"உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!' என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர்.
விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள்.
இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரிய வெற்றி முறை இன்று மறந்தேபோய்விட்டது.
உப்பின் பௌதிகவியல் சக்தி
சைவ அனுட்டான வகைகளில் ஸ்பரிச தீட்சை என்ற ஒரு வகையை அறிவீர்கள். ஸ்பரிசம் என்றால் தொடுதல் என்று பொருள். அதாவது ஆசிரியர் மாணவனின் தலையைத் தொட்டு மந்திரங்கள், சாஸ்திர முறைகளைக் கூறும்போது, அவருடைய உடலிலுள்ள உப்புத்தன்மையும் மாணவனுடைய உப்புத்தன்மையும் 40 + 60, 55 + 45, 35 + 65 என்ற சதவிகித அடிப்படையில், மாணவனிடம் பௌதிகவியல் சக்தியாகக் கலந்துவிடுகிறது. இது மாணவனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பல் மருத்துவர்கள் தினமும் உப்புக் கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால், வேறு மருந்துகளே தேவைப்படாது என்று சொல்வார்கள்.
நம் உடலில் புண் ஏற்பட்டால், குப்பைமேனி இலையோடு உப்பு சேர்த்து பற்றிட்டால் குணமாகிவிடும்.
மிளகை உப்புடன் சேர்த்துவைத்தால், வீட்டில் துர்சக்திகள் நெருங்காது.
கடல்நீரில் மூழ்கியெழுந்து சூரியனை வணங்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதன் நற்பலனைக் கண்டு ஆங்கிலமுறை மருத்துவர்களே வியக்கின்றனர்.
முத்தும், சங்குகளும் கடலில் பிறப்பது உப்புத்தன்மை இருப்பதால்தான் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முற்காலங்களில், "வீடுகளில் திருஷ்டிகள், துர்சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது' என்று ஜோதிடர்கள் சொன்னால், ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை நடுவீட்டில் வைத்து, அதை மூன்று நாட்கள் கழிந்தபிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றி விடுவது ஐதீகமாக இருந்தது.
மகாலட்சுமியே உப்பு
அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
அதனால்தான் இரவு நேரத்தில் லட்சுமிதேவி விரும்பித் தங்குகிற உப்பை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். தெய்வத்தன்மை கொண்ட உப்பை விற்பனை செய்தால் இடர்கள் வருமென்று முற்காலத்தில் சொல்வழக்கம் இருந்தது.
உப்பை ஏன் பானையில் மட்டும் போட்டு வைத்தார்களென்றால், மண்பானைக்கு ஸ்வர்ணம் என்ற பெயருள்ளது. அதாவது தங்கமென்று பொருள். இதில் தங்கமகளாம் மகாலட்சுமி வடிவ உப்பைப் போட்டு வைத்தால் பணக்கஷ்டமே வராது என்ற நம்பிக்கை இருந்தது.
உப்பு தொடர்புடைய வழிபாட்டு நியதிகள்
"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றபழமொழிகளால் இதன் சக்தியை அறிந்துள்ளோம். ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.
எதிரிகளை அடங்கிப்போகும்படி செய்ய, உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்ததை விநாயகர் பிரார்த்தனை வரிசையில் காணலாம்.
தீட்டுக்காலம், பித்ருக்களுக்குச் செய்யப்படுகிற திவச வழிபாடு தினங்களில் உப்பில்லாத பண்டங்களைச் செய்து படையலிடுவதன் காரணம், வருகை தரும் முன்னோர்களுக்கு உப்பு கூட்டிச் சமையல் செய்துவைத்தால், இங்கேயே தங்கிவிடுவதாக ஐதீகம். அரை உப்புதான் போட வேண்டுமென்று ஒருசாரர் கருத்து.
கடற்கரைகளில் மாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற பித்ரு வழிபாட்டுக் காலங்களில் தர்ப்பணம் செய்வதால், அவர்கள் உப்புக்காற்றை வாங்கியபடி மகிழ்ச்சியடைந்து வாழ்த்துவதாக ஐதீகம் உள்ளது.
