Friday, 4 November 2016

22 - பேரின்ப வாழ்வருளும் பிரமராம்பிகை!

51 சக்தி பீடங்கள் - 22

 

ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரமராம்பிகை ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின்  கீழ்ப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான சைல பீடம் இது. இத்தலம் திருப்பருப்பதம் என்றும்  வழங்கப்படுகிறது. இந்த பீடத்தின் நாயகி பிரமராம்பிகை. இறைவன் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனா  எனப்படும் மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட புனிதத்  தலங்களில் ஒன்றாக கர்னூல் மாவட்டத்தின் தலைமருதூர்  ஸ்ரீசைலம் விளங்குகிறது. சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால் ஸ்ரீசைலம் எனப்பட்டது.

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக் குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற  இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தை களைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர்  சிலகாலம்தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை  அறிந்த நந்தி, ‘தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக் குறித்துக் கடுந்தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,’ என்றார்.

தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வரமுடியாது  என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த ‘நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது  தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வதன் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன்மீது இருக்க வேண்டும்  என்ற வரம் பெற்றான். அதன்படி பர்வதனை ஒரு மலையாக்கி ஸ்ரீபர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக  அம்மலையின் மீது எழுந்தருளினார். அந்த ஸ்ரீபர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை  எனப் பொருள்படும்.

பரமேஸ்வரன் ஒருமுறை அர்த்தநாரீஸ்வரராக, மகரிஷி பிருங்கிக்குக் காட்சி அளித்தார். அப்போது பார்வதியைத் தவிர்த்துவிட்டு  சிவனை மட்டும் வலம்வர அவர் விரும்பினாராம். எனவே, வண்டு உருவத்துக்கு மாறி அவர்களுக்கு இடையே ஒரு துளை  போட்டு ஈசனை மட்டும் வலம் வந்தாராம். இதனால் சினம் கொண்ட பார்வதி, அந்த வண்டின் சக்தி முழுவதையும் கிரகித்துக்  கொண்டதால் முனிவர் செயலிழந்து தவித்தார். ஆனால், அவரது ஆழ்ந்த தூய ஈஸ்வர பக்தியை ஈசனிடமிருந்து கேட்ட தேவி,  பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார்.

வண்டு உருவில் இருந்த மகரிஷியை ஆட்கொண்டதால், அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள். ‘பிரமர’ என்றால்  வண்டு எனப் பொருள். மேலும், அன்னையும் அவளது பரிவார தேவதைகளும் ஒருமுறை கருவண்டுகளாக மாறி, அருணா  என்ற அசுரனின் உடல் முழுவதையும் கொட்டி சம்ஹரித்ததால் இந்தப் பெயர் பெற்றாள் என்றும் புராணங்களில்  கூறப்பட்டுள்ளது. அன்னையின் கருவறை பின்புறச் சுவரில் உள்ள துவாரத்தில் காதை வைத்துக் கவனித்தால், வண்டின்  ரீங்காரத்தை இப்போதும் கேட்கலாம்.

தேவியின் பீஜாட்சரமான ஹ்ரீம் இந்த பீடத்தில் விசேஷமாக இடம் பெற்றுள்ளது. இங்கு மல்லிகார்ஜுன சுவாமிகளின்  ஆலயத்துக்குப் பின்னால், சற்று உயரமான இன்னொரு பிராகாரம் இருக்கிறது. இந்த பிராகாரத்தில்தான் அம்மை  ஸ்ரீபிரமராம்பிகை தேவி ஆலயம் உள்ளது. ஆலயத்தின் படிக்கட்டுக்குப் பக்கத்தில் நவபிரம்மாக்கள் பிரதிஷ்டை செய்த 9  லிங்கங்கள் இருக்கின்றன. இந்தப் பிராகார நுழைவாயிலுக்கு அருகில் பிள்ளையார் அருள்கிறார். இவரையும் வணங்கிவிட்டு  உள்ளே பிரவேசிக்கிறோம்.

அடுத்து அம்பாளுடைய ஆலயமண்டபம் இருக்கிறது. இதற்கு சிம்ம மண்டபம் என்று பெயர். சிம்ம மண்டபத்தை அடுத்து சிம்ம  துவாரத்துக்கு இடப்பக்கம் சீதா ஸகஸ்ரலிங்கம் இருக்கிறது. இந்த இரண்டாவது பிராகாரத்துக்கு நடுவில்தான் பிரமராம்பிகை தேவியின் ஆலயம் உள்ளது. பிரமராம்பாள் சந்நதி 30 படிகளுக்கு மேலே அமைந்துள்ளது விசேஷமாகும். இத்தலத்திற்கு ஆதிசங்கரர் வருகை தந்து அத்வைதக் கொள்கையைப் பரப்பி சிவானந்தலஹரி பாடினார். பிரமராம்பாள் அஷ்டகத்தை அம்பிகைக்கு அர்ப் பணித்தார். இப்பீட நாயகி மல்லிகார்ஜுனருடன் பிரமராம்பாளாய் அமர்ந்திருப்பவள்.

அவளைப் போன்று அன்போடு காக்கவல்ல தெய்வம் வேறு உண்டோ? மலைவாழ் வேடனாக ஈசன் இத்தலம் வந்து வேடுவப்  பெண்ணான பார்வதியை மணந்ததால் விழாக்காலங்களில் மலைவாழ் மக்கள் இத்தல கருவறைவரை அனுமதிக்கப்படுவது  இன்றும் தொடர்கிறது. இத்தலத்தில் உபதேசிக்கப்படும் மந்திரங்கள் சர்வசித்திகளையும் தரவல்லது.

அன்னையின் சந்நதியில் ஆதிசங்கரர் நிறுவிய சக்ரத்தை நாம் தரிசிக்கலாம். அதிலிருந்து வரும் அதிர்வலைகளை உணரும்  போதே, நாம் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. சைல கோபுர தரிசனம் பாப விமோசனம் என்பார்கள். கிழக்கே கிருஷ்ண  தேவராயர் கட்டிய கோபுரம், மேற்கே பிரம்மானந்த ராயர் கோபுரம், வடக்கே சத்ரபதி சிவாஜி கட்டிய கோபுரம், தெற்கே ஹரிஹர  ராயர் கட்டிய கோபுரம் என நான்கு திசைகளில் நான்கு கோபுர வாயில்கள் உள்ள பெருமை பெற்ற தலம் இது. ஆலயத்தின்  வெளியே கங்காதரர் ஒரு மண்டபத்திலும் சற்று தள்ளி கூரை இல்லாத மண்டபத்தில் வெயில் மழையைத் தாங்கியவாறு  ‘பைலுவீரபத்திரர்கள்’ க்ஷேத்ர பாலகர்களாக அருள்பாலிக்கிறார்கள்.

மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா, இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா  மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் ‘மல்லிகார்ஜுனர்’ எனப்படுகிறார். ஆந்திராவிலுள்ள இந்த ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருத
மரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகின்றன.

இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். பிற இரண்டும்: (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி  மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ஜுனம். மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று  மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தடியில் தவஞ்செய்ததால் இது  தத்தாத்ரேய விருட்சம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. (இங்கு கரவீரம்  என்னும் பழமையான மரமும் உள்ளது.) ஸ்ரீசைலத்துக்கு முன்னால் சாட்சி கணபதி ஆலயத்தை முதலில் அடையலாம். வருகிற  யாத்ரீகர்ளுக்குச் சாட்சியாக விளங்கும் இக்கணபதியை ஆராதித்துவிட்டுதான் மல்லிகார்ஜுனரை தரிசிக்கப் போகவேண்டும்  என்பது ஐதீகம். இங்கிருந்தே ஸ்ரீசைலம் ஆலயத்தின் கோபுரக்காட்சி மிக ரம்மியமாகத் தென்படும்.

குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதால், கங்கையில் 2000 முறை குளிப்பதால், நர்மதா நதிக்கரையில் பல  வருடங்கள் தவம் செய்வதால், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு  புண்ணியம் ஸ்ரீசைலம் பிரமராம்பிகை-மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.  இத்தலத்தை தரிசிக்க வரும் அன்பர்கள் தாங்கள் நினைத்த செயலை நிறைவேற்ற ஈசனும் அம்பிகையும் திருவருள்  பாலிக்கின்றனர். சக்தியைப் பணிந்தால் சர்வமும் நிச்சயம் ஈடேறும்.

அக்ஷர சக்தி பீடங்கள்

பீடத்தின் பெயர் மிதிலா. தேவியின் இடது தோள் விழுந்த இடம். அக்ஷர சக்தியின் நாமம். பீட சக்தியின் நாமம் காயத்ரி தேவி  எனும் தூம்ரா தேவி. இந்த அம்பிகை நான்கு திருமுகங்கள் கொண்டவள். வலக்கரங்கள் சூலம், அக்ஷமாலை, ஸ்வருவம், வரத  முத்திரை தரிக்க, இடக்கரங்களில் புஸ்தகம், கிண்டி, கபாலம், அபய முத்திரை தரித்தவள். இத்தேவி சிங்கத்தின் மீது  ஆரோகணித்து வருபவள். இப்பீடத்தை மகோதரர் எனும் பைரவர் காவல் காக்கிறார். இத்தலம் நேபாள எல்லையில் ஜனக்பூர்  ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஜனக்புரியிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உச்சேட் என்ற பகுதி உள்ளது. சஹாரா ரயில்  நிலையம் அருகில் உள்ள உச்சேட்டிலிருந்து சுமார் 14.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இப்பீடம். தேவி ஆலயம் உள்ள  கிராமம் வனகாம் ஹிம்ஸி என அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment