Sunday, 19 June 2016

ஸ்ரீரங்கம் ஜேஷ்டாபிஷேகம்!



வாழித்திருநாமங்கள்

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடத் தாய்மகனார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கு மீமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலையெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாளெங்கள் பிரானடிகள் வாழியே!


பெரிய பிராட்டியார்

பங்கயப்பூ விற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற்சேனை மன்னர்க்கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!

நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், ஏழு பிராகாரங்கள் கொண்டதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கத்தில்வருடத்திற்கு ஒருமுறை ஆனிமாத கேட்டை நட்சத்திரத்தன்று "ஜேஷ்டாபிஷேக' விழா நடைபெறுகிறது.

தேவர்கள்அமைத்தவை "திவ்ய க்ஷேத்திரங்கள்' என்றும்; சித்தர்கள் ஸ்தாபித்தவை "ஸைத்தம க்ஷேத்திரங்கள்' என்றும்; மனிதர்கள் அமைத்தவை "மானுஷ க்ஷேத்திரங்கள்' என்றும் சொல்லப் படுகின்றன.

இந்த நால்வகை க்ஷேத்திரக் கலவைதான் ஸ்ரீமந் நாராயணனின் நூற்றெட்டு திவ்ய தேசங்களாகும். இதில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.

பரவாசுதேவரின் பிம்பத்தைக் கொண்ட ஸ்ரீரங்கவிமானத்தை, ஸ்ரீரங்கப் பேராலய சைத்யகூட காயத்ரீ மண்டபம் தாங்குகிறது. சுமார் 30 அடி நீளம் கொண்ட கருவறைக்குள், 21 அடி நீளத்தில் கரிய திருமேனியனான பெரியபெருமாள், தென்திசை நோக்கி யோக நித்திரை புரிந்தபடி இந்தப் பூவுலகைக் காக்கிறார்.



இந்தப் பெரிய பெருமாளுக்கே ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடக்கிறது.

நூற்றெட்டு மூலிகைப் பொருட்களுடன், வைரப்பொடியும் கலந்து உருவான மூலவரின் திருப்பாதங்களுக்குத் தான் தினசரி அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பூர்ணாபிஷேகத்தையே ஜேஷ்டாபிஷேகம் என்பர்.

இந்த ஆனித் திருமஞ்சனத்தின்போது பெருமாளது திருக்கவசங்களை யெல்லாம் களைந்துவிட்டு, ஆகம விதிப்படி ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். இந்த நாளில் கருவறையை தூய்மை செய்து, பெருமாள் கவசங்களில் குறைபாடுகள், பழுதுகள் இருந்தாலும் சரிசெய்வார்கள்.

வழக்கமாக ஆலயத்தின் வடக்குப் பக்கம் ஓடும் கொள்ளிடம் நதியிலிருந்துதான் செப்புக்குடங்களில் நீர் கொண்டு வருவார்கள்.



ஜேஷ்டாபிஷேத்தின்போது மட்டும், ஆலயத்துக்கு தெற்கில் ஓடும் காவேரியிலிருந்து தங்கக் குடங்களிலும் வெள்ளிக்குடங்களிலும் தீர்த்தத்தினை சேகரித்து யானைமீது கொண்டு வருவார்கள். தீர்த்தம் சேகரிக்கும்போது, பாசுரங்கள் மற்றும் வேத பாராயணம் ஓதுவார்கள். யானையின்மேல் தீர்த்தம் வரும்போது, யானையின் முன்புறத்தில் கோவில் அடியார்கள் மூன்று வெள்ளிக்குடங்களிலும்; ஸ்ரீபாதம் தாங்குவோர், சுற்றுக்கோவிலார் முதலானோர் 108 செப்புக்குடங்களிலும் தீர்த்தம் கொண்டுவருவார்கள்.இவ்வாறு ஊர்வலம் வரும்போது, யானையின் முன்புறம் வாத்தியங்கள் முழங்க, பின்புறம் வேதபாராயண கோஷங்கள் ஒலிக்கும்.

இந்தக் காட்சியை தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இதற்காகவே சாலையின் இருபுறமும் பக்தர்கள் கூடியிருப்பார்கள்.



மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் முடிந்ததும், கோவில் ஊழியர்களால் அரிய மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மணமிக்க தைலக்காப்பை இடுவார்கள். இந்தநாளில் திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை சேவிக்க முடியாதபடி திரையிட்டிருப்பார்கள். அதாவது மெல்லிய வஸ்திரம் அணிவித்திருப்பார்கள்.

மூலவர் பெருமாளை தரிசிப்பதற்கு முன், கருவறைக்கு முன் காட்சிதரும் மணத்தூண்கள் எனப்படும் தூண்களைத் தழுவியபடி தொட்டு வணங்கிச்சென்றால் பாவங்கள் அழியும்; பரமபதம் செல்ல வழி கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த மணத்தூண்களுக்கும் அன்று அபிஷேகம் நடைபெறும்.

மூலவருக்கு நடைபெற்ற பெரிய திருமஞ்சனத்திற்குப் பிறகு, அடுத்த நாள் பெரியபாவாடைத் தளிகை நிகழ்ச்சி ஆரம்பமாகும். 250 படி அன்னப்பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் ஆகியவற்றை தாராளமாக சேர்ப்பார்கள். இத்துடன் உப்பும் சேர்த்து, இந்தப் பிரசாதத்தை சந்தன மண்டபத்தில் பெருமாள் முன்னிலையில் துணியை விரித்து சமர்ப்பிப்பார்கள்.

பெருமாளுக்கு அமுது செய்த பின்பு பக்தர்களுக்கு அந்தப் பிரசாதத்தை வழங்குவார்கள். பெருமாளுக்கு இட்ட தைலக்காப்பு உலர்ந்தபின் (ஒரு மண்டலம் கழித்து) மீண்டும் திருமஞ்சனம் செய்து, வஸ்திரங்கள் அணிவித்து, ஆபரணங்களால் அழகுப் படுத்தி முழு திருவுருவையும் பக்தர்கள் தரிசிக்க அனுமதிப்பார்கள்.



பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடந்த அடுத்த வெள்ளிக் கிழமை அல்லது அடுத்தவார வெள்ளிக் கிழமையில் நாச்சியாருக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

மறுநாள் திருப்பாவாடை வைபவ நிகழ்ச்சியும் பெருமாளுக்கு நடைபெற்றதுபோலவே நடைபெறும். தாயார் சந்நிதி உற்சவர் ஸ்ரீரங்கநாயகித் தாயார், மூலவர்கள் பூமாதேவித் தாயார், ஸ்ரீதேவித் தாயார் ஆகியோருக்கும் திருவாபரணங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பெருமாளுக்கு எடுத்து வந்ததுபோல் காவேரி அம்மா மண்டபத்தில் தங்கக்குடங்களில் புனிதத்தீர்த்தம் சேகரித்து யானை மேல் வைத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். பிறகு தைலக்காப்பும் இடுவார்கள்.

பெரிய பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் அமுதுபடிகளில்- குறிப்பாக அன்னத்தில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகத்தான் "பெரிய பாவாடை' (பெரிய தளிகை) எனப்படும் வைபவம் நடைபெறுவதாக ஐதீகம்.

இந்த இரு (பெருமாள்- தாயார்) ஜேஷ்டாபிஷேகத்தை தரிசித்தால் நம்வாழ்வில் சகல பாக்கியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.






No comments:

Post a Comment