கடலிலிருந்து தோன்றும் உப்பை தலையில் போட்டு அதற்குரிய மந்திரம் சொன்னால் நோய்கள் யாவும் விலகிவிடும். மந்திரிக்கவும், திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடுவது வழக்கம்.
ஆலயங்களிலுள்ள பலிபீடத்தின்கீழ் உப்பையும் மிளகையும் போட்டால், நமக்குப் பிடிக்காதவர்கள் துன்பம் எய்துவர் என்ற வழக்கம் சமீபகாலங்களில் நிலவுகிறது. இது தவறான சிந்தனை. ஆலயத் தொட்டிகளில் சிறிது உப்பைப் போட்டு, "என் துன்பங்கள் நீரில் உப்புபோன்று கரைந்திடச் செய்வாய் இறைவா' என்று பிரார்த்தனை செய்துவருவதே முறையான வழிபாடாக அமையும்.
வெளிநாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய உப்பு வழிபாடு!
வெளிநாடுகளில் இந்த உப்புப் பிரார்த்தனை ஒரு ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. தாங்கமுடியாத வறுமை, கடன், கஷ்டங்கள் ஏற்பட்டதால் டேவிட்சன் என்ற அமெரிக்க தொழிலதிபர் தனது மனைவி பிரேவ், இளம் மனைவி கிளாரா, மகள் லிவியாவுடன் கடலில் முழுகித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
தங்களை தெய்வம் கைவிட்டுவிட்டதாகக் கதறி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பிரார்த்தித்தபோது, ராட்சதக் கடல் அலை ஒன்றுடன் வந்த மூன்று பெண் உருவங்கள் கரைக்கு இழுத்து வருவதுபோல் ஒரு பிரமையை உணர்ந்து, கரைக்குத் திருப்பப்பட்டார்.
"கடவுளே! வாழ்க்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று நினைத்தால் நன்றாக வாழவிடு! எங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துவிடு!' என்று, அங்கிருந்த உப்புப் படிமங்களை நால்வருமே இருகைகளிலும் வைத்துக்கொண்டு, சூரியன் உதிக்கும் திசைநோக்கி பத்து நிமிடங்கள் பிரார்த்தித்தனர்.
பின்னர் வீடு திரும்பினர். வீட்டு வாசலிலிருந்த கடிதப்பெட்டியில் ஒரு கவர் சிரித்தபடி வரவேற்றது. என்னே ஆச்சரியம்! இவர்கள் கட்டிவந்த மாதச் சீட்டுக்கு ஜாக்பாட் தொகைமுப்பத்திரண்டு கோடி டாலர்கள் கிடைத்தி ருந்தது.
உப்பு பிரார்த்தனையை டேவிட்சன் கூற, இச்செய்தி எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆம்! வாழ்வில் சோதனைகளிலிருந்து மீண்டுவர, புனர்வாழ்வு கிடைக்க சிறந்த ஆன்மிக சாதனம் இந்த எளிய உப்பு பிரார்த்தனை!
லட்சியம் நிறைவேற லவண மந்திர ஜெபமுறை
ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் 33-ஆவது ஸ்லோகம் "சௌபாக்கிய மந்திரம்' எனப்படுகிறது. "ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' எனத் தொடங்கும் இந்த விசேடத் துதியை, இரு கைகளிலும் காசுகள் வைத்துக்கொண்டு ஜெபித்தால் நிறைவாகப் பணம் சேரும் என்ற கருத்துண்டு.
அதேபோன்று உப்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு, அதிகாலை ஐந்தரை மணி முதல் 16 முறை நமது பிரார்த்தனையைச் செய்தல்வேண்டும். இப்படியாக ஜெபம் செய்த உப்பை சேகரித்துவைத்து, 48 தினங்கள் கழித்து நீர்நிலைகளில் போட்டு வரவேண்டும். உண்மையான முறையில் சில மாற்றங்களைச் செய்துவிட்டார்கள். சரியான முறையை எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும்.
லவணம் என்பதற்கு வடமொழியில் உப்பு என்று பொருள். லவண பிரார்த்தனா நிகண்டு (A Prayer Method of Lavana) என்ற பெயரில் உப்பு பிரார்த்தனை பற்றி (மலர் மருத்துவத்தில் ஆல்ஃபா தியானம் போன்று) தனியாக ஜெபம் செய்யும் முறை, மந்திரங்கள் ஒரு சிறு கையேடு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. உப்பு வழிபாட்டை சரியாகச் செய்திட அதன் விதிகளை அறிவோம்.
