Sunday, 19 June 2016

சிறப்பான வாழ்வருளும் ஸ்ரீ ரங்கம்!



அரங்கநாதர் எனும் பெயரில் ரங்கநாயகித் தாயாரோடு திருமால் எழுந்தருளியுள்ள தலம் இது. பூலோக வைகுண்டம் என பக்தர்களாலும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்டு வரும் தலம். 108 வைணவ திவ்ய தேச திருத்தலங்களுள் முதல் திருத்தலம். ஸ்ரீரங்கநாதன், ஆதிசேஷன் மீது துயில் கொண்ட திருக்கோலம். தெற்கு முகம் நோக்கி சயனித்திருக்கிறார்.

Srirangam history
Sriranganatha History


திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து தோன்றியதாகும். பிரம்மா நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான்.

இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேக வைபவம் காண வந்திருந்த விபீஷணனுக்கு, ராமர் இவ்விமானத்தைப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரிக் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான்.




எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி’’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.




தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது.

Sriranganathar history
Sriranganatha History


பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடனும் (அந்தக் கிளி ‘‘வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்’’ என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது), தனக்கு வந்த கனவுத் தகவல் மூலமாகவும் விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானம் மற்றும் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.


இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.






தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின் போதும் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.

இக்கோயிலின் 4ம் பிராகாரம் மிகவும் அதிசயத்தக்கதாக உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் (3 முறை) நடைபெறும் தலம்.

நாலாயிய திவ்யப் பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.

வைகுண்ட ஏகாதசி, ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். பிரமாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத் திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள்.





புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.

மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாவதாரம் முடிந்த பின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரமாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று. 




ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.

இத்தலத்தில் தங்கி பல காலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம் அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனமாக அமர்த்தி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு  மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சந்நதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.

சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.

சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணிவிக்கப்பட்ட தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும்.

இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் ஆடிப் பெருக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.

கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், ‘அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.

அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, ‘கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து  தலையாட்டினார். மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சந்நதி அருகில் தனிச்சந்நதியில்  இருக்கிறார்.

கையில் சங்கு மட்டும் இருக்கிறது, சக்கரம் கிடையாது. சந்நதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது. சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது.

இதை, ‘ஆதி பிரம்மோற்ஸவம்’  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, பூபதி திருநாள் என்றே அழைக்கப்படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.

கோயில் பிராகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சந்நதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அன்னப்பெருமாள் கோயில் பிராகாரத்தில் தானிய லட்சுமிக்கு சந்நதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.

பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சந்நதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.

ரங்கநாதர் சந்நதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சந்நதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கும் இங்கு சந்நதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத நோயால் பாதிக்கப் பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமி க்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்தக் கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சந்நதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயக்கப்படுகின்றன.



No comments:

Post a Comment