Wednesday, 26 October 2016

தீபாவளி திருநாள்!

தீபாவளி பண்டிகை (நம் சம்பிரதாய முறையில்)நரகாசுர வதம் காரணமாக தீபாவளிப் பண்டிகையில் நரகசதுர்த்தசி ஸ்நானம் என்று போற்றப்படும் தீபாவளி எண்ணெய்க் குளியல் மிகவும் மகிமை வாய்ந்தது.

அன்றைய தினம், அனைத்து நீர் நிலைகளில், கங்கையும், நல்லெண்ணெயில் ஸ்ரீ லக்ஷ்மியும் வாசம் செய்கிறார்கள்.

'தைலே லக்ஷ்மி, ஜலே கங்கா' என்பது ஐதீகம்.

ஆகவே, அன்று யாரைப் பார்த்தாலும், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று விசாரிப்பது நமது சம்பிரதாயம்.

அன்றாடம் செய்யும் குளியலில், 'கங்கா, கங்கா' என்று உச்சரித்தபடி குளிக்க, கங்கா ஸ்நானப் பலன் கிடைக்கும். அவ்வாறிருக்க, கங்கையே நம் வீடு தேடி வரும் நன்னாளில், சூரியோதயத்திற்கு முன் குளிக்க கங்கா ஸ்நானப் பலன் கட்டாயம் கிடைக்கும்.

தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தஸீம்
ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யமலோகம் ந பச்யதி (நிர்-147)
தீபாவளியன்று அதிகாலை சந்திரன் இருக்கும் போதே, தலையில் நல்லெண்ணை தேய்த்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு நரக பயம் என்பதே ஏற்படாது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்.

தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது.

தீபாவளி வெந்நீர்


ஒரு பாத்திரத்தில், தேவையான நல்லெண்ணையை எடுத்து ஓமம், மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு, மஞ்சள் பொடி, வெற்றிலை இவைகளைப் போட்டு, பொங்கக் காய்ச்சி எடுத்து வைக்கவும்.

அக்காலத்தில் தீபாவளிக்கு முதல் நாளை நீர் நிரப்பும் பண்டிகை என்பர். ஒரு அண்டாவை சுத்தம் செய்து பொட்டிட்டு அதில் நீர் நிரப்புவார்கள். பின் அந்த நீரில் அரசு, ஆல், அத்தி, பூவரசு, மாவிலங்கை ஆகிய ஐந்து வகை மரப்பட்டைகளை ஊற வைப்பார்கள்.

அந்த நீரை பின்னிரவு 3.00 மணிக்கே சுடவைத்து விடுவார்கள். அந்த வெந்நீரில்தான் கங்கா ஸ்நானம் செய்வார்கள். இதனால் சளி பிடிக்காது; தலைவலி வராது.

அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி,

அரப்புத் தூளில் கலைவாணி,

சந்தனத்தில் பூமாதேவி,

குங்குமத்தில் கௌரி,

மலரில் மோகினி,

தண்ணீரில் கங்கை,

புத்தாடையில் விஷ்ணு,

பட்சணத்தில் அமிர்தம்,

தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.

 

மகாலட்சுமி பூஜை

கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.
லட்சுமி குபேர பூஜை

தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். "சுக்லாம் பரதரம்' சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

"ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம'
என 108 முறை சொல்லலாம்.
குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.
முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர் களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.
கேதார கௌரி நோன்பு

இது தீபாவளியுடன் சேர்ந்து வரும் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் செய்யும் நோன்பு. இதனால் மாங்கல்ய பலம் கூடும். பார்வதி தவம் இயற்றி ஈசனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீ ஆன நாள் இது. தீபாவளியன்று பெண்கள் கணவனுடன் இணைபிரியாது வாழ மேற்கொள்ளும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். 21 அதிரசம் படைப்பர்.
தன்வந்திரி பூஜை

பாற்கடலைக் கடையும்போது தோன்றியவர் தன்வந்திரி பகவான். இவர் மருத்துவக் கடவுள். கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய திருமாலின் அம்சமான இவரை வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

யமதீபம்

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். ஒரு ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும். யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.

சூரியனின் பிள்ளை யமன்; பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம் யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான்.

யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது.


தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளான திரயோதசி அன்று மகாலட்சுமி தங்கள் இல்லங்களுக்கு வருவதாக நம்புகிறார்கள். அன்று தங்கள் இல்லத்தில் தீப அலங்காரங் கள் செய்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள்.

இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று (தீபாவளியன்று) அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் வெளிப்புறங் களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி, தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்வார்கள். சில குடும்பங்களில் விரதம் கடைப்பிடித்து நோன்புத் திருநாளாகவும் கொண்டாடுவர். மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, வணிகர்கள் புதுக் கணக்கு எழுதுவார்கள். சில இடங்களில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும் நடைபெறும்.

நான்காம் நாள் புதுவருடம் பிறந்ததாகக் கொண்டாடுவர். மேலும், கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றிய நாளாகவும் கொண்டாடுவர்.

ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. இது சகோதர- சகோதரிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அன்று உடன்பிறந்த வர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெறுவதுடன், பரிசுகளும் கொடுப்பார்கள்; பெறுவார்கள்.

யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது.

அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார் களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.

மேலும் மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் உடனே திரும்பிச் செல்வதில்லை. தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற் குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம்.

 

No comments:

Post a Comment