பௌர்ணமி அன்றும், சுபநாளிலும் காலை ஐந்தரை மணிக்கும், லாப வேளையிலும், நல்லவை நடக்க, லட்சுமி அருள்கிட்ட, வேலை பெற போன்ற பிரார்த்தனைகளைச் செய்யலாம். இதற்கு பூர்வபாக- சுப பல பிரார்த்தனை என்று பெயர்.
அமாவாசை அன்றும் சமநோக்கு நாளிலும் எதிரி விலக, மாமியார்- மருமகள் தகராறு அகன்று ஒற்றுமையாக, தொழில்கூட்டு நண்பர்கள் ஒன்றுபட, பிரிந்திருக்கும் கணவன்- மனைவி சேர்ந்திட பிரார்த்தனை செய்யலாம். உதாரணமாக,
வட்டம் ஒன்றை வரைந்து, அதில் ஆசனமிட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இரு கைகளிலும் உப்பு வைத்தபடி,
"ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா'
என்று மானசீக முறையில் 108 முறை ஜெபித்து சூரியனை வணங்கிவிட்டு, 16 நிமிடங்களில் எழுந்து பூஜையறையில் மற்ற தெய்வங்களை நினைத்து வழிபடவேண்டும். இப்படி 48 தினங்கள் செய்து வந்தபின் சேர்த்துவைத்த உப்பை கடல்நீரில் போட்டுவிடவேண்டும். ஒவ்வொரு தசைக்கும் அந்தந்த கிரக மூல மந்திரங்களை ஜெபித்தபின் நம்பிக்கையூட்டும் தியானம் செய்தல் அவசியம்.
மாணவர்களுக்குக் கல்வி அறிவு வளர...
"நான் நன்றாகத் தேர்வு எழுதிவிடுவேன். அனைத்துப் பாடங்களையும் படித்து மனதில்பதிந்துள்ளேன். உள்ளமும் உடலும் புத்துணர் வோடு உள்ளது. எனக்கு ஹயக்ரீவர், சரஸ்வதி தேவி துணை நிற்கிறார்கள். நான் சாதிப்பது உறுதி' என்று தியானிக்கவேண்டும். சதுர வட்டத்தில் அமர்க.
உடல்நலம் பெற...
"ஆரோக்கியம் என்னுடனே உள்ளது. உழைத்துக் களைத்ததால் இன்று சோர்வாக உள்ளேன். என் உடல்நிலை சீராகவே உள்ளது. அதற்கு ஆயுர் தேவியும், தன்வந்திரி பகவானும் துணை செய்கிறார்கள். நான் விரைவாக பூரண நலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.' இதற்கு நட்சத்திர வட்டம் போடுக.
செல்வ வளம்பெற்று தொழிலில் உயர்ந்திட...
பத்மம் என்கிற தாமரை வரைந்து, இரு சதுரா காரம் வரைந்து, அதிலமர்ந்து சர்வ முத்ராவில் (இருகைகளைச் சுருக்கி) அல்லது சிவாகம முறையில் உள்ள ரிஷப முத்திரை முறையில் உப்போடு கைகளை மேலே தூக்கியபடி வைத்துக்கொண்டு, "நான் தொழிலில் அபரிமித வளர்ச்சி காண்பது உண்மை. என் தொழில் கூட்டாளிகள் நல்லவர்கள். எங்கள் கம்பெனி லாப திசை நோக்கிச் செல்கிறது. அதற்கு சௌபாக்கிய லட்சுமி, குபேரன் துணை நிற்கிறார்கள். "ஓம் ஐம் க்லீம் க்லௌம் சௌம் லக்ஷ்மீ குபேராய மம ஐஸ்வர்யம் தேகிமே சதா' என்று 108 முறை வழிபடவேண்டும்.
ஜபத்திற்கும் முத்திராவுக்கும் உப்புக்கும் தொடர்புகள் உண்டு. இவற்றில் வெற்றிபெற சிவதீட்சா முறை, இரு சிவாகம முத்திரைகளை அறிந்து கொண்டால் போதும். உங்கள் லட்சியங்கள் எதுவாயினும் லவண (உப்பு) பிரார்த்தனையால் நிறைவேறும்; பிரச்சினைகள் அகலும் என்பது லவண சாஸ்திரம் கூறும் உண்மை. உப்பு வழிபாட்டைச் செய்து வாழ்வில் வெற்றி காண்பீர்.
குறிப்பிட்ட ஆசனங்களில் அமர்ந்து தான் மந்திர ஜெபம், பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமென்று ஆகம பூஜா சாஸ்திர விதி கூறுகிறது. வெறும் தரையில் அமர்ந்துசெய்தால் ஜெப பலன்கள் பூமிக்குச் சென்றுவிடும்.
ஆசனம், ஜெபம் சொல்லிக் கொடுப்பவர்கள், "முதல் ஜெபமந்திரத்தை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்துவிடுக' என்று கூறுவதைப் பார்த்திருப் பீர்கள். அதற்காகவே குறிப்பிட்ட ஜெப பிரார்த்தனைக்குரிய ஆசனங்களை வரைந்து, அதில் அமர்ந்து சக்தி சிதறலைத் தடுத்துக்கொண்டு, உடலுக்கு கவசமாகவும் பயன்படுத்துகிறோமென்று பிரார்த்தனை மந்திரநிகண்டு கூறுகிறது. தற்காலத்தில் சிலர் மடியில் பேப்பர் வைத்தபடி எல்லா இடங்களிலும் அமர்ந்து உப்பு பிரார்த் தனை செய்யச் சொல்கிறார்கள். இது அவரவர்களுடைய சொந்தக் கருத்துகளாகும். ஆன்மிக மும் அறிவியலும் கலந்த உப்பு வழிபாட்டை முறையாகச் செய்வோம்; லட்சியங்களை அடைந்திடுவோம்.
கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க. உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனு சொல்வாங்க.
“அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு நியூஸ்பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப் பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற நியூஸ் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத் தருகிறார் ஷீலா.
நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.
‘‘18 வருஷம் முன்னாடி எங்க அம்மா என்னை எங்க சொந்தக்காரங்க வீட்டுலவிட்டுட்டு போயிட்டாங்க. தினமும் அவங்களை நினைச்சு அழுவேன். இங்கே வந்த பிறகு உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க. அம்மா என்னைப் பாக்க வரணும்னு நினைச்சு அஞ்சு நாள் உப்பு மந்திரம் செஞ்சேன். இவ்வளவு நாள் என்னைப் பாக்க வராத அம்மா ஆறாவது நாள் வந்து நின்னாங்க. இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு...
‘‘எனக்கு ரெண்டு குழந்தைங்க... கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தோம். நிறைய மனக்கஷ்டம். நான் எதைச் செஞ்சாலும் மாமியார் குத்தம் சொல்வாங்க. நானும் பதிலுக்குப் பதில் பேசுவேன். என் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வந்ததும் அவர்கிட்ட சொல்லி சண்டை போடுவேன். ஒரு கட்டத்துல அந்தக் குடும்பத்துல வாழவே முடியாதுங்கிற நிலை... கிளம்பி வந்துட்டேன். உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க... பத்து நாள் தொடர்ந்து செஞ்சேன். பதினோராவது நாள் காலையில என் வீட்டுக்காரர் வந்து நின்னார். அடுத்த சில நாட்கள்ல என் மாமியார் போன் பண்ணி பேசினாங்க. என் மேல உள்ள தவறுகளையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம்...
கண்ணீர் ததும்ப கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிக்கும் பெண்கள் சொல்கிற கதைகளைக் கேட்க மிரட்சியாக இருக்கிறது. இங்கு படிக்கும் 600 பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது இந்த உப்பு மந்திரம். மருத்துவ உலகத்தில் எவ்வளவோ நவீன ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்குச் சவால் விடுவது போல உப்பு மந்திரத்தின் மகத்துவங்களை அடுக்குகிறார்கள் இந்தப் பெண்கள்!