Tuesday, 8 November 2016

இஷ்ட வரங்கள் அருளும் கந்த சஷ்டி!

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.

காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.

அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார்.

வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.

முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட,
சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார்.

அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன.

அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.

சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைத்தார்.


கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.
 
கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.
 
ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப் பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்றுச் சுகமுடன் வாழலாம்.
 
 

No comments:

Post a Comment