51 சக்தி பீடங்கள் - 30
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் சாமுண்டிமலையில் அமைந்துள்ளது, ஸ்ரீசாமுண்டீஸ்வரி கோயில். கர்நாடகாவில் வைணவ, சைவ ஆலயங்கள், புகழ்பெற்ற அம்மன் கோயில்கள் என பல இருந்தாலும், மைசூரில் கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவி தனி சிறப்புடையவள். சாமுண்டீஸ்வரியின் புகழ் பரவப்பரவ மகாபலகிரி என்ற இந்த மலை, சாமுண்டிமலை என்றே அழைக்கப்படலாயிற்று. மைசூரை ஆண்ட மகாராஜாக்கள் இந்த சாமுண்டீஸ்வரியையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1573) மைசூரை நான்காம் சாமாராஜ உடையார் ஆண்டுவந்தார். சாமுண்டியைத் தொழுதுவிட்டு மன்னர் மைசூருக்குத் திரும்பினார். திடீரென்று வானம் கிழிந்தது. கடலையே தூக்கி மேலேயிருந்து கவிழ்த்தது போல வெள்ளமாக மழை பொழியலாயிற்று. மரங்களை வேரோடு சாய்க்கும் சீற்றத்துடன் காற்று வீசியது.
ஒரு பெரிய மரத்தடியில் மன்னரின் பல்லக்கு அவசரமாக இறக்கப்பட்டது. அன்னைக்குப் பூஜை செய்த குங்குமத்தை மன்னர் கையில் எடுத்தார். கோயில் இருக்கும் திசை பார்த்து நெற்றியில் இட்டுக் கொள்வதற்காக முனைந்தபோது கோயிலை மரங்கள் மறைத்தன. பத்தடி தள்ளிப்போனபோது சந்நதி மங்கலாகத் தென்பட்டது. மன்னர் அன்னையை வணங்கி குங்குமத்தை நெற்றியில் பூசிய கணத்தில் பார்வையைப் பறிப்பதுபோல் ஒரு மின்னல். அதைத் தொடர்ந்து வானமே வெடித்தது போன்ற பேரொலியுடன் ஓர் இடி விழுந்தது.இத்தனை நேரம் பல்லக்கின் அருகில் எந்த மரத்தின் கீழ் மன்னர் ஒதுங்கி இருந்தாரோ, அந்த மரத்தின் மீது இடி இறங்கி குபீரென்று பற்றி எரிந்தது. மன்னர் அதிர்ந்து போனார். அன்னையின் சந்நதியைத் தரிசிப்பதற்காக அவர் மட்டும் நகராமல் அங்கேயே நின்றிருந்தால்...? நினைப்பே அவர் இதயத்துடிப்பை நிறுத்தியது. சொல்ல வேண்டியதை அவருக்கு சொல்லி முடித்து விட்டது போல சட்டென்று மழை ஓய்ந்தது.
மன்னர் அப்படியே அன்னையின் சந்நதி நோக்கி சாஷ்டாங்கமாக வணங்கினார். அந்த அன்னையின் கோயிலை மைசூரின் எந்த மூலையிலிருந்தும் பார்க்கும்படியாக ஒரு கோயில் உருவாக்கினார். சாமுண்டி மலையில், கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் ஆதிசக்தி சாமுண்டீஸ்வரிக்கு அழகான ஆலயம் அமைந்திருக்கிறது. அன்னை சாமுண்டீஸ்வரியின் திருமுகம் காண மலை உச்சிக்கு வந்துசேரும் பக்தர்களை முதலில் வரவேற்பது மஹிஷாசுரனின் வண்ணமயமான, நெடிதுயர்ந்த சுதைச்சிற்ப வடிவம். திராவிடப் பாரம்பரியத்தில் கட்டப்பட்ட திருத்தமான கோபுரம். கோபுர வாசல் கடந்ததும் வலதுபுறம் விநாயகரின் சிறிய சிற்பம். சிலபடிகள் ஏறியதும் கொடிமரக் கம்பம். அன்னையின் பாதங்கள் பதிந்த அடையாளம். அவள் அருள் முகம் பார்த்து அமர்ந்திருக்கும் சிறு நந்தி. சிறகசைக்கும் மணிப்புறாக்களும், மணங்கமழும் மலர்களும்,தொட்டுத் தழுவும் தென்றலும் அந்த அமைதிப் பிரதேசத்தில், கருவறையில் அன்னையின் தரிசனம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது. அம்பிகையின் 51 சக்திபீடங்களுள் இது சம்பத்ப்ரத பீடமாகப் போற்றப்படுகிறது.
