Friday, 4 November 2016

26 - மகோன்னதமாக வாழவைப்பாள் மூகாம்பிகை!

51 சக்தி பீடங்கள் - 26
காசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டில் பல அட்டூழியங்கள் செய்து வந்தான். தேவர்கள், அனைவரும் அவனுடைய இம்சை  தாங்க முடியாமல் தலைமறைவாயினர். அதனால் தலைக்கனம் அதிகமான மூகாசூரனின் தொல்லைகள் அதிகரிக்க அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். அரக்கனின் கொடுங்கோன்மைக்கு விரைவில் ஒரு முடிவு வரும் என்று அவர்களை ஆறுதல்படுத்தினார். கோலரிஷியின் ஆலோசனைப்படி ஒவ்வொரு தேவர், தேவியரின் தனிப்பட்ட சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மூகாம்பிகை தேவியாக உருவாயின. அவள் மூகாசூரனைப் போரிட்டு அழித்தாள். அவ்வாறு அவனை அழித்த இடம் மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் கோலவ மகரிஷி என்பவர் கொல்லூரின் இயற்கை அழகைக் கண்டு அங்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் அவர்முன் எழுந்தருளி ஆசி வழங்கினார். அப்போது முனிவர் ‘தங்களை தினமும் வழிபட தங்களின் சிவலிங்க உருவம் வேண்டும்,’ என்று கோரிக்கை சமர்ப்பிக்க, ஈசனும் அங்கு ஸ்வர்ணரேகையுடன் அதாவது, அம்பாளுடன் கூடிய லிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய்தார்.

சிவனும் சக்தியும் அந்த லிங்கத்தில் இருப்பதை உணர்ந்த முனிவரும்  அவ்வுருவத்தைக் கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். ஆதிசங்கரர், கேரளப் பகுதியாகிய காலடி என்ற இடத்தில் சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கோவிந்தபகவத் பாவதரின் சீடராக தன் ஆன்மிகப் பயணத்தை தொடங்கினார். உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம், அத்வைதம் என கற்று தேர்ந்த அந்த ஞானி, இந்து மதத்தை மென்மேலும் உயிர்ப்பிக்க வந்தவர். பகவத்கீதை, விஷ்ணுஸஹஸ்ர நாமம் போன்றவற்றிற்கு விளக்கவுரை எழுதிவைத்தவர். இந்திய துணை கண்டம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை எழுச்சி பெற வைத்தவர். கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, வடக்கே பத்ரிநாத், தெற்கே சிருங்கேரி என நான்கு இடங்களில் அத்வைத மடங்களை நிறுவி தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். அவர் பயணம் மேற்கொள்ளும்போது கர்நாடகாவின் கொடசாத்ரி மலையின் மீது தியானம் மேற்கொண்டார்.

தியானத்தின் பலனாய் அம்பாள் அருளாசி வழங்க அவர் முன் தோன்றியபோது ‘‘அம்பிகையே தினம்தினம் நான் உன்னை வணங்க வேண்டும், உனது உருவத்தை நான் என் ஊரான காலடியில் பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன்,’’ எனக்கேட்டார். அம்பாளுக்கோ அந்த இருப்பிடத்தை விட்டுப் போக மனதில்லை. இருந்தும் பக்தன் வேண்டிக்கொண்டதால் அவள் சம்மதித்தாள். ஆனால், பதிலுக்கு ஆதிசங்கரரிடம் ஒரு வாக்குறுதி பெற்றாள். அதாவது, ‘‘நீ என் உருவத்தைக் கொண்டு செல். ஆனால், நீ சென்றுசேரும் இடம்வரை திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி திரும்பினால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்துவிட வேண்டும்,’’ என்றாள். ஆதிசங்கரரும் அதை ஏற்று, கொடசாத்ரி மலையிலிருந்து அம்பாளை கைகளால் தாங்கியபடி பக்தியுடன் இறங்கி வந்தார். மலையின் அடிவாரம் வந்தபோது அம்பாள் தனது கொலுசை அசைக்க அதில் வந்த சத்தத்தைக் கேட்டு ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார்.

அப்படிப் பார்த்ததால் அம்பாளுக்கு தந்த வாக்குப்படி அந்த இடத்திலேயே அம்பாளை பிரதிஷ்டை செய்து விட்டார். அந்த இடமே கொல்லப்புறா என்கிற கொல்லூராகும். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தச் சிலையே தற்போதும் ஆலயத்தில் ஆசிவழங்குகிறது. அழகும், அமைதியும் கொண்ட இடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு அருள்கிறாள் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்ட, காணக்கிடைக்காத அரிய சிற்பம் இது. அன்பு நிறைந்த சாந்த சொரூபிணி இவள். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது அர்த்தநாரீ சக்தி பீடமாக போற்றப்படுகிறது. அம்பிகையின் கருவறை விமானம் தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. தேவி சிம்மவாகனத்தில் காட்சியளிக்கிறாள். திருமுடியில் வைரக்கிரீடம், நாகம், பிறை போன்றவற்றோடு பல்வேறு அணிகலன்களால் தேவியின் அழகு மேலும் மிளிர்கிறது. அம்பிகையின் மார்பில் தவழும் மரகதக்கல்லின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்குமாம்!

அம்பிகையின் இரு புறங்களிலும் மகாகாளி, மகாசரஸ்வதி இருவரும் பஞ்சலோக வடிவினராக அருள்கின்றனர். அனைத்து அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் மூகாம்பிகையின் கீழேயுள்ள சக்தி லிங்கத்திற்கே செய்யப்படுகின்றன. இந்த லிங்கத்திற்கு ராணி சென்னம்மாள் அளித்த தங்கமுகம் சாத்தப்படுகிறது. மூகாம்பிகைக்கு ஆண்டுதோறும் ஆனியில் ஜெயந்திவிழா, ஆடியில் மகாலக்ஷ்மி ஆராதனை, புரட்டாசியில் நவராத்திரி, மாசியில் தேர்த்திருவிழா என்று விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. அதேபோல் கோயில் உட்பிராகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீப மரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் கருவறையை சுற்றிலும் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு அவையும் தீப ஒளியால் மின்னுகின்றன.

இரவு சந்நிதானம் அடைக்கப்படுவதற்கு முன் அம்பாள் கோயிலுக்குள்ளே தங்க ரதத்தில் பிராகார வலம் வருகிறாள். தேவலோக தேவர்கள் அதை தினமும் கண்டு வணங்குகிறார்கள் என்பது புராண நம்பிக்கை. தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. அதை அருந்தினால் மனதில் தெம்பு வரும், நோய்கள் அண்டாது, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். புன்முறுவல் பூத்த திருமுகத்தினளாகவும், உலகோரை ஈர்க்கும் வைரமூக்குத்தியை அணிந்தவளாகவும் தாமரைப் பாதங்கள் கொண்ட தாய் மூகாம்பிகையை தரிசித்து நம் முக்கால பிணிகளையும் களைவோம். அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு என இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒரே வரிசையில் வரவழைத்து, சமமாக அமரவைத்து போதும், போதும் என்கிற அளவுக்கு உணவு வழங்கப்படுகிறது.

சென்னையிலிருந்து மங்களூருக்கு ரயில் மூலம் சென்றால் அங்கிருந்து பேருந்துகள் மூலம் இத்தலத்தை அடையலாம். பெங்களூரு, ஷிமோகா, கோவையிலிருந்து கொல்லூருக்கு நேரடியாக பேருந்து வசதியுள்ளது.

 

No comments:

Post a Comment