Tuesday, 8 November 2016

திருவருள் பொழியும் திருச்செந்தூர் கந்தசஷ்டி!

ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி முருகனுக்கு உகந்த நாள். 

இந்நாளில்தான் சூரசம்ஹாரம் நடந்தது. அதனால் சஷ்டி திதி மேலும் சிறப்பு பெற்றது. பக்தர்கள் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள். செந்தில்நாதன் சூரபத்மனை சம்ஹரித்த, சூரசம்ஹாரம் நிகழ்ந்த தலம் திருச்செந்தூர்.அசுரகுருவான சுக்ராச்சாரியார், அசுரகுலம் தழைக்க அசுரகுல மங்கையான மாயை என்பவளை அழைத்து கஸ்யப முனிவரை மயக்கும்படி கூறினார். அவளும் அப்படியே செய்தாள். அதனால் கஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் மூன்று பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர். பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்; மகள் அஜமுகி. பிள்ளைகள் பிறந்ததும் மாயை முனிவரைவிட்டு விலகினாள்.அசுரப் பிள்ளைகள் மூவரும் கடும் தவம்புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதில் முக்கியமான- இயற்கைக்கு மாறான ஒரு வரத்தையும் பெற்றனர். அது என்னவென்றால்- தாயின் கர்ப்பத்தில் பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே இறப்பு நேரவேண்டும் என்பதே. அதனால் ஆணவம் அதிகமாகி மக்கள், தேவர்கள் அனைவருக்கும் பற்பல கொடுமைகளை 108 சதுர்யுகங்கள் புரிந்தனர்.தேவர்கள் அசுரர்களின் கொடுமைகளை சிவனிடம் முறையிட்டனர். அவர்கள் குறைதீர்க்க சிவபெருமான் நெற்றிக் கண்களிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கினார். அவை சரவணப் பொய்கையில் சேர்ந்தன.முருகன் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகப் பிறந்ததும், கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டனர். பிறகு பார்வதி அக்குழந்தைகளை பாசமுடன் ஒருசேர அணைத் தாள். ஆறு குழந்தைகளும், ஓருடலாக, ஆறு தலை, 12 கரங்களுடன் தோன்றின. அவன் வளர்ந்ததும் சிவன் அவனது அவதார நோக்கத்தை விளக்கி, சூரபத்மனுடன் போரிடக் கூறினார்.பார்வதி முருகனுக்காக தன் சக்தியனைத்தையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் என்ற பெயரில் முருகனிடம் கொடுத்தாள். (இந்த நிகழ்ச்சிதான் தீபாவளிக்குப்பின் 5-ஆம் நாள் சிக்கல் தலத்தில் சிங்காரவேலர் தன் தாயிடம் வேல் வாங்கும் படலமாக நிகழ்கிறது. வேல் வாங்கும் சமயம் முருகனின் முகத்தில் வியர்வை வழியும் அற்புத காட்சியை ஆண்டுதோறும் இன்றளவும் காணலாம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பர்.)பார்வதி தந்த சக்தி வேலாயு தம், சிவன் உருவாக்கித் தந்த வீரபாகு தலைமையிலான படையுடன் போர்புரிய முருகன் சென்றான். ஐந்து நாள் போரில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் கார்களின் படைகள் அனைத்தையும் பாலமுருகன் அழித்தான். 6-ஆம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் அழிந்தனர்.குமரன் சூரனை வதம்செய்ய போரிடும்போது, சூரபத்மன் இந்த சிறுவனையா கொல்வது என எண்ணினான். இருப்பினும் போர்தானே என எண்ணிப் போரிட்டான். இதையறிந்த கந்தன் ஒரு நொடி தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி மறைத்தான். அந்த ஒரு நொடியில், "ஆஹா, இவன் தன் பேரனல்லவா' என எண்ணினான் சூரன். ஆனால் மறுநொடியே மாயை அதை மறைத்துவிட, மீண்டும் போர் செய்ய ஆரம்பித்தான். சூரன் மாமரமாகி கடலில் தலைகீழாக நின்றான். (அந்த இடம் மாம்பாடு எனப்படுகிறது. இங்கு இப்போதும் மாமரம் தழைப்பதில்லை.)முருகன் அந்த மாமரத்தை இரு கூறாக்கி ஒரு பகுதியை மயிலாகவும் ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றினான். அப்போது சூரன் மனம்திருந்தி தன்னை மன்னிக்கும்படி கேட்க, மயிலை வாகனமாக்கி சேவலை கொடியாக்கினான்.
முருகன் சூரனைக் கொல்லவில்லை. அவனை மனம் திருந்தச் செய்து ஏற்றுக்கொண்டான்.சூரபத்மன் முருகனின் தாத்தா. முற்பிறவியில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். தட்சன் மகள் தாட்சாயிணி. அவளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்ததால் சிவனின் மாமனாரானான். சிவனது மாமனார் முருகனுக்கு தாத்தா முறையல்லவா? பேரனை தாத்தா சுமப்பது சரிதானே.ஞானப்பழம் வேண்டி முருகன் மயில்மீது உலகைச் சுற்றிவந்தான். அது மந்திர மயிலாகும். சூரனுடன் போரிடச் செல்லும்போது இந்திரன் மயிலாகி முருகனைச் சுமந்தான். அது இந்திர மயில். திருச்செந்தூரில் சம்ஹாரத்திற்குப்பின் சூரபத்மன் மயிலானான். அது அசுர மயில். எனவே முருகனுக்கு மூன்று மயில்கள் உள்ளன.செந்தூரில் சஷ்டி விழாவின்போது மட்டுமே முருகனின் ஆறு முகங்களையும், 12 கரங்களையும் முழுமையாக தரிசிக்கலாம். மற்ற நேரம் அங்கவஸ்திரத்தால் மூடிவைத்திருப்பார்கள். ஒரு முகம், இருகரம் மட்டுமே தரிசிக்கமுடியும். சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் சிவபூஜை செய்வதற்காக உருவானது தான் திருச்செந்தூர் கோவில். இங்கு முருகன் கையில் ருத்ராட்ச மோலை, ஜெபமாலை, பூமாலையுடன் தவக்கோலத்தில் உள்ளார். கருவறையின் பின்னுள்ள சுரங்க அறையில் முருகன் வணங்கிய பஞ்சமுக லிங்கங்கள் உள்ளன. அவற்றை இப்போதும் காணலாம்.தேவர்களுக்கு உதவிசெய்த முருகனுக்கு நன்றி சொல்லும்விதமாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்து, தன் வெள்ளை யானை ஐராவதத்தையும் திருமணப் பரிசாகக் கொடுத்தான்.
திருச்செந்தூரில் சஷ்டி விழா

சஷ்டி விழாவின் ஆறு நாட்களிலும் வேள்விக்கூடத்தில் காலையும் மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் வைத்து ஊர்வலம் வருவார்கள். சண்முக விலாச மண்டபத்தில் அமரவைத்து தீபாராதனை செய்வார்கள்.சுவாமி வலம்வரும்போது அடியார்கள் கந்தசஷ்டி கவசம், வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு, கந்தர் அனுபூதி பாடியபடி பின்னே வருவார்கள். ஆறாம் நாள் மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அப்போது கடல் அலைகள் உள்வாங்கி இடம்தரும் அதிசயத்தை ஆண்டுதோறும் கண்டிப்பாகக் காணலாம். இவ்விழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலையா, கடல் அலையா என எண்ணத் தோன்றும். முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமாக்களுக்குச் சமம்.
சஷ்டி விழா நியதிகள்

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள்தொடங்கி விரதம் மேற்கொள்ளவேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் ஒருபொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு காலை, மாலை, இரவு பட்டினி இருக்கவேண்டும். துவைத்து உலர்த்திய ஆடைகளையே அணியவேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் நல்லது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பத்தில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து பூஜிக்கவேண்டும். வெல்ல மோதகம் நிவேதனம் செய்யவேண்டும்.ஆறநாட்களும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம், கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யவேண்டும். அல்லது படிப்பதைக் கேட்கவேண்டும். 6-ஆம் நாள் கந்த சஷ்டி பூஜை செய்யவேண்டும். 7-ஆம் நாள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் உடனமர்ந்து உண்டு விரதத்தை முடிக்கவேண்டும். இப்படியாக ஆறு ஆண்டுகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு முருகன் பேரருள் பூரணமாகக் கிடைத்து நல்வாழ்வு பெறலாம்.கந்த சஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாத வளர்பிறை சஷ்டியன்றும் தவறாமல் விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச்செல்வம் கிட்டும். அத்துடன் முருகன்போன்ற பிள்ளை பிறப்பான். ஏன், முருகனேகூட வந்து பிறந்துவிடுவான். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர். இதன் பொருள் யாதெனில் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கருவறையில் குழந்தை உருவாகி பிள்ளை பிறக்கும் என்பதுதான். அகம் என்னும் நெஞ்சில் ஞானமும் பிறக்கும்.
சரவணபவனை மனமாரத் தொழுதால் அபயகரம் நீட்டி தவறாமல் காப்பான்!

No comments:

Post a Comment