பொன்நிறள் பொற்குணள் பொன்னிற முகத்தவள் பொன்னிற கரத்தவள் பொன்மகளே
பொற்கனி மழை பெய்து சத்குண சங்கரர் புகழை நிலைபெற செய்தவளே
பொன் நகை உடலையும் புன்னகை முகத்தையும் அணிசெய்ய அழகுடன் திகழ்பவளே
பொற்பதம் துதிப்பவர் அற்புத நலம் பெற பொற்கரம் உயர்த்தி அருள்பவளே
பொன் தோடுகள் தொங்கிடும் காதுகள் அது தந்து பக்தர்கள் குறையை கேட்பவளே
பொன் மூக்குத்தி அணிந்துள்ள நாசிகள் உடையவள் வளம் தரும் விழிகளால் அருள்பவளே
பொன் மகுடம் அணிந்துள்ள தலையதை அசைத்து பக்தர்கள் குறை செவி மடுப்பவளே
பொன் மாலைகள் புரளும் மார்பினில் பக்தர்கள் வாழ்ந்திட எண்ணங்கள் சுரப்பபவளே
பொற் கொலுசுகள் அணிசெய்யும் பாதங்கள் துதிப்பவர் வறுமையை ஏழ்மையை அழிப்பவளே
பொன் மெட்டிகள் அணிசெய்யும் அழகிய பாதங்கள் துதிப்பவர் வளம்பெற அருள்பவளே
பொன் வளையல்கள் அணிசெய்யும் கரங்களில் பங்கய மலர்களை உயர்த்தி பிடிப்பவளே
பொன் மோதிர விரல்கள் விளங்கிடும் கரங்கள் உயர்த்தி வரங்கள் அருள்பவளே
வைரம் வைடூரியம் மரகதம் முத்து மாணிக்கம் பவளம் புட்பராகம்
கோமேதகம் நீலம் நவ ரத்தினம் அனைத்தும் பதித்த பொன் இடை ஒட்டியாணம்
அணிந்துள்ள இடையோ இறையே உன்போல் உளதோ இலதோ எனத் தோன்றும்
உன் இடை போல் ஐயம் தராது உன் அன்பு உன் பக்தர்கள் வளமே அதைக் காட்டும்
பொற்றாமரை மேல் பொன்னிற பட்டு அணிந்து பொன்போல் மிளிர்கின்றாய்
பொற்குடம் உயர்த்தி வெண்ணிற இபங்கள் பூமழை பொழிந்திட குளிர்கின்றாய்
பொற்பதம் துதித்தேன் பொற்கரம் உயர்த்தி பொன் மகன் என்றென்னை செய்திடுவாய்
பொற்குணர் சற்குணர் நற்குணர் நாரணர் புகழ் புவியில் பரப்பிட உதவிடுவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் பொருள் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் புகழ் தருவாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் அன்பது அருள்வாய் வெல்ல வைப்பாய்
அன்னையே அருள்வாய் அன்புடன் அருள்வாய் உலகெங்கும் என் புகழ் செல்ல வைப்பாய்
செய்யவள் துய்யவள் உண்மையள் நன்மையள் அன்பினள் பண்பினள் பெரும் செல்வி
துதிசெய்ய அருள்பவள் வரமது தருபவள் பொன்மழை பொழிபவள் பெரும் செல்வி
இனிமையள் கனிவினள் பொறுமையள் பெருமையள் அன்பினள் அறிவினள் பெரும்செல்வி
நன்மையை காத்திட தீமையை தீர்த்திட வன்மையாய் வெகுள்பவள் பெரும் செல்வி
பரம் பொருள் வடிவினள் வறுமைக்கு விடிவினள் துயருக்கு முடிவினள் பெரும் செல்வி
பாற்கடலில் தோன்றியே மாலவர் கரத்தினை மணம்செய்து பற்றிய பெரும் செல்வி
மாலவர் மார்பினில் மகிழ்ந்தே வசிக்கின்ற பார்கவர் தவ மகள் பெரும் செல்வி
மாலவர் பாதத்தை மடிமேல் வைத்து பதசேவை செய்யும் பெரும் செல்வி
சந்திரன் தங்கையே இந்திரன் தெய்வமே அரசரை அரசராய் செய்பவளே
சூரியன் மறைந்திடும் வேளையில் அனுதினம் இல்லங்கள் தோறும் வருபவளே
நாரணரின் ஆயிரம் பெயர்களை ஓதிட ஓதுவோர் கடன்களை தீர்ப்பவளே
தரும் குணம் கொண்டோர் இல்லத்தில் செல்வத்தை மழைபோல் அன்பால் வார்ப்பவளே
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி சந்திரன் தங்கையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி மாலவர் மகிழ்ச்சியே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி பார்கவர் மகளே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி இதயவாசனார் இதயமே பெரும் செல்வி
கண்களால் அருள்பவள் செல்வத்தை தருபவள் வறுமையை துடைப்பவள் பெரும் செல்வி
கருவண்டென விளங்கிடும் அழகிய கண்களால் நோக்குவாய் ஊக்குவாய் பெரும் செல்வி
தாமரைக் கண்ணனை ரசித்திடும் கண்ணினள் கண் கண்டிடும் இடங்களில் வளம் கொழிக்கும்
அக்கண்களை கொண்டெனை கண்டிட வேண்டும் கண்களால் அருள்செய்யும் பெரும் செல்வி
பிள்ளையார் அத்தையே சரவணர் அத்தையே மாலவர் மனைவியே பெரும் செல்வி
தெய்வங்கள் யாவரும் கொண்டுள்ள செல்வங்கள் நீயே அருள்செய்தாய் பெரும் செல்வி
செல்வத்தின் உருவமே செல்வத்தின் வடிவமே செல்வத்தை தந்திடும் பெரும் செல்வி
நாரணர் நாயகி மாலவர் மார்பினள் பாற்கடல் வாசனார் பாசமே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ராமரின் சீதையே பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி கண்ணனின் ருக்மிணி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி ரங்கரின் நாயகி பெரும் செல்வி
லட்சுமி லட்சுமி லட்சுமி லட்சுமி வேங்கடரின் பத்மாவதி பெரும் செல்வி!
No comments:
Post a Comment