பளபளக்கும் பட்டாடைகள், மின்னல் போன்று ஒளியை வாரி இறைக்கும் ஆபரணங்கள், சிறப்பு நகையாக மைசூர் மன்னர் வழங்கிய நட்சத்திர மாலை, திருமேனியை அலங்கரிக்கும் பல வண்ண மலர்கள். மண்ணுலகைக் காத்து ரட்சிக்கும் அன்னை சாமுண்டீஸ்வரி, சக்திமயமாகக் காட்சி அளிக்கிறாள். மைசூரு என்ற பெயர் வருவதற்கு ஆதிதேவதை என்ற சாமுண்டீஸ்வரிதான் காரணம். மைசூரை காணவருபவர் யாராக இருந்தாலும், முதலில் சாமுண்டீஸ்வரி தேவியின் தரிசனம் பெற்றபின்தான் பிற சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பார்கள். மலை மீது உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறாள். கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்தியும், எதிர் வரிசையில் மஹிஷாசுரனும் வரவேற்கிறார்கள். பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறாள்.
தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்றழைக்கப்பட்டது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, தனக்குக் காட்சி கொடுத்த சிவபெருமானிடம், தனக்கு சாகாவரம் கோரினான். சிவன் வழங்கினார். தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான் அசுரன். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோற்க இறுதியாக சிவனிடம் சென்று, ‘நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். கொடுத்த வரத்தை திரும்பப் பெறுங்கள் அல்லது அவனை அழிக்க ஒரு வழி சொல்லுங்கள்,’ என்று முறையிட்டனர். ‘நான் வரம் கொடுப்பவன் மட்டுமே. கொடுத்த வரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதேசமயம் மஹிஷாசுரனுக்கு ஒரு பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.
அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும்,’ என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண் பக்தர்கள் பார்வதியிடம் வேண்டி முறையிட்டனர். அசுரனை அழிக்கத் தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனின் வரம் பெற்று, சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் அவதரித்தாள். சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனுடன் போர் தொடுத்து அவனை வதம் செய்தாள். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கி, தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதன்படி தேவி சாமுண்டிமலையில் குடிகொண்டாள். கோயிலில் விநாயகரைத் தவிர, மகேஸ்வரனுக்கும், குமாரசுவாமிக்கும் சிறு சந்நதிகள் அமைந்துள்ளன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தவிர பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அமைமோதுகிறது. தேவி மகிஷனுடன் போர் செய்த ஒன்பது நாட்களும் நவராத்திரி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் வேதபாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் என்று கோயில் மட்டுமல்லாது மைசூர் முழுக்க உற்சவம்தான். தசரா பண்டிகை முடிந்ததும் பௌர்ணமியன்று ரதோற்சவம். அதைத் தொடர்ந்து இரவைப் பகலாக்கும் தெப்போற்சவம். உற்சாகமான பக்தர்கள் ஆயிரம் படிகள் ஏறி கோயிலுக்கு நடந்தும் வருகிறார்கள். எண்ணூறு படிகள் ஏறியதும் மகா நந்தியை தரிசிக்கிறார்கள். நெஞ்சுக்கு நிம்மதி, அன்னை சாமுண்டியின் சந்நதி. ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி அவதரித்ததால், ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மூன்றாவது வெள்ளிக்கிழமை தேவி அவதாரநாள் என்பதால் மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment