இங்குள்ள கல்யாண தீர்த்தத்தில் நீராடி விட்டு, மிகவும் பயபக்தியுடன் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் இரண்டு கஸ்தூரி மாலைகளுடன் தன் பெயரில் அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச் சனை செய்துவிட்டு, அர்ச்சகர் கொடுக்கும் ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு கோவிலை ஒன்பது முறை வலம் வர வேண்டும். பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கிவிட்டு, அந்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று பத்திர மாக சுவரில் மாட்டி வைக்க வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சகிதமாக பழைய மாலை யுடன் வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து விட்டுச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

தினந்தோறும் திருமணம் செய்துகொண்ட பெருமாளை தரிசனம் செய்வதால், இங்கே வரும் பக்தர்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற்றுவிடுகிறது. 

இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.

பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.



உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.

திருமங்கையாழ்வார், இந்தப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்.அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோதுகூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவுதான்.திருப்பதி குளக்கரையில் அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், `ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான்' என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார்.அதனால், திருவிடந்தை பெரு மாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.



108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும்தான்.  உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ் டிப்பொட்டு இயற்கையாகவே அமைந் துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.


தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

விரைவில் திருமணப் பேறை அருளும் திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவிலை நீங்களும் சென்று தரிசியுங்கள்.

சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.

மாமல்லபுரம் செல்லும்  வழியில் திருவிடந்தையில்  உள்ள இந்த திருக்கோவிலுக்குச் சென்று  ஆறரை அடி உயரத்தில் பிரமாண்டமாக அருளாட்சி புரியும் நித்யகல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை பளபளவென ஒளி பொருந்தியதாக மாறும்.

 

 


 

 

No comments:

Post a Comment