Friday, 4 November 2016

23 - ஞானமருளும் ஞானப்ரசூனாம்பிகை!


51-சக்தி பீடங்கள் - 23
சுவர்ணமுகி என்றழைக்கப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம் திருக்காளத்தி!

ராகு, கேதுவான சாயா கிரகங்களின் தீமை  அடக்கப்பட்டு, நல்ல கிரகங்களாக இங்கே நன்மை அருள்கின்றன.

ஞானம் தரும் நாயகியாக அம்மன் இங்கே அருள் பெருக்குகிறாள். ஞானப்பூங்கோதை,  ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார் குழலாள் என்று பற்பல பெயர்களில் அழைக்கப்படும் அம்பிகையின் சந்நதி அற்புதமாகப்  பொலிகிறது. உள்ளே நுழையும் இடத்தில் உயரமான அலங்காரத் திருவிளக்கு. அடுத்து சிம்ம வாகனம். இதைத் தொட்டு வணங்கச் சொல்கிறார்கள். ஈசனின்  சந்நதியில் நந்திதேவரைத் தொடக்கூடாது. ஆனால், இந்த அம்பாள் சந்நதி சிம்மத்தைத் தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு வணங்கினால், நினைத்த காரியம்  கைகூடும் என்று நம்பிக்கை.

அம்பாள் சந்நதிக்குள் நுழைகிறோம். நின்ற திருக்கோலத்தில் ஞானப்ரசூனாம்பிகை. இரண்டு திருக்கரங்கள். அம்பிகையின் இடுப்பில் ஒட்டியாணமாகக்  கட்டப்பட்டிருக்கும் கேது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை சார்த்தப்பெறுகிறது. அம்பாளுக்கு முன்னால், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த  அர்த்தமேரு. ஞானப்ரசூனாம்பிகை, ஞானமும் அறிவும் வடிவானவள். இவளை வணங்கினால், கிரக தோஷங்கள் தீரும்; அறிவு கூடும். அம்பிகை இங்கே  ஞானப்ரசூனாம்பிகை ஆனது எப்படி? கயிலாயத்தில் ஒருநாள். சிவ பஞ்சாட்சர மந்திரத்தைத் தனக்கு உபதேசிக்கும்படி, ஐயனிடம் தேவி வேண்டி நின்றாள்.   அதற்கு ஒப்புக் கொண்ட ஐயனும், அம்மையை மௌன நிலைமைக்குப் போகச்செய்தார். ஆனால், ராஜசகுணம் தலைதூக்கத் தன் பணிப்பெண் மாலினியிடம் தான்  உபதேசம் பெற இருப்பதை அம்பிகை கூறிவிட்டாள். இதனால், மானுடப் பெண்ணாகும்படி சபிக்கப்பட்டு பூமிக்கு வந்தாள்.

நாரத ரிஷி சொன்னதற்கேற்ப, ஸ்வர்ணமுகி நதி தீரத்தை அடைந்து, வாயுலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து தவம் புரிந்தாள். காற்றை மட்டுமே சுவாசித்து, அகன்ற  வில்வ தளங்களால் பூஜித்து, தவம் செய்தாள். தனது தவத்தைக் காக்க, துர்க்கையைக் காவல் வைத்தாள். வேண்டுமென்றே இறையனார் பிரளய வெள்ளத்தை  ஏற்படுத்த, துர்க்கை அந்த நீர் முழுவதையும் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தாள். அம்பாள் மேலும் கடுந்தவம் புரிய, தைமாதப் பௌர்ணமி அன்று இறையனார்  பிரத்தியட்சமாகி, சாத்விக குணம் நிரம்பப் பெற்றிருந்த தன் நாயகிக்குப் பஞ்சாட்சரியை உபதேசித்தார். அம்பிகை, மானுடப் பெண்ணாக, இரண்டு கரங்களுடனே,  ஞானப்ரசூனாம்பிகா ஆனாள். ஹஸ்தஸ்த ஸாகர என்றழைக்கப்படும் துர்க்கை (பிரளய சமுத்திரத்தைக் கரத்தால் குடித்தவள்), கருமை நிறம் மாறித் தங்க நிறம்  பெற்றாள். அதனாலேயே, கனக துர்க்கா ஆனாள். சந்நதியைத் தனியாக உள்வலம் வரலாம். கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.

சந்நதியைவிட்டு வெளியே வந்து, மீண்டும் பிராகாரத்தை அடைகிறோம். சந்நதிக்கு நேர் எதிரில், பிராகாரக் கூரையில் ராசிச் சக்கரம் ஓவியம். அம்பாள் எதிரில்  நின்று கொண்டு, அவரவர் ராசியைப் பார்த்து, அம்பாள் பாதங்களைப் பணிந்து வழிபடுதல் மரபு.  அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாக கோடிட்டுக்  காட்டப்பட்டுள்ள தரை மூலையில் மூன்று தலைகள் சேர்ந்திருக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு  அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி  என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள்  சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள்.

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத  பிரச்னையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு-கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்னையிலிருந்து விடுபடுகின்றனர். சிவனின்  உடலிலேயே பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு - கேது தோஷம் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலின் மற்றொரு  தனிச்சிறப்பு, பொதுவாக சூரிய, சந்திர கிரகண காலங்களில் எல்லா கோயில்களும் மூடப்படும். ஆனால், இத்திருத்தலத்தில் மட்டும்தான் அப்பொழுது சிறப்பு  பூஜைகள் செய்யப்படும். இங்குள்ள சரஸ்வதி தீர்த்த நீரை, பிறவியிலேயே பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.  சுவாமிமீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும் போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில்  இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு  வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது.  கருவறை அகழி அமைப்புடையது. கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப்  பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தருகின்றனர். மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது)  வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே. இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசாத்தும் வழக்கமில்லை;  காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தினுள்  பிரவேசிப்பதே முக்தி எனப் படுகிறது.

சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் ரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து  110 கி.மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம்.

1 comment: