Wednesday, 26 October 2016

ஐப்பசி முழு மதி நாள் கோ ஜாகிரி!



வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 22 வரையிலான ஆஸ்வின் (ஐப்பசி) மாத முழு நிலவு நாள், சரத்பூர்ணிமா. இந்நாளில், முழு மதியும், பூமியும் ஒன்றுக்கொன்று வெகு அருகில் அமையப்பெற்றிருப்பதால், நம் மீது படியும் சந்திர கிரணங்களால் நம் உடலும், உள்ளமும் ஊட்டம் பெறுகின்றன. இது, மகாராஷ்டிராவில் (கோ ஜாகிரி), ஒடிஷாவில் (குமார நிலவு), குஜராத்தில் (சரத் பூணம்), மே.வங்கத்தில் (லொக்கி பூஜோ), பீகார் மிதிலா பிரதேசங்களில் (கோஜாக்ரகா) கொண்டாடப்படுகிறது.
 

கோ - யார், ஜாக்ரதி - விழித்திருப்பது. அன்றிரவு, மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டுக்கும் எழுந்தருளி யார் தன் மீது உண்மையாகப் பக்தி செலுத்துகின்றனர் என்பதைக் கண்டறிய, ‘கோ ஜாக்ரதி?’ எனக் கேட்டவாறு நோட்டம் விட்டுக் கொண்டு போவாள் என்பது ஐதீகம்.
 
நியதிப்படி விரதம் அனுசரிப்பவர்களுக்கு அளவில்லா செல்வத்தையும், நல்வாழ்வையும் அளிப்பாளாம். அதனால்தான் இப்பூரண நிலவு ‘கோ ஜாக்ரதி பௌர்ணமி’ எனப் பெயர் பெற்று பின் ‘கோ ஜாகிரி’ என மருவிவிட்டது.
 

இதை விளக்குகிறது அன்று மனனம் செய்ய வேண்டிய கீழ்காணும் ஸ்லோகம்:
நிஷிதே வரதே லக்ஷ்மி, கோ ஜாக்ரதி இதி
பாஷிணி
ஜகதி பிரம்மதே தஸ்யம் லோக சேஷ்டாவலோகினி
தஸ்மே விரதம் ப்ரயச்சாமி யோ ஜாகர்த்தி
மஹீதலே"
 
 
அன்று பகலில் பசும்பால் மட்டும் அருந்தி பட்டினி இருப்பார்கள். இரவு சந்திரன் உதயமானதும், குறிப்பிட்ட முகூர்த்த வேளையில் வெண்ணிற ஐராவத யானை மேல் காட்சி தரும் இந்திரனையும், முதலை வாகனத்தில், தாமரைப் பூவில் அமர்ந்து அருள்பாலிக்கும் லக்ஷ்மியையும், சந்திரனுடன் ஒருசேரப் பூஜித்துவிட்டு, இளநீர் மற்றும் அவல் நிவேதனம் செய்து அதையே உட்கொண்டு விரதம் முடிப்பர்.
 
 
 
 

சுண்டக் காய்ச்சிய பாலில் உலர்ந்த பழங்கள், குங்குமப் பூ கலந்து மசாலா பால் தயாரிப்பார்கள். அதை நிலவொளியில் வைத்து மறுநாள் காலையில் அருந்துவார்கள். சந்திர கிரணங்களிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அடங்கிய துகள்கள் அதில் படிந்து உடலுக்கு வலுவூட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இரவில் குளிர்ந்த பாலுடன் அவல் சேர்த்துச் சாப்பிட்டால் இப்பருவக் காலத்துக்கே உரிய பித்த நோய் அண்டாது என்பது ஆயுர்வேத உண்மை.



இந்நாளில் தேவியை வரவேற்க வீடு, தெரு, கோயில்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு, தீப விளக்கொளியில் ஜொலிக்கும். வீட்டில் யாருமில்லை என நினைத்து மகாலட்சுமி முன்னேறிப் போய்விடாமலிருக்க, வெளி வாயிலில் விளக்கு ஏற்றி வைப்பர்.

கோ ஜாகிரி விழா, கோவா மர்டோலி நகரில் மோகினி அவதார வடிவில், லக்ஷ்மி மகாலஸா நாராயணியாக அருள்பாலிக்கும் ஆலயத்தில் மிகக் கோலாகலமாக நடந்தேறும். ஆலய முகப்பில், 40 அடி உயரமுடைய, 150 சிறு அகல் விளக்குகளைக் கொண்ட, 21 வட்டத் தட்டுகளுடன் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் பித்தளை தீபஸ்தம்பம், 75 லிட்டர் எண்ணெய் கொண்டு ஏற்றப்பட்டு ஜெகஜ் ஜோதியாக மகாலஸா (லக்ஷ்மி) தேவியை வரவேற்பது காணக் கிடைக்காத காட்சி.
 
 

ஐப்பசி சௌபாக்ய-லாப-லக்ஷ்மி பஞ்சமி!



 சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி. வாழ்வில் (அ) தொழிலில் ஏற்படும் தேக்க நிலை மற்றும் இடையூறுகள் நீங்க!

தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் சுக்லபட்ச பஞ்சமி தினமே சௌபாக்கிய பஞ்சமி (அ) லாப பஞ்சமி என்றழைக்கப்படுகிறது.

இதனை கட பஞ்சமி என்றும் ஞான பஞ்சமி என்றும் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய தொழில் அல்லது முயற்சிகளை இந்நாளில் தொடங்க, நிச்சயம் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. தீபாவளி லக்ஷ்மி பூஜை தினத்தன்று புதிய கணக்குகளைத் துவங்காதவர்கள் இன்று துவங்குவார்கள்.

மேலும் இந்நாளில் தான் பாண்டவர்கள் 13ஆம் ஆண்டு அஞ்ஞாத வாசத்தை முடித்து விராட தேசத்தை பாதுகாக்க கௌரவர் படை முன் தோன்றினான் என நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை பாண்டவ பஞ்சமி என்றும் வழங்குவர்.
 
 
 

தீபாவளி திருநாள்!

தீபாவளி பண்டிகை (நம் சம்பிரதாய முறையில்)நரகாசுர வதம் காரணமாக தீபாவளிப் பண்டிகையில் நரகசதுர்த்தசி ஸ்நானம் என்று போற்றப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் மிகவும் மகிமை வாய்ந்தது.

அன்றைய தினம், அனைத்து நீர் நிலைகளில், கங்கையும், நல்லெண்ணெயில் ஸ்ரீ லக்ஷ்மியும் வாசம் செய்கிறார்கள்.

'தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா' என்பது ஐதீகம்.

ஆகவே, அன்று யாரைப் பார்த்தாலும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று விசாரிப்பது நமது சம்பிரதாயம்.

அன்றாடம் செய்யும் குளியலில், 'கங்கா, கங்கா' என்று உச்சரித்தபடி குளிக்க, கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும். அவ்வாறிருக்க, கங்கையே நம் வீடு தேடி வரும் நன்னாளில், சூரியோதயத்திற்கு முன் குளிக்க கங்கா ஸ்நானப் பலன் கட்டாயம் கிடைக்கும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தஸீம்
ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யமலோகம் ந பச்யதி (நிர்-147)
தீபாவளியன்று அதிகாலை சந்திரன் இருக்கும் போதே, தலையில் நல்லெண்ணை தேய்த்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் என்பதே ஏற்படாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.

தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது.

தீபாவளி வெந்நீர்


ஒரு பாத்திரத்தில், தேவையான நல்லெண்ணையை எடுத்து ஓமம், மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, மஞ்சள் பொடி, வெற்றிலை இவைகளைப் போட்டு, பொங்கக் காய்ச்சி எடுத்து வைக்கவும்.

அக்காலத்தில் தீபாவளிக்கு முதல் நாளை நீர் நிரப்பும் பண்டிகை என்பர். ஒரு அண்டாவை சுத்தம் செய்து பொட்டிட்டு அதில் நீர் நிரப்புவார்கள். பின் அந்த நீரில் அரசு, ஆல், அத்தி, பூவரசு, மாவிலங்கை ஆகிய ஐந்து வகை மரப்பட்டைகளை ஊற வைப்பார்கள்.

அந்த நீரை பின்னிரவு 3.00 மணிக்கே சுடவைத்து விடுவார்கள். அந்த வெந்நீரில்தான் கங்கா ஸ்நானம் செய்வார்கள். இதனால் சளி பிடிக்காது; தலைவலி வராது.

அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி,

அரப்புத் தூளில் கலைவாணி,

சந்தனத்தில் பூமாதேவி,

குங்குமத்தில் கௌரி,

மலரில் மோகினி,

தண்ணீரில் கங்கை,

புத்தாடையில் விஷ்ணு,

பட்சணத்தில் அமிர்தம்,

தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.

 

மகாலட்சுமி பூஜை

கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.
லட்சுமி குபேர பூஜை

தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். "சுக்லாம் பரதரம்' சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

"ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'
என 108 முறை சொல்லலாம்.
குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.
முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர் களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.
கேதார கௌரி நோன்பு

இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீ ஆன நாள் இது. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். 21 அதிரசம் படைப்பர்.
தன்வந்திரி பூஜை

பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். இவர் மருத்துவக் கடவுள். கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

யமதீபம்

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும். யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.

சூரியனின் பிள்ளை யமன்; பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.

யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது.


தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளான திரயோதசி அன்று மகாலட்சுமி தங்கள் இல்லங்களுக்கு வருவதாக நம்புகிறார்கள். அன்று தங்கள் இல்லத்தில் தீப அலங்காரங் கள் செய்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள்.

இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று (தீபாவளியன்று) அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் வெளிப்புறங் களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி, தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்வார்கள். சில குடும்பங்களில் விரதம் கடைப்பிடித்து நோன்புத் திருநாளாகவும் கொண்டாடுவர். மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, வணிகர்கள் புதுக் கணக்கு எழுதுவார்கள். சில இடங்களில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும் நடைபெறும்.

நான்காம் நாள் புதுவருடம் பிறந்ததாகக் கொண்டாடுவர். மேலும், கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றிய நாளாகவும் கொண்டாடுவர்.

ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. இது சகோதர- சகோதரிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்று உடன்பிறந்த வர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெறுவதுடன், பரிசுகளும் கொடுப்பார்கள்; பெறுவார்கள்.

யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது.

அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.

மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.

 

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள்!

தீபாவளி பண்டிகை (நம் சம்பிரதாய முறையில்)
நரகாசுர வதம் காரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. நரகசதுர்த்தசி ஸ்நானம் என்று போற்றப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் மிகவும் மகிமை வாய்ந்தது.

அன்றைய தினம், அனைத்து நீர் நிலைகளில், கங்கையும், நல்லெண்ணெயில் ஸ்ரீ லக்ஷ்மியும் வாசம் செய்கிறார்கள். 'தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா' என்பது ஐதீகம். ஆகவே, அன்று யாரைப் பார்த்தாலும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று விசாரிப்பது நமது சம்பிரதாயம்.

அன்றாடம் செய்யும் குளியலில், 'கங்கா, கங்கா' என்று உச்சரித்தபடி குளிக்க, கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும். அவ்வாறிருக்க, கங்கையே நம் வீடு தேடி வரும் நன்னாளில், சூரியோதயத்திற்கு முன் குளிக்க கங்கா ஸ்நானப் பலன் கட்டாயம் கிடைக்கும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தஸீம்
ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யமலோகம் ந பச்யதி (நிர்-147)
தீபாவளியன்று அதிகாலை சந்திரன் இருக்கும் போதே, தலையில் நல்லெண்ணை தேய்த்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் என்பதே ஏற்படாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.


தீபாவளிப்பண்டிகையின் முதல் நாள் செய்ய வேண்டியவை:
பூஜை அறையை மெழுகி, பூஜை சாமான்களை சுத்தப்படுத்தி, மாக்கோலமிட வேண்டும். வீட்டில் ஒட்டடை இல்லாமல் சுத்தப்படுத்துவது அவசியம்.

புதுத் துணிகளுக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். புடவைகளை அப்படியே வைக்காது, கொசுவி வைக்க வேண்டும். அட்டைப்பெட்டிகளைப் பிரிக்காது அப்படியே வைக்கக் கூடாது.

சில வீடுகளில், முதல் நாள் இரவு, பாயசம் முதலியவை வைத்து விருந்தாகச் சமைப்பது வழக்கம்.

கெய்சர்கள் இருந்தாலும், சம்பிரதாயத்தை அனுசரித்து, ஒரு அடுப்பில் கோலம் போட்டு, ஒரு எவர்சில்வர், அல்லது பித்தளைப் பானையில், சுற்றிலும் சுண்ணாம்பு தடவி, நடுநடுவே நான்கைந்து குங்குமப்பொட்டுகள் வைத்து, தண்ணீரை நிரப்பி அடுப்பில் வைக்கவும். தண்ணீரில் கங்கை தங்குவதால், இவ்வாறு கோலம் போட்டு அலங்காரம் செய்கிறோம்.

ஒரு பாத்திரத்தில், தேவையான நல்லெண்ணையை எடுத்து ஓமம், மிளகு, மஞ்சள் பொடி, வெற்றிலை இவைகளைப் போட்டு, பொங்கக் காய்ச்சி எடுத்து வைக்கவும். எண்ணை காய்ச்சுதலை இரவு எல்லா வேலைகளும் முடிந்த பிறகு செய்யலாம்.

ஒரு தாம்பாளத்தில், வெற்றிலை, பாக்கு, சீப்பு வாழைப்பழம், பூ, சந்தனம், குங்குமம், சீயக்காய் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வாசனை(ஸ்நான)பொடி, ஒரு கிண்ணத்தில்,காய்ச்சிய எண்ணை ஆகியவற்றை எடுத்து வைக்கவும். எண்ணைப் பாத்திரத்தைச் சுற்றிலும், சுண்ணாம்பு தடவி பொட்டுக்கள் வைக்கவும்.
இன்னொரு தாம்பாளம் அல்லது ஓலைக்கூடைகளில்(அக்கால வழக்கம்) புதுத் துணிகளை எடுத்து வைக்கவும். இனிப்புப் பண்டங்களையும், தீபாவளி மருந்து, பட்டாசு முதலியவற்றையும் எடுத்து வைக்கவும்.


தீபாவளியன்று:
சம்பிரதாயப்படி, மிக அதிகாலை, இரண்டரை மணிக்கு, வீட்டின் தலைவி எழுந்து, வெந்நீர் அடுப்பை ஏற்றிவிட்டு, வாசல் தெளித்து, பெரிய கோலம் இட்டு, பூஜையறையில் ஐந்து முகக் குத்துவிளக்கை ஏற்றி விட்டு, வீட்டிலுள்ளோரை எழுப்ப வேண்டும்.

ஆசனப்பலகை அல்லது பாயைப் போட்டு, கிழக்கு முகமாக வீட்டிலுள்ளோரை உட்கார வைக்க வேண்டும். எடுத்து வைத்துள்ள சாமான்களை வீட்டுக்குப் பெரியவர், இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு, எல்லோருக்கும் வாழைப்பழம் சாப்பிடக் கொடுப்பார்.

வெற்றிலை போடும் வழக்கம் உள்ளவர்கள், முதலில் வெற்றிலை போடுவார்கள். அன்றைய தினம் அதிகமான பலகாரங்கள் சாப்பிட வேண்டியிருப்பதால், ஜீரணமாகும் பொருட்டு, தீபாவளி மருந்தை சில வீடுகளில் முதலில் சாப்பிடுவார்கள்.

பிறகு, ஒரு பட்டாசை எடுத்து, வாசலில் வெடித்து விட்டு வரவேண்டும்.

முதலில் குழந்தைகளை உட்கார வைத்து, வீட்டில் முதிய பெண்மணி, 'கௌரி கல்யாணம்' அல்லது வேறு ஏதாவது மங்கலமான பாடல்களைப் பாடி, மூன்று சொட்டு நல்லெண்ணையை முதலில் தலையில் வைக்க வேண்டும்.

நீண்ட ஆயுளைப் பெற வேண்டி, 'அஸ்வத்தாம, பலி, வியாச, க்ருப, ஹனும, விபீஷண பரசுராம*' என்று ஏழு சிரஞ்சீவிகள் பெயரைச் சொல்லி, ஆண் குழந்தைகளின் வலக்கையில் ஏழு பொட்டு எண்ணை வைத்து, பின் தலையில் எண்ணை வைக்கலாம்.

பெண் குழந்தைகளுக்கு,

'அகல்யா, திரௌபதி, சீதா தாரா மண்டோதரி ததா,
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசனம்'

என்று உச்சரித்து எண்ணை வைக்கலாம்.
சுமங்கலிகள் இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு முறையும் ஸ்நானம் செய்யும் போது சொல்ல சௌமாங்கல்யம் பெருகும். ஸ்லோகம் சொல்லும் போது, நெற்றி வகிட்டில், ஐந்து எண்ணைப் பொட்டுக்கள் வைத்து, பின் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.


பிறகு குளித்துவிட்டு, முதலில் ஏதாவதொரு பழைய ஆடையை அணிந்து கொண்டு, வீட்டுப் பெரியவர்களிடம் ஆசி பெற்று, புது உடையை அவர்கள் கையால் எடுத்துக் கொடுக்க வாங்கி அணிந்து கொள்ள வேண்டும்.
சில வீடுகளில், குளித்த பின், முதலில் தீபாவளி மருந்து சாப்பிட்டு, அதன் பின் டிபன் சாப்பிடுவார்கள். டிபன் சாப்பிட்டு முடித்த பின்னரே புதுத் துணி அணியும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. அவரவர் வீட்டு வழக்கத்தை அனுசரித்து செய்து கொள்ளவும்.

காலை நான்கு, நான்கரைக்குள் ஸ்நானம் செய்ய வேண்டும் அந்த நேரத்திலேயே கங்கை நம் இல்லம் தோறும் வருகிறாள். சூரிய உதயத்திற்கு முன் அதாவது, ஆறு மணிக்குள் டிபன் சாப்பிட வேண்டும் என்பது சம்பிரதாயம். பொதுவாக, இட்லி. பட்சணங்கள் முதலியவையே காலை டிபன்.

மதியம், பாயசம், தயிர்ப்பச்சடி, பொரியல், கூட்டு, மோர்க்குழம்பு வடை முதலியவை செய்து சமைப்பார்கள். அமாவாசையன்று தீபாவளி வந்தால், அன்று தர்ப்பண தினம் என்பதால், மோர்க்குழம்பு வைப்பார்கள்.

இல்லையெனில் சாம்பார் வைக்கலாம். அமாவாசையன்று தீபாவளி வந்தால், தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள், மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு தர்ப்பணம் செய்து, இரவு ஏதாவது டிபன் சாப்பிட வேண்டும்.

 
 

 

Wednesday, 19 October 2016

வேண்டும் வரமருளும் வைஷ்ணவி!

த்யானம்
சக்ரம் கண்டாம் கபாலம் ச சங்கம்ச தந்திகண:
தமால ச்யாமளோ த்யேயோ வைஷ்ணவீ விப்ர மோஜ்வலை
ஏக வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
வரதாபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரம்ச தாரிணீம்
நவயௌவன ஸம்பன்னாம் மத் கருடவாஹனாம்
சர்வ லக்ஷண ஸம்பன்னாம் வைஷ்ணவீம் தேவிகாம் பஜே:

ஒரு முகம் இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், அபய-வரத முத்திரை, சங்கம், சக்ரம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவளும்,  பால்ய வயதைக் கடந்து யௌவன வயதை அடைந்திருப்பவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளுமான வைஷ்ணவி தேவியை வணங்குகிறேன்.

மந்த்ரம்
ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

வைஷ்ணவி காயத்ரி
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.


ஓம் தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.


வலிமையான கருடனைக் கொடியில் கொண்டவளும்,  சக்ரத்தை ஏந்தியவளும் ஆகிய வைஷ்ணவி தேவியைத் த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி, வேண்டிய வரங்களைத் தருவாளாக.


தேவி மஹாத்மியத்தில் வைஷ்ணவி:
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே.


வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் (வில்) ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.


வைஷ்ணவி தேவி, விஷ்ணுவின் சக்தியாகப் பொலிபவள்.  தேவி புராணம், ‘சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததா ஹரிஹரவிஷ்ணு ரூபா த்வா தேவி வைஷ்ணவி தேவி தேந கீயதே’ என்று இவள் புகழ் பாடுகிறது. திருமாலைப் போல சங்கு, சக்ரம், கதை ஆகியவற்றைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவி என்று பெயர் பெற்றாள் என்றும் கூறுகிறது.


தேவியே திருமால். திருமாலே தேவி. கோபிகைகளை மோகத்தில் ஆழ்த்திய கிருஷ்ணன் புருஷ வடிவம் என்பதை ‘மமைவ பௌஷம் ரூபம் கோபிகா ஜன மோகனம்’ என்று லலிதோபாக்யானத்தில் லலிதையே கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.


அந்த லலிதோபாக்யானத்திலேயே திருமால் வீரபத்திரரிடம் ஆதி சக்தியே போக வடிவில் பவானியாகவும், யுத்தத்தின் போது துர்க்காம்பிகையாகவும், கோபத்தில் காளியாகவும், புருஷ வடிவில் விஷ்ணுவாகவும் நான்கு வடிவங்களில் அருள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

நம்மைக் காத்து நம் மனோரதங்களை பூர்த்தி செய்யும் தேவி இவள். இவளது வாகனமான கருடனே பெரிய திருவடியாக திருமாலுக்கு விளங்குகிறது. அழுக்கற்ற சுத்த ஸ்படிகம் போல பளபளப்பாக உள்ள நீலநிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால்.


சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்
களைக் காக்கும் திருமாலுக்கு உதவும் சக்தி வைஷ்ணவி எனப் போற்றப்படுகிறாள்.ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, சங்கு, சக்ரம், வில், அம்பு, வாள், கதை, அபயம், வரதம் தரித்தவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். திருப்தியளிப்பவள். ச்ருங்காரம் ததும்பும் வண்ணப் பொலிவு கொண்ட பேரழகு. திருமாலின் போக சக்தி.

சீழுக்கு அதிதேவதையான இவள் சினமுற்றால் விஷக்கடிகள் பெருகும். தென்னை ஓலை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால் நிவாரணம் பெறலாம். திருமகளின் பெருமைகளை ஸுக்தம் அருமையாகப் பேசுகிறது.

இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை ‘கந்தத்வாராம்’ எனும் மந்திரம் கூறுகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை துராதர்ஷாம் என்ற நாமம் குறிப்பிடுகிறது.இவள் அருட்பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்தை பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கையை வனப்பும் வாளிப்புமாக மாற்றி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.

நம் வீட்டில் திருமகள் அருள்புரியவேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். பசுவின் பாகங்களில் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள்.

கோமாதாவிடம் ‘எனக்கும் உன் பவித்ரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’ எனக் கேட்டாள். யாரும் இடம் பெறாத பகுதி, தன் பிருஷ்டபாகம் . அதை எப்படி  தேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி தேவி ‘உன் தேகம் முழுவதுமே பவித்ரம். அதனால் உன் பின்பக்கமாகிய ப்ருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்,’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள்.

அதனால் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமானவையாகின்றன. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணீம்’ எனும் சொல் குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘‘ஈம்’’ பீஜம் குறிக்கிறது.


திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மிணி யாகவும், சீனிவாசனாய் வந்தபோது பத்மாவதி யாகவும் அவதரித்தவள் திருமகளே.

வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்யலட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்தி லட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தக லட்சுமியாகவும், வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே.

வேதங்கள் போற்றும் திருமகளின் மற்றொரு வடிவம் பூமாதேவி. இவள் தாமரை மலரில் தன் சிவந்த பாதங்களைப் பதித்துள்ளாள். கருநிறமுடையவள். கிளி தீண்டும் சம்பாக் கதிர்களைக் கையில் தாங்குபவள். மற்றொரு கரம் குவளை மலர் தாங்கியிருக்கும். வர்ணமயமான ஆடை கொண்டவள். ரத்ன க்ரீடம் சுமந்த திருமுடியுடையவள். அந்த பூமாதேவி நம் விருப்பங்களை நிறைவேற்றட்டும்.

கேரளாவிலும் கன்னடத்து கரையோரங்களிலும் காணப்படும் அனைத்து பகவதி ஆலயங்களும் வைஷ்ணவி தேவியின் ஆலயங்களே என்பது ஒரு கருத்து. பக்தர்கள் ‘அம்மே நாராயணா’ என தேவியை அழைப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது.  இவ்வாறு லட்சுமி, பூமி தேவி போன்றோர் விஷ்ணு அம்சங்கள் தாங்கி நாரணனின் நாயகியராய் உலகிற்கு ஐஸ்வர்யங்கள், பூமி லாபம் போன்றவற்றை அருளும் வைஷ்ணவி வாழ்வாங்கு நம்மை வாழ வைப்பாளாக!
 
 

இல்லத்தில் மகிழ்ச்சி ஒளியேற்றும் இந்த்ராணீ !

 

இந்த்ராணீ இந்திரனின் சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவதம் எனும் வெள்ளை யானையே இந்த தேவியின் வாகனம்.  தேவலோக ராஜ்யபாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிக்கைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்ற ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம், கைலாசம்  இவற்றைக் குறிக்கும்.

அரச சம்பத்துகள் எல்லாம் இந்த சக்தியின் அனுகிரஹத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும் கீழ்க்கண்ட ஸ்லோகம்:

ஜாதோ ப்யல்ப பரிச்சதே க்ஷிதிபுஜாம்
 ஸாமாந்ய
மாத்ரே குலேநி: க்ஷோவனி சக்ரவர்த்தி
பதவீம் லப்த்வா ப்ரதா போன்னத:
யத் வித்யாதர ப்ருந்த வந்தித பத: வத்ஸ
 ராஜோ பவேத்
தேவி த்வச் ச்சரணாம்புஜ ப்ரண நிஜ
 ஸோயம் ப்ரஸாதோதய:

இந்திர பதவியை அடைய வேண்டும் என்றால் ஒருவன் ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவன் தேவேந்திரன். அவனது சக்தியே ஐந்த்ரீ எனும் இந்த்ராணீ. நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் எனும் வெண்ணிற யானையைத் தன் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டவள் இவள். அங்குசம், பாசம், வஜ்ராயுதம், தாமரைமலர், வரதம், அபயம் தரித்தவள். இந்திர நீலக் கல்லைப் போன்ற நீல நிறத் திருமேனி உடையவள். சகலவிதமான செல்வச் செழிப்புகளோடும், பூரண ஐஸ்வர்யங்களோடும் பொலிபவள்.

பச்சைநிறப் பட்டாடை அணிந்து பயிர்கள் நன்கு செழிக்க மழை பெய்விக்க வருணனுக்கு ஆணையிடுபவள். கற்பக விருட்சத்தின் நிழலில் ஐராவதமும், காமதேனுவும் சூழ வீற்றருள்பவள். கணிகையர்கள் எனும் ஆடற்பெண்டிர், ஆலயங்களில் சப்தமாதர்களில் இந்த்ராணீயை நடுவில் வைத்து வழிபட்டதாக பண்டைய நூல்கள் உரைக்கின்றன. இவளைச் சுற்றி அனவரதமும் அழகான தேவ மங்கையர்கள் வீற்றிருப்பர். தன்னை வணங்கும் பெண்களுக்கு மனோதைரியம், அழகு, வளமான வாழ்வு போன்றவற்றை தந்தருளும் தேவி இவள்.

ஆயிரம் தூண்கள் கொண்ட கற்பக விருட்சங்கள் நிறைந்த தேவலோக வனத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிம்மாசனத்தின் மீதுள்ள தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலம். இந்திரனைப் போன்றே ஆயிரம் கண்கள் கொண்ட தேவி இவள். இந்திரன் த்வஷ்டாவின் புத்திரர்களான விச்வரூபன், விருத்திரன் போன்றோரை ஒரு போரில் கொன்றான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பெற்று பலம், வீரம், தேஜஸை இழந்தான். மேலும் பீடைகள் பிடிக்காமல் இருக்க மானஸஸரஸ் என்ற இடத்தை அடைந்த இந்திரன் அங்கு தாமரைத் தண்டில் மறைந்து இருந்தான். இந்திரன் தலைமறைவானதால் வெற்றிடமான தேவேந்திர பதவிக்கு தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து, நஹுஷனை தலைவனாக்க முடிவு செய்து தேவலோகத்துக்கு அதிபதியாக்கினர். தற்காலிக இந்திர பதவியை அடைந்த இந்திரன், நிரந்தர இந்த்ராணீயின் அழகில் மயங்கி அவளை அடைய எண்ணினான்.

இந்த்ராணீ குரு பகவானைச் சரணடைந்து தனக்கு நேர்ந்த துன்பத்திலிருந்து மீள உதவும்படி கேட்டாள். நஹுஷனை அழைத்த குரு பகவான், ‘இந்திரன் இருக்கும்போது நீ அவன் மனைவியை அடைய நினைப்பது பாதகமான பாவச்செயல்,’ என அறிவுரை கூறியும் அவன் அதனை அலட்சியம் செய்தான். குரு பகவான் இந்த்ராணீயிடம், ‘நீ பராசக்தியைத் துதித்து வணங்கு. அவள் திருவருளால் உனக்கு இந்திரனும் கிடைப்பான். நஹுஷனும் அழிவான்,’ என்று கூற இந்த்ராணீயும் தேவியைத் துதிக்க தேவியும் அகமகிழ்ந்தாள். ‘இந்திரனின் மனைவியே நீ உடனடியாக மானஸஸரஸுக்குச் செல்வாயாக. அங்கு உபஸ்ருதி எனும் வித்தையை உபாஸிப்பாயாக உன் எண்ணங்களும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்,’ எனக் கூறி மறைந்தாள்.

அதன்படியே இந்த்ராணீயும் செய்ய அங்கு தடாகத்தில் ஒரு தாமரைப்பூ தண்டில் மறைந்திருந்த இந்திரனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று பழையபடி பலம், வீரம், வீர்யத்துடன் இந்த்ராணீ தேவியுடன் சேர்ந்தான். பராசக்தியின் தனிப்பெரும் கருணையால் மங்களகரமான வாழ்வு கிடைக்கப்பெற்றாள் இந்த்ராணீ.


தம்மைத் துதிக்கும் பக்தர்களுக்கும் சர்வ மங்களங்கள் உண்டாக அருள்பவள் இத்தேவி. வியாசர் பாரதத்தில் திரௌபதி, இந்த்ராணீயின் அம்சம் எனவும், பாண்ட வர்கள் இந்திரனின் அம்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அதி சௌந்தர்யரூபம், எந்நேரமும் சிவ பூஜையில் ஈடுபாடு போன்ற பல வரங்களைப் பெற்றுத் திகழ்பவள் இந்த்ராணீ. தன்னை வழிபடும் மங்கையர்க்கு அவர்கள் விரும்பிய வரனுக்கு மாலையிட அருள்வாள்.

சதையின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பூசி, பலாச்சுளையை நிவேதித்து தானமளித்தால் நலம் உண்டாகும்.

த்யானம்

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம்  பிரதீகரை:
இந்திர நீல நிபேந்த்ராணி த்யேயா ஸர்வ ஸம்ருத்திதா

மந்த்ரம்

ஓம் ஈம் இந்த்ராண்யை நம:
ஓம் ஐம் சாம் இந்த்ராணீ கன்யகாயை நம:

காயத்ரி

ஓம் ச்யாமவர்ணாயைவித்மஹே
வஜ்ர  ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்த்ராணீ ப்ரசோதயாத்.
ஓம்! வெண்ணிற யானை ஓவியம் வரையப்பட்ட கொடியை ஏந்தி, கரத்தில் வஜ்ராயுதம் தரித்த இந்த்ராணீ என்னும் தேவியை த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி அளவற்ற செல்வங்களையும் மேலான சுகங்களையும் மனதில் மகிழ்ச்சியையும் அருள்வாளாக.

பூரண த்யானம்

அம்பாயா ஸ்தன மண்டலாத் ஸ்முதிதாம்
சுவேதே த்வீபே ஸுஸ்திதாம்
ஹஸ்தை: அங்குச தோமரே சதத்தீம்
பாசாம்ச வஜ்ராயுதாம்

மாஹேந்த்ரோபல தேஹகாந்தி ருசிராம்
மாஹேந்த்ர சக்திம் பராம்
இந்த்ராணீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்
ஸதபாதகு ஸௌபாக்யதாம்.

பூரண த்யானம் 1

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ  ஸமன்விதாம்
ஸரத்ன மகுடோ பேதாம் ஹேம வர்ண ஸ்வரூபிணீம்

வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே கஜ வாஹன ஸம்ஸ்திதாம்.

ஒருமுகம், இரண்டு கண்கள், நான்கு கரங்களையுடையவளும், ரத்னங்கள் இழைக்கப்பெற்ற மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிறமான மேனியை உடையவளும், வரதம், அபயம், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான இந்த்ராணீ தேவியை வணங்குகிறேன்.

தேவி மஹாத்மியத்தில்,
‘இந்த்ராணீ கிரீடினி மஹா வஜ்ரே ஸஹஸ்ரநயனே  ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரீ நாராயணீ  நமோஸ்துதே,’

என்று வருகிறது.


கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே, விருத்தாசுரன் பிராணனைப் போக்கியவளே, உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

ஐப்பசி கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி-கர்வா சௌத்!



கணவருடைய நீண்ட ஆயுள், குன்றாத ஆரோக்கியம், குறையாத வளம், வெற்றிகள், சதிபதிகளின் மாறாத அன்னியோன்னியம் இவற்றை வேண்டிப் பெண்கள் இயற்றும் விரதம் இது.
 
இவ்விரதம் சாந்திரமான கார்த்திக மாதத்தில் (ஐப்பசி மாதம்) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று கொண்டாடப்படுகிறது.

 

நம் தென்னிந்திய மாநிலங்களில் காரடையான் நோன்பு மிகவும் முக்கியமானது. இதனைப் போன்று வட இந்தியாவில் (உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காச்மீரம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்) கொண்டாடப்படும் விரதமே கர்வா சௌத்.

 
பாண்டவர்கள் வனவாச காலத்தின்போது அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களை வேண்டித் தவம் செய்யச் சென்றான். அப்போது தன் பர்த்தாக்களின் துயர்களை எண்ணி வருந்திய திரௌபதிக்குக் கிருஷ்ண பரமாத்மா இவ்விரத முறைகளை உபதேசித்து இதனை இயற்றுமாறு கூறினார்.
 
அவ்வாறே திரௌபதி இவ்விரதமிருந்து அதனால் பாண்டவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைந்தார்கள் என்று ஒரு கர்ணபரம்பரைக் கதை கூறுகிறது.

இவ்விரதம் சாந்திரமான கார்த்திக மாதத்தில் (ஐப்பசி மாதம்) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்பதே சௌத் என்று திரிந்தது. இனிக் கர்வா என்ற பெயர் வந்த காரணத்தைப் பார்ப்போம்.
 
கர்வா என்று ஒரு பெண் இருந்தாள். அவள் மகா பதிவிரதை. அவள் கணவனை ஓர் நாள் முதலையொன்று பிடித்துக் கொண்டது. கர்வா தன் கற்பின் சக்தியால் அம்முதலையின் வாயை நூலாலேயே கட்டி, யமதர்மராஜனை அம்முதலையை நரகம் சேர்க்குமாறு கட்டளையிட்டாள். பதிவிரதையின் சாபத்திற்குப் பயந்த யமன் அவ்வாறே செய்வதாகக் கூறிக் கர்வாவின் கணவனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார். அந்தப் பத்தினிப் பெண்ணின் நினைவாகவே கர்வா சௌத் மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அக்காலத்தில் போர்வீரர்களின் பத்தினிகள் போருக்குச் சென்றிருக்கும் தங்கள் கணவன்மார்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு இந்நோன்பு இயற்றியிருக்கிறார்கள். இது வட இந்தியாவில் கோதுமை விதைக்கும் காலம். கோதுமையைச் சேமிக்கும் பெரிய மட்பாண்டங்களைக் கர்வா என்றழைப்பார்கள். இந்த ஆண்டு கோதுமை அறுவடை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் பெண்கள் கர்வா சௌத் விரதமிருக்கிறார்கள்.

மேலும் சிறிய வயதில் திருமணமாகிக் கணவன் வீடு செல்லும் மணப்பெண் தனிமையாலும் உற்றார் உறவினரைப் பிரிந்த துயராலும் வாடாதிருக்க, கணவனின் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பெண் தன் தோழியாக, சகோதரியாக ஏற்றுக் கொள்வாள். அவளை கங்கன் சஹேலி அல்லது தரம் பஹன் என்று அழைக்கிறார்கள். கர்வா சௌத் அன்று இப்பெண்கள் இருவருமே கர்வா எனும் மண்பாண்டங்களை வாங்கி அவற்றில் அழகாக வர்ணந்தீட்டி, அதனுள் வளையல்கள், தலை அணிகள், வீட்டில் செய்யப்பட்ட இனிப்புகள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை இட்டுத் தங்கள் சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று இக்கர்வாக்களைத் தங்கள் அன்புப் பரிசாக அளிப்பார்கள். இவ்வாறு நட்பினைக் கொண்டாடும் தினமாகவும் கர்வா சௌத் விளங்குகிறது.
 
இவ்விரதத்திற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே இதற்கான ஆயத்தங்கள் துவங்கிவிடும். அழகு சாதனங்கள், குங்குமம், உடைகள், நகைகள், வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கர்வா விளக்குகள் மற்றும் தட்டுகள் ஆகியவை வாங்கப்படும். பெண்கள் அன்று பொழுது புலருமுன்னரே விழித்தெழுகிறார்கள். கதிரவன் உதித்ததிலிருந்து உபவாசம் துவங்குகிறது.
 
அருகாமையில் வசிக்கும் பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுகிறார்கள். கை, கால்களில் மருதாணியிட்டுக் கொள்கிறார்கள். சாயங்காலம் அனைவரும் ஒருவர் வீட்டில் கூடிப் பூஜை செய்கிறார்கள். அப்போது பயா எனும் கூடையில் வைத்த பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சூரியன் மறைந்து நிலவு உதித்ததும், ஒரு சல்லடை வழியே முதலில் நிலவைப் பார்த்துப் பின் எதிரில் நிற்கும் தங்கள் கணவனைக் காண்கிறார்கள். கணவன்மார்கள் மனைவிகளுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி இனிப்பு உண்பிக்கிறார்கள். பின் பெண்கள் உணவு உட்கொள்கிறார்கள்.
 
இனி, இவ்விரதச் சிறப்பைக் கூறும் ஒரு கதையைக் காண்போம்.
மன்னர் ஒருவருக்கு ஏழு புத்திரர்களுக்குப் பின் பிறந்த ஒரே செல்ல மகள் வீரவதி. அவள்மீது அவள் பெற்றோர்களும் அண்ணன் மார்களும் உயிரையே வைத்திருந்தனர். உரிய காலத்தில் அவள் ஒரு மன்னனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.

வீரவதி ஒவ்வொரு ஆண்டும் கர்வா சௌத் விரதத்தை அதன் நியமங்களுடன் கடைப்பிடித்து வந்தாள். ஒரு ஆண்டு உபவாசத்தால் அவள் மிகவும் களைத்திருந்ததைக் கண்ட அவளுடைய அண்ணன்மார்கள், ஒரு கண்ணாடியில் ஒளியைப் பாய்ச்சி அதனை நிலவு என்று வீரவதியிடம் காண்பித்து அவளை உணவு உண்ணச் செய்தனர். விரத பங்கமானதால் வீரவதியின் கணவன் மரணமடைந்தான். இதனால் மிகவும் துயறுற்ற வீரவதி, அன்னை பார்வதியின் அறிவுரைக்கேற்ப கர்வா சௌத் விரதத்தை கடும் நியம நிஷ்டைகளுடன் நிறைவேற்ற, யமதர்மராஜன் அவள் கணவன் உயிரைத் திரும்ப அளித்து ஆசீர்வதித்தார். வீரவதி தன் கணவனுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.
 
 

ஐப்பசி அஹோய் அஷ்டமி விரதம்!




தீபாவளிக்கு எட்டு நாட்கள் முன்பு, கர்வா சௌத் எனப்படும் விரதம் கொண்டாடிய நான்காம் நாள், [இந்த ஊர் கார்த்திகை) தமிழில் ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் இந்த விரதம் கொண்டாடுகிறார்கள்.
 
வடக்கில், குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஹோய் விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறார்கள். 
 
பெண்கள் தான் இந்த விரதம் இருக்கிறார்கள் – தன்னுடைய மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவாம்! கூடவே சந்தான பாக்கியம் இல்லாதவர்களும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
 


 அஹோய் விரதம் – கதை
 
முன்னொரு காலத்தில் அடர்ந்த காட்டின் அருகே இருந்த ஒரு கிராமத்தில் அன்பும், பாசமும் உருவான பெண்மணி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள். கார்த்திக் மாதத்தில், தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு, தனது வீட்டினை சரி செய்து அழகுபடுத்த நினைத்தார். தீபாவளிக்கு முன்னதாகவே இந்த வேலைகளை முடிக்க நினைத்த அவர், ஒரு நாள் காட்டிற்குள் சென்று வீடை சரி செய்ய தேவையான மண் எடுத்து வரச் சென்றார். மண்வெட்டியால் அப்படி மண்ணை கொத்தி எடுக்கும் போது தவறுதலாக ஒரு சிங்கத்தின் குட்டியை வெட்டி விட, அச் சிங்கக் குட்டி இறந்து விட்டது. தெரியாமல் இப்படி நடந்துவிட்டதே என்று மனவருத்தம் கொண்டார் அந்த பெண்மணி.


 
இது நடந்த ஒரு வருடத்திற்குள் அப்பெண்மணியின் ஏழு மகன்களும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள்.  காட்டு விலங்குகள் அவர்களை கொன்றிருக்கும் என கிராமத்தினர் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் – தவறுதலாக தான் கொன்ன சிங்கக் குட்டிக்கும், தனது மகன்கள் காணாமல் போனதற்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்று நினைத்தார். அதை கிராமத்தில் உள்ள மூத்த பெண்மணிகளிடமும் சொன்னார். 

அதில் ஒரு மூத்த பெண்மணி, தெரியாமல் பாவம் செய்து விட்டாலும், அதற்கு பரிகாரமாக அஹோய் பகவதி என அழைக்கப்படும் பெண் தெய்வத்தினை துதிக்கச் சொன்னார்.  அஹோய் பகவதி, பார்வதி தேவியின் ஒரு அவதாரம் என்றும், குழந்தைகளைக் காக்கும் தெய்வம் எனவும் சொல்லி, அவளை நினைத்து கடுமையான விரதம் இருக்கச் சொன்னார்.  விரதத்தின் போது விடிகாலையில் எழுந்து குளித்து, அஹோய் மாதாவைத் துதிதது நாள் முழுவதும் உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.  மாலையில் அஹோய் தேவிக்கு பூஜை செய்து, வானில் நக்ஷத்திரங்களைப் பார்த்த பிறகு தான் விரதத்தினை முடிக்க வேண்டும்.

 

அந்தப் பெண்மணியும் அஷ்டமி தினத்தன்று சுவற்றில் அந்த சிங்கக்குட்டியின் முகம் வரைந்து அஹோய் தேவியினை நோக்கி கடும் விரதம் இருக்க, அஹோய் தேவியும் அப்பெண்மணியின் முன் பிரசன்னமானாள். தெரியாமல் தான் சிங்கத்தின் குட்டியைக் கொன்றுவிட்டதைச் சொல்லி, தன்னை மன்னிக்க வேண்ட, அஹோய் மாதா, அவளது ஏழு மகன்களும் நீடுழி வாழ்வார்கள் என வரம் கொடுத்து மறைந்தாராம். இது நடந்து சில நாட்களில் பெண்மணியின் ஏழு மகன்களும் வீடு திரும்பினார்களாம்.


இந்த நிகழ்வுக்குப் பிறகு தங்களது குழந்தைகளின் நலனுக் காகவும், அவர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் அஹோய் விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுவற்றில் அஹோய் மாதா, சிங்கக்குட்டி உருவம் போன்றவற்றை வரைந்து கொள்ள இப்போதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை என்பதால், இதற்கென்றே ஒரு அச்சிடப்பட்ட நாட்காட்டி வர ஆரம்பித்து விட்டது. நாட்காட்டியின் கீழே குடும்பத்தினர் அனைவருடைய பெயரையும் எழுதி அவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, வீட்டிலுள்ள பெண்கள் இந்த அஹோய் மாதா விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.  
 
 

விரதம் என்றால் பூஜைகளும் உண்டு. பூஜை என்றால் பிரசாதமும் உண்டே! மாலை வேளை பூஜையின் போது பூரி, ஹல்வா [கேசரி] என செய்து அவற்றை மூத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.  விரதம் முடித்தபின்னர் அவற்றையே உண்கிறார்கள்.  வடக்கில் எந்த பூஜை என்றாலும் சுலபமாக பூரி மற்றும் ஹல்வா தான்! கடுகு எண்ணை வாசனையோடு பூரியும் கறுப்பு  கொண்டைக்கடலையும் கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்!] செய்து விடுகிறார்கள்.

இராம பட்டாபிஷேகக் காட்சி!

எது ஆனந்தம்? ஆனந்தம் தர்மத்தில் நிலைபெறுகிறது.
அந்தத் தர்மவடிவாகவே தோன்றிய அவதார புருஷன், 'இராமன்' என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்.               
 
 
தர்மத்தின் ஆனந்தம் அதனால் கிடைக்கும் பலனில் அல்ல, தர்மத்திலேயே, தர்மம் செய்வதிலேயே இருக்கிறது. இந்தத் தத்துவத்தின் ஆதர்ச புருஷன், ஸ்ரீராமன்.

இந்தத் தர்மத்தின் தலைவன் தேசத்தின் தலைவனாகிறான் என்றால் அந்தத் தேசம் கொள்ளும் இன்பத்திற்கும் ஆனந்தத்திற்கும் அளவேது!


காண்போர் கேட்போர் யாவருக்கும் சித்தம் தித்திக்கும் ஒரு காட்சி தான் இராம பட்டாபிஷேகக் காட்சி!

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.


என்று அழகாக அக்காட்சியை வர்ணிக்கிறான் கம்பன்.

மன்னனுடைய சின்னங்களில் முக்கியமானது சிம்மாசனம், அரியணை. தர்மத்திற்கே அடையாளமாய் விளங்குவது சிம்மம். எனவேதான் தர்மமயமான ஆட்சி தரவேண்டி மன்னர்களுக்குச் சிம்மாசனம் அளிக்கிறார்கள்.


அன்று அரியணையில் அறமே அமர்ந்தபோது அதனைத் தாங்கியது - காவல் செய்தது யார்? தர்மமே அனைத்தையும் தாங்குகிறது, தர்மத்தைத் தாங்குகின்றது என்றும் ஒன்று உண்டா? ஆம், உண்டு. இறைமுதல் அனைவரையும் தாங்குவன பாதங்கள். இறைவன் பாதங்களோ கருணையே வடிவானவை. அந்தக் கருணையாலல்லவா அவை தன்னைப் பிடிக்கும் பக்தனுக்கு இறையருளைக் கூட்டி வைக்கின்றன? ஸதா இராஜாராமனுக்குப் பாதசேவனம் செய்து அந்தப் பாதவடிவே ஆகிவிட்ட "சிறிய திருவடி"யான அனுமன் தான் இங்கு அரியணை தாங்குவது. அந்தத் தர்மத்தையும் தாங்கும் பலமுடைய கருணையின் சிறப்பாலேயே கம்பன் முதலில் ஹனுமத் பிரபாவத்தைக் கூறுகிறான்.


தர்மத்தினை ஆளச் செய்வது எது? சாஸ்திரோக்தமான, வேதகர்மாக்களே தர்மத்தை மனதில் நிலைநிறுத்தும். அனந்தமான வைதீகத்தின் பிரதிநிதியாக வசிட்டன் இராமனுக்கு முடிசூட்டுகிறான்.


மனவுறுதி, நேர்மை, தியாகம் இவற்றின் சேர்க்கையே தவம். அந்தத் தவமே தர்மத்தின் மேல் கவிந்து அதனைத் தீமை அண்டாதபடி செய்கிறது. தர்மத்தின் ஒரு பகுதியான தபஸின் வடிவமே பரதன். அவன் இராமனுக்கு வெண்கொற்றக் குடை கவித்தது பொருத்தம் தானே!

தர்மத்தின் பிராணனே பக்தியும், ஞானமும். இடகலை, பிங்கலையான இந்தப் பிராணனைப் போன்றவர்களே இலக்குவனும் சத்ருக்கனும். அவர்கள் சத்திய வடிவினனுக்கு அழகாகச் சாமரம் இரட்டுகிறார்கள்.


இராமனின் இடப்பக்கத்தில் சீதை மகாராணியாக வீற்றிருக்கிறாள். பூமியை ஆளும் வேந்தனுக்குப் பூமிமகள் தேவியானது மிகவும் பொருத்தமே!


தர்மம் எந்த மனதை ஆளுகிறதோ, அந்த மனதைத் தேடிச் செல்வம், வெற்றி, குருவருள், திருவருள், ஞானம் எல்லாம் வருகின்றன. தர்மம் ஆளும் ஒவ்வொருவரும் தன்னை வென்று மன்னர்களாகிறார்கள். எனவே தான் கம்பன் சொல்கிறான், அன்று உலகில் உள்ள அனைவரும் தாங்களே மணிமுடி தரித்ததாக, தாங்களே மன்னர்களானதாக மகிழ்ந்தனர் என்று!

"இராம இராஜ்ஜியத்தில் அகால் ம்ருத்யு பயமில்லை, துஷ்ட மிருகங்களின் வாதையில்லை, வியாதியினால் துயரில்லை, திருடர்களால் பயமில்லை. மழை செழித்தது, வளம் கொழித்தது. மக்கள் அனைவரும் இராமனுடைய தர்மத்தையே ஆசரித்து, இராமன் இராமன் என்று அவன் மகிமையையே எப்போதும் போற்றினார்கள். ஜகத் முழுவதும் இராம மயமாயிற்று" என்று வான்மீகம் இராம இராஜ்ஜியத்தின் பெருமையைக் கூறுகிறது.


இன்றுவரை இராம இராஜ்யத்தின் பெருமை குன்றவில்லை, அந்த இராமனாம் மன்னனின் மகிமையும் குறையவில்லை! ஏனெனில் அன்று அரியணை ஏறியது அரி ஆயிற்றே! அறம் ஆயிற்றே! அழிவற்றதாய அறத்தின் அரசாட்சியின் மாட்சிமை சொல்லி முடியுமோ?

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான்-
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல்.


தீமை அழிந்து தர்மம் உயரும்படியாய் இராம இராஜ்ஜியம் இப்பூமியில் தழைக்கச் செய்ததான இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்த திருநாள் என்று?


தீமையிருள் நீங்கித் தீபம் ஒளிரும் தீபாவளித் திருநாள் தான்!
இந்தத் தீபாவளித் திருநாளில் இராம இராஜ்ஜியம் இந்த மண்ணிலும் நம் மனங்களிலும் ஓங்க நாமும் இராம நாமங்கூறி தர்மத்தை வழிபடுவோமாக!
 
 

ஸ்வர்ண தாரிணி மஹாலக்ஷ்மி!


 
ஸ்ரீமகாலட்சுமி பொன் நிறம் கொண்டவள். மஞ்சள் நிறம் ஸ்வர்ணம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவர்கள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள், குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.

மந்த ஹாஸ முகமுடையவள். சுவர்ண பிரகாரங்களைக் கொண்டது. இவள் பவனம் கருணையுடையவள். வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள். அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவன் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள். தாமரை மலரில் அமர்ந்திருப் பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குண முடையவள்.

இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள். மகாலட்சுமி சூரியன் போன்று பிரகாசிப்பாள். இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது. இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் வீடு தேடி வந்தடைவர்.




இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவள் செழிப்பைத் தருபவள். கோமயத்தில் (பசு மூத்திரம்) வாசம் செய்பவள். சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈச்வரி. ஆசையயை நிறைவேற்றி, வாக்குச் சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருட்களுக்கு ருசியையும் அளிப்பவள்.

மகாலட்சுமியின் குமாரர் கர்தமர். சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே. இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள். செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளையெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மை விட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கப்படுகின்றாள்.

ஸ்ரீசுக்தத்தை தினமும் ஐபம் செய்ய மகாலட்சுமியின் பேரரருள் முழுமையாகக் கிடைக்கும்.

 
வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று சொல்லப்படுகிறது. சவுபாக்கிய சஞ்சீவினியில் லட்சுமி வில்வக்காட்டில்
மரத்தடியில் தவம் செய்பவளாக வருணிக்கப்பட்டுள்ளது. வாமன புராணத்தில் லட்சுமியின் கைகளில் இருந்தே வில்வம் தோன்றியது என்று காத்யாயனர் கூறுகிறார்.

காளிகா புராணத்தில் லட்சுமி வில்வ மரங்கள் அடங்கிய காட்டிலேயே தவம் செய்தாள் என்று குறிப்பிடுகிறது.



 
தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வீற்றிருக்கும் திசைகள் வருமாறு:-

கிழக்கில் வித்யாலட்சுமி,
தென்கிழக்கில் தனலட்சுமி,
தெற்கில் சந்தானலட்சுமி,
தென்மேற்கில் தைரியலட்சுமி,


 மேற்கில்மோட்சலட்சுமி,
வட மேற்கில் வீரியலட்சுமி,
வடக்கில் ஜெயலட்சுமி,
வடகிழக்கில் சௌபாக்கிய லட்சுமி
 
என்று அஷ்ட திக்குகளில் அஷ்டலட்சுமிகளாக வாசம் புரிகின்றாள்.
 
 

மஹாலக்ஷ்மிக்குரிய விரதங்கள்!



செல்வத் திருமகள்  மஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.
 
யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள்.
 
யானைகளின் பிளிறலை இலட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.  பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) இலட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர்.
 
கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், இலட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.
 
அட்சய திரிதியை அன்று கோமாதா பூஜை, கஜ பூஜை செய்வது மிகவும் நல்லது.
 
மஹாலக்ஷ்மிக்குரிய விரதங்கள்!

இதில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், இலட்சுமி விரத நாளாகும்.
 
ஆவணி வளர்பிறை பஞ்சமியை "மகாலட்சுமி பஞ்சமி" என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதற்கு, "மகாலட்சுமி நோன்பு" என்று பெயர்.

கார்த்திகை மாத பஞ்சமியை "ஸ்ரீபஞ்சமி" என்று அழைத்து, அன்று இலட்சுமி பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பைத் தரும்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.
 
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் இலட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று இலட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் விருத்தி தரும்.

வசந்த மாதவர் பூஜை:-
அட்சய திரிதியையன்று, பெருமாளை வசந்தமாதவர் என்ற திருநாமம் சொல்லி அழைத்து வணங்குவது மரபு. இது தவிர மகாலட்சுமியையும் அன்று வணங்கலாம். பல கோயில்களில் கருவறை வாசல் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலை திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது.
 
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோற்ஸவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் இலட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள். இவளை, சாந்தி லட்சுமி, பூதிலட்சுமி, பலலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள்.

யாக குண்டங்களின் வடமேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு மண்டலரூப லட்சுமி என்று பெயர்.

திருப்புத்தூர் தீர்த்தம்:- அட்சய திரிதியையின் நாயகியாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார். அந்த தாண்டவம் "இலட்சுமி தாண்டவம்" என்று அழைக்கப் பட்டது. இதுபற்றி திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) திருத்தளிநாதர் கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்த கோயில் "ஸ்ரீதளி" என்றும், ஊர் "திருப்புத்தூர்" என்றும், திருக்குளத்திற்கு "ஸ்ரீதளி இலட்சுமி தீர்த்தம்" என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

"ஸ்ரீ", "திரு" ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமியைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி இலட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள். இவை இலட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு இலட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.

சிவன் கோயிலில் இலட்சுமி பவனி!

சிவாலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி பவனி நடக்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா! இந்த பவனியைக் காண வேண்டுமானால் திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் இலட்சுமி அலங்கரிக்கப்பட்டு, உட்பிரகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் விழா, வேறு சிவாலயங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டலட்சுமி வாசல்!


சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே,
  • ஸ்ரீ துவாரம்
  • இலட்சுமி துவாரம்
  • வாருணி துவாரம்
  • கீர்த்தி துவாரம் என்கின்றனர்.
ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்.
  

ஐப்பசி தேய்பிறை இந்திர ஏகாதசி விரதம்!


மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறினார்.

தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
 

அற்புதம் நிகழ்த்தும் பாபாங்குசா ஏகாதசி விரதம்!


 மாதந்தோறும் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள்.

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும் பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?

இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.

சங்கடஹர சதுர்த்தி!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். 'ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

'ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்'


எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

 

Saturday, 1 October 2016

காசியில் அருள்புரியும் த்வாதச ஆதித்யர்கள்!

சூரிய பகவான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவற்றில் முதன்மையானது புனித கங்கை பாய்ந்தோடும் காசி. இத்தலத்தில் 12 ஆதித்யர்கள் அருள்புரிவதாக காசிகண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத்தான் வேதங்கள் த்வாதச ஆதித்யர்கள் என்று குறிப்பிடுகின்றன. தை மாதம் பிறக்கும் இவ்வேளையில் காசியில் அருள்புரியும் அந்த 12 சூரிய பகவான்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கங்காதித்யர் : பகீரதன் கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த அதே சமயத்தில், காசிக்கு வந்து கங்கைக் கரையில் தங்கி, காசி விஸ்வநாதரை வழிபட்டான் சூரியன். அந்த சமயத்தில், ஆகாயத்திலிருந்து கங்கை பொழிவது கண்டு மகிழ்ந்த சூரியன், தானும் கங்கையை உளமாற வழிபட்டான். இதனாலேயே இவர் கங்காதித்யர் என அழைக்கப்பட்டார். காசியில் லலிதாகாட்டில் உள்ளது இந்த சூரிய பகவானின் ஆலயம்.

விருத்தாதித்யர் : நான்கு வேதங்களையும் கற்ற விருத்தன் என்பவன், சூரிய பகவானைக் குறித்து கடுந்தவம் புரிந்து தன் இளமை மீட்கப் பெற்றான். இந்த விருத்தனுக்கு அருளிய சூரிய பகவான், காசியில் மீர்காட் எனும் இடத்தில் நிலை கொண்டுள்ளார். இவரை தரிசித்தால் வயதான காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளிலிருந்து மீளலாம்.

திரௌபதி ஆதித்யர் : பஞ்சபாண்டவர்களின் மனைவியான திரௌபதி வழிபட்ட சூரியன் இவர். இவரிடமிருந்துதான் திரௌபதி அட்சய பாத்திரத்தைப் பெற்றதாக  ஐதீகம். இவரின் ஆலயம் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் அமைந்துள்ளது.

லோலார்க்கர் ஆதித்யர் : மாந்தரின் மன அழுக்குகளையும், சஞ்சலங்களையும் தனது ஞானத்தால் தீர்ப்பதால் லோலார்க்கர் எனும் பெயர் பெற்ற சூரியனின் ஆலயம் அதிசங்கமத்தில், லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது. அந்த குண்டத்தில் நீராடி அங்கு அருளும் சூரியபகவானை வணங்கினால் தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

மயூகாதித்யர் : பஞ்சகங்கா காட் அருகில் மங்களாகௌரி ஆலயத்தில் அருள்கிறார் மயூகாதித்யர். முன்னொரு சமயம் ஈசனையும், உமையையும் மங்களாகெளரி, கபஸ்தீஸ்வரர் எனும் திருநாமமிட்டு காசியில் பிரதிஷ்டை செய்து கடுந்தவம் புரிந்தார் சூரியபகவான். அவரது தவத்தை மெச்சிய அம்மை-அப்பர், சூரியனுக்கு மயூகன் என பெயர் சூட்டி அருளினர். மயூகன் வழிபட்ட ஈசன் மயூகாதித்யர் ஆனார்.

அருணாதித்யர் : காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று முட்டைகளில் முதல் முட்டையில் இருந்து ஆந்தையும், இரண்டாவது முட்டையில் இருந்து ஊனமுடன் அருணனும், மூன்றாவது முட்டையில் இருந்து கருடனும் தோன்றினர். இம்மூவரில் ஆந்தையும், அருணனும் காசிக்கு வந்து சூரிய பகவானை வணங்கினர். அவர்களுக்கு அருள் புரிந்த சூரியன், அருணனை தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்டார். இந்த அருணாதித்யர், த்ரிலோசனர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஸாம்பாதித்யர் : விஸ்வநாதர் ஆலயத்திற்கு மேற்கே உள்ளது இந்த சூரியனின் ஆலயம். ஸாம்பன் என்பவன் கிருஷ்ணரால் குஷ்டரோகியாகும்படி சாபம்  பெற்றான். பின் கிருஷ்ணர் இரக்கப்பட்டு சொன்ன ஆலோசனையின் பேரில், காசிக்கு வந்து சூரியபகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். ஸாம்பன் வழிபட்ட ஆதித்யனாதலால் ஸாம்பாதித்யர் என பெயர் பெற்றார்.

உத்திர அர்க்கர் : காசிமாநகரின் வடக்கே அலேம்புரா எனும் இடத்தில் உள்ள சூரிய தீர்த்தமே உத்திர அர்க்க குண்டம். அதை வக்ரியா குண்டம் என்றும்  அழைக்கின்றனர். அங்கு ஒரு ஆட்டிற்கும், ஒரு பெண்ணிற்கும் அவர்கள் மேற்கொண்ட தவத்தை மெச்சி சூரியன் அருளிய இடம் அது. வக்ரி எனில் ஆடு என்று பொருள். இங்கு அருளும் சூரிய மூர்த்தி உத்திர அர்க்கர் எனும் திருப்பெயரோடு அருள்கிறார்.

சுஷோல்கா ஆதித்யர் காசியில் புகழ்பெற்ற த்ரிலோசனர், காமேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் அருளும் சுஷோல்கா ஆதித்யர் என்ற சூரிய பகவான் கருடனாலும்,  அவர் தாய் வினதையாலும் வழிபடப்பட்டவர்.

யம ஆதித்யர் : சூரிய பகவானின் புதல்வனான யமதர்மராஜன் காசியில் தன் தந்தைக்கு ஆலயம் அமைத்து தவமியற்றி, வரங்களைப் பெற்றதாக ஐதீகம். இந்த யம ஆதித்யர் ஆலயம் காசியில் சங்கடா காட் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கேசவாதித்யர் : கேசவாதித்யர் என்ற இந்த சூரிய பகவான் வருணா சங்கமத்தில் உள்ள கேசவர் ஆலயத்தில் அருள்கிறார். கேசவனாகிய நாராயணனின் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் கேசவாதித்யர் எனப் புகழ் பெற்று விளங்குகிறார்.

விமலாதித்யர் : தொழுநோயால் பாதிக்கப்பட்ட விமலன் என்பவர் காசிக்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி ஈசனையும் சூரியனையும் வழிபட்டார். இதனால்  மகிழ்ந்த சூரியன், இனி உன் வம்சத்திற்கே தொழுநோய் வராது என வரமருளினார். கதோலியாவுக்கு அருகே ஜங்கம்பாடியில் இந்த விமலாதித்யர் அருள் புரிகிறார்.
 
 

ஒன்பது நலன்களை அருளும் காசியின் நவதுர்கைகள்!

"பராசக்தியின் அம்சம் துர்க்கை. துர்க்கையை வழிபட்டால் துன்பம் போகும்; எதிலும் வெற்றி கிட்டும்' என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

இந்த துர்க்கையை நவராத்திரியின்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிறார்கள்- ஒவ்வொரு திருநாமம் கொண்டு!அந்த வகையில் காசி மாநகரத்தில் வாழும் மக்கள் சைலபுத்ரி, பிரம்மசாரிணீ, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயிணி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என்னும் திருப்பெயர்களில் போற்றி வழிபடுகிறார்கள்.

காசி மாநகரத்தில் கங்கை நதியின் தென் பகுதியில்- அசி நதிக்கரை ஓரத்திலுள்ள துர்க்கா கோவில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. இக்கோவிலை நவதுர்க்கா கோவில் என்று போற்றுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் மூலவராக நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள் துர்க்கை.

நவராத்திரி காலத்தில் இக்கோவிலில் தினமும் துர்க்கைக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு, கங்கை நதியின் கரையோரமுள்ள அழகிய மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள்.

காசி மாநகரில் துர்க்கை, காளி, அம்மன் கோவில்கள் பல இருந்தாலும், காசிவாழ் மக்கள் ஒன்பது நாட்களிலும் சாஸ்திர சம்பிரதாயப்படி தினமும் ஒவ்வொரு துர்க்கை அல்லது அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே உள்ள துர்க்கைக் கோவிலுக்குச் செல்ல இயலாத வர்கள் கங்கை நதிக்கரையோரம் உள்ள நவதுர்க்கைக் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.

நவராத்திரியின் முதல் நாளன்று காசி வருணை நதிக்கரையில் உள்ள மலைமகள் "சைலபுத்ரி' கோவிலுக்குச் செல்கிறார்கள். இமவான் மகளாகிய பார்வதி தேவியே இங்கு சைலபுத்ரியாக அருள்புரிகிறாள்.
 
காளையை வாகனமாகக் கொண்ட இந்த தேவி, வலக்கையில் சூலமும் இடக் கையில் தாமரையும் ஏந்தி மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளாள். இத்தேவியை வழிபட வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாம் நாள் கங்கைக்கரையோரம் உள்ள துர்க்கா காட் படித்துறையருகே உள்ள பிரம்மசாரிணி கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள். இந்த தேவி எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருப்பாள். வெண்ணிற ஆடையுடன், வலக்கையில் ஜெபமாலையும் இடக்கையில் கமண்டல மும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த தேவியை வழிபட மனதில் உறுதி பிறக்கும்; எதையும் சாதிக் கும் சக்தி கிட்டும்.

மூன்றாம் நாள் காசி சௌக் கடைத் தெருவில் உள்ள சித்திரகாண்டா துர்க்கை கோவிலுக்குச் செல்கிறார்கள். தங்கமயமான அழகிய தோற்றம் கொண்டவள் இந்த தேவி. புலி மீது அமர்ந்த திருக்கோலம். மூன்று கண்களும் பத்து கரங்களும் கொண்டவள். சூலம், கதை, கத்தி, கமண்டலம், வில், அம்பு, தாமரை, ஜெபமாலை, அபய, வரத முத்திரைகளுடன்  காட்சி தருகிறாள். வீரத்தின் திருவுரு வான இந்த தேவியை வழிபட்டால், சகல இடர்களையும் களைந்து மனதிற்கு தைரியத்தை அளிப்பாள். சித்திரகாண்டாவை சந்திர காண்டா தேவி என்றும் சொல்வர்
 
நான்காம் நாள் காசியின் தென் எல்லை யாகக் கருதப்படும் கூஷ்மாண்டா நவதுர்க்கை கோவிலுக்குச் செல்வது வழக்கம். இந்த தேவியின் புன்சிரிப்பு உலகத்தை வாழ வைக்கும் சக்தி கொண்டது என்று தேவி பாகவதம் போற்றுகிறது. சூரிய மண்டலத்தில் வசிக்கும் இத்தேவி, சூரியனைப்போல் பல திசைகளிலும் தன் ஒளியை வீசி அருள்புரிகிறாள். புலியை வாகனமாகக் கொண்டவள். எட்டு கைகளில் சக்கரம், கதை, ஜெபமாலை, அமிர்த கலசம், தாமரை, வில், அம்பு, கமண்டலம் கொண்டு வீற்றிருக்கிறாள்.

ஐந்தாம் நாள் காசியில் ஜைத்புரா என்ற பகுதியிலுள்ள ஸ்கந்தமாதா கோவிலுக்குச் செல்வார்கள். சைலபுத்ரி, பிரம்மசாரிணியாகத் தவமிருந்து சிவனை மணந்து, முருகப் பெருமானை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றவள் இந்த தேவிதான். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். மேலிரண்டு கரங்களில் தாமரை மலரை ஏந்தி, கீழிரண்டு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கிறாள்.

ஆறாம் நாள் ஆத்ம விசுவேசுவரர் கோவி லில் எழுந்தருளியுள்ள காத்யாயிணி தேவியை வழிபடுகிறார்கள். காத்யாயனவர் என்ற முனிவர் அம்பாளை நோக்கித் தவமிருந்து வேண்டிக் கொண்டபடி, தேவியானவள் அவருக்கு மகளாகப் பிறந்த தால் இப்பெயரைப் பெற்றாள். தங்கம் போன்ற ஒளியுடன் பிரகாசிக்கும் காத்யாயிணி புன்சிரிப்புடன் சிம்மத்தின்மீது அமர்ந்திருக்கி றாள். நான்கு கரங்கள் கொண்டவள். அபய, வரத முத்திரைகளுடன் வாளும் தாமரையும் ஏந்தியிருப்பவள். எதிரிகளை அழிக்கும் சக்தி கொண்ட இத்தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிவர்.

ஏழாம் நாள் காசியில் காளிகாகலி என்ற இடத்திலுள்ள காளராத்திரி கோவிலுக்குச் சென்று துர்க்கையைத் தரிசிக்கிறார்கள். இந்த தேவியின் தோற்றம் சற்று வித்தியாசமானது. உடலின் நிறம் கறுப்பு, தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்ற ஒளி உமிழும் மாலை அணிந்தவள். மூன்று கண்களும் சிவந்து பெரிதாகக் காணப்படும். கழுதை வாகனம் கொண்டவள். நான்கு கைகளிலும் கத்தி, அரிவாள், அபய, வரத முத்திரை கொண்ட இவள் துஷ்டர்களை அழித்து வெற்றி கொள்பவள். இத்தேவியை வழிபட, தீயவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்.

எட்டாம் நாள் பார்வதியின் அம்சமான மகா கௌரியை வழிபடுவார்கள். இக்கோவில் ஸ்ரீ அன்னபூரணி கோவிலுக்கு அருகிலுள்ளது. எட்டு திருக்கரங்கள் கொண்டவள். ஆட்டுக் கிடா வாகனத்தில் அமர்ந்திருப்பாள். வலது கரங்களில் அபய முத்திரை, சூலம், வாள், சக்கரம்; இடது கரங்களில் வரத முத்திரை, கதை, கத்தி, சிறிய துடுப்பு வைத்திருக்கும் இந்த தேவி சாந்த முகத்துடன் காட்சி தருவாள். இவளை வழிபட பசிப்பிணி நீங்கும்; மனதில் அமைதி நிலவும்.

ஒன்பதாம் நாள் காசி சித்தாத்திரி சங்கடா கோவிலுக்கு அருகேயுள்ள சித்திதாத்திரி (சித்திமாதா) எனப்படும் துர்க்கை கோவிலுக் குச் செல்வார்கள். இவள் தாமரை மலர்மீது அமர்ந்திருப்பாள். நான்கு கரங்கள் கொண்ட வள். வலது கீழ் கரத்தில் கதையும் மேல் கரத்தில் சக்கரமும்; இடது கீழ் கையில் தாமரையும் மேல் கரத்தில் சங்கும் வைத்து அருள்புரிகிறாள். இவளின் திருமுகத்தைத் தரிசித்தாலே முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.

கடைசியாக பத்தாம் நாள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ காசி விசாலாட்சியை வழிபட்டு, அருகிலுள்ள ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்று  வழிபாடு முடித்து பிரசாதம் பெற்று அல்லது அன்னதானத்தில் கலந்துகொண்டு, பிறகு காலபைரவரையும் தரிசித்து, தங்களுக்கு உள்ள தோஷங்களைக் களைந்து, கையில் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டு வேண்டுதலை நிறைவு செய்கிறார்கள்.

பராசக்தியின் வடிவமான அன்னை துர்க்கா தேவியை வழிபட்டால் வாழ்வில் எதிலும் வெற்றிகிட்டும் என்பதால், நவராத்திரி காலங்களில் துர்க்கா தேவியை மூன்று விதமாக வகைப்படுத்தி வழிபடுவது வழக்கம். பராசக்தி, சரஸ்வதி, லட்சுமி என்று ஒன்பது நாட்கள் போற்றப்பட்டு, பத்தாவது நாளில் விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில்!

 

 அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இறைவனுக்கு ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமான், கஜ ஆரோகணேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இறைவி, காமாட்சி.

தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வஜ்ரதீர்த்தம், இந்திர கூபம்.

திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவில் முன் காலத்தில் சிவபெருமான் வெண் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். மரத்தின் சருகுகள் விழாதவாறு சிலந்தி ஒன்று சிவலிங்கத்திற்கு மேல் வலையைப் பின்னி வைத்தது. அதே சமயம், யானை ஒன்று துதிக்கையில் காவிரி நீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்தது. சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலையை கண்ட யானை அதனை அறுத்தெறிந்தது.



இதுகண்டு வெகுண்ட சிலந்தி இன்னொரு வலை பின்னியது. மறுபடி யானை அறுத்தெறிந்தது. இப்படி தினந்தோறும் நடந்தது. இதில் ஆத்திரமடைந்த சிலந்தி ஒருநாள் யானை அபிஷேகம் செய்யும்போது துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. யானை துதிக்கையை தரையில் அடித்தது. இதில் யானையும் இறந்தது. சிலந் தியும் இறந்தது. அந்த சிலந்தியே சிவனருளாளரான சோழ மன்னர் சுபதேவர்-கமலாவதிக்கு மகனாக பிறந்த கோச்செங்கணான் (கோச்செங்க சோழன்). இவர் தன் முற்பிறவி வாசனையால் திருவானைக்கா கோயிலை கட்டினார். மேலும், யானையால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, யானை ஏற முடியாதபடி மாடக் கோயில்களாகக் கட்டினார்.

இதுயானை ஏறாத் திருப்பணி’ என்றே அழைக்கப்பட்டது. திருவானைக்காவிற்கு கிழக் கேயுள்ள அரங்கநாதபுரம் கஜாரண்யேஸ்வரர் கோயில் இச்சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். 1750 ஆண்டுகள் பழமையானது.
மாலிக்காபூர் படையெடுத்து வந்தபோது திருவரங்கம், திருவானைக்காவில் இருந்த மூர்த்திகளை காடாக (ஆரண்யம்) இருந்த இப்பகுதியில் மறைத்து வைத்திருந்து பின்னர் எடுத்துச் சென்றமையால் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருசமயம் இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானை நேமத்தில் எழுந்த ருளியுள்ள சிவபெருமானை மெய்மறந்து வழிபட்டது. அதைத் தேடி வந்த இந்திரன் கோபம் கொண்டு யானை மீது வஜ்ராயுதத்தை ஏவினான்.


அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் வஜ்ராயுதம் கஜாரண்ய தலத்துள் வந்து விழுந்தது. விழுந்த இடத்தில் நீரு ற்று ஏற்பட்டது. அதுவே வஜ்ரதீர்த்த குளமாகியது. வஜ்ராயு தத்தை எடுக்க வந்த இந்திரன் அங்கு இந்திர கூபம் என்ற கிணற்றை வெட்டி அந்த தீர்த் தத்தால் கஜாரண்யேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டு பேறு பெற்றான்.



பரிவார மூர்த்திகளாக வலம்புரி விநாயகர், வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இறைவன் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறார். எதிரில் நந்திதேவர்.



தெற்கு நோக்கியபடி காமாட்சியம்மன். மாடக்கோயிலை கஜேந்திரன் தாங்குவது போல் கட்டப்பட்டு ள்ளது சிறப்பு. இது, பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாகும். 25வது நட்சத்திரமான பூரட்டாதி 7ன் மகிமையை விட மிகச் சக்தி வாய்ந் தது. 2ம் எண்ணான மதிகாரகனான சந்திரனுக்கும், 5ம் எண் வித்யாகாரகனான புதனுக்கும் உரியது.

சந்திரனின் புதல்வரே புதன். சந்திரன் மனதை ஆள்பவர். புதன் அறிவை ஆள்பவர். இத்தலத்தில் இறைவனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் ஏழு திரவியங்களுடன்

கூடிய சப்தாமிர்த காப்பு (பஞ்சாமிர்தம் + பாதாம் பருப்பு, முந்திரி) ஏழுவகை நிவேதனங்களால் வழிபடுவதால் ஏழேழு ஜென்மங்களாக தொடரும் சாபங்களை அழித்து கடைத்தேற கஜாரண்யேஸ்வரர் அருள்பாலிகிறார். ஐராவதம் மற்றும் இந்திரன் வழிபடும் இத்தலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் சந்திரஹோரையில் இறைவனை வழிபடுவதால் பதவியில் ஏற்படும் ஆப த்துகள் நீங்கி பதவி உறுதியாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இசையில் அவரோகண (ஏழு) பீஜங்கள், தட்சிணாமூர்த்தியால் வில்வ தளங்களில் வைத்து ஆஞ்சநேயருக்கு அளிக்கப் பெற்ற திருத்தலம் இது. ஸ்ரீசாகம்பரி தேவி இங்குள்ள திருக்குளத்தில் ஏழு அல்லிமலர்களை தோற்றுவித்து வேத அல்லிமலர் குருபீடத்தை உலகிற்கே அளித்தாள். இதனால் ஏழேழு ஜென்மங்களும் கடைத்தேற இங்கு ஏழு தினங்கள் வில்வ மரத்தின் கீழ் தியானம் மேற்கொள்ளலாம். ஏழு வண்ண ஆடைகளை தானம் அளித்தல் இன்னும் சிறப்பாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கல்லணை செல்லும் (அகரப்பேட்டை வழி) சாலையின் தென்புறம் இத்தலம் உள்ளது.
 
ஆலயத் தொடர்புக்கு: 94439 70397.