Saturday, 1 October 2016

16 - திருவருள் புரியும் லலிதாம்பிகை

சக்தி பீடங்கள் : திருஈங்கோய்மலை - 16

முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரினும் சிறந்தவராய் இருப்பவர் தமிழ் குருவாகிய அகத்தியர். அவர் ஹயக்ரீவரிடம் தேவி உபாசனை, லலிதா  ஸஹஸ்ரநாமம்,  லலிதா த்ரிசதீ, போன்றவற்றை கற்றவர். அந்த லலிதாதேவியை குறித்து தவம் செய்வதற்குரிய மிகவும் சிறந்த புண்ணிய க்ஷேத்திரம்  திருஈங்கோய்மலை என அறிந்து தேனீ வடிவாக தவம் செய்தார். ஆகாயத்தில் நட்சத்திர வடிவாகவும், மண்ணுலகில் முனிவர் வடிவமாகவும், ஈங்கோய்  மலையில் தேனீ வடிவமாகவும் அகத்தியர் காட்சியளிப்பார். எல்லா மந்திரங்களும் 51 அக்ஷரங்களிலேயே அடங்குகின்றன. அவற்றுள் ஈஸ்வரர்களுக்கெல்லாம்  ஈஸ்வரியாகவும் ஸச்சிதானந்த பரப்பிரம்மமாகவும் விளங்கும் ‘ளம்’ எனும் பீஜாக்ஷர சக்தி மிகவும் மேலானதாகக் கருதப்படுகிறது. இந்த அக்ஷரம் நமது  உடலின் இரு புருவங்களுக்கு இடையே மூக்கிற்கு நேரே உள்ள இதழிலுள்ளது.

கிருதயுகத்தில் இம்மலை மரகதமயமாக பளபளவென்றிருந்ததால் சதிதேவியின் முகஜோதி சாயை (நிழல்) விழுந்தது. அதனால் இந்த சக்தி பீடம் சாயாபீடம் என  வழங்கப்படுகின்றது. இப் பீடம் ரத்னாவளி பீடம் என்றும் வழங்கப்படுகிறது. மேலும் இத்தலம் சோமாஸ்கந்த தலமாகவும் போற்றப்படுகிறது. காலையில்  காவிரியில் நீராடி, காலைக்கடம்பர், மதியம் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்ற மூன்று தலங்களையும் யார் றாரோ அவர் முற்பிறவி பாவங்களெல்லாம் நீங்கி  புனிதராகிறார் என்பது ஐதீகம். இதைக்கேள்விப்பட்ட அகத்தியர் முறைப்படி காவிரியில் நீராடி இத்தலம் வந்தபோது ஆலயம் மூடப்பட்டிருந்தது.

மனம் வருந்திய  அகத்தியருக்கு ‘யாரை பூஜிக்க நீ காவிரி நீரை எடுத்துச் சென்றாயோ அந்த பூஜைக்குரிய நாயகியான நான் வீற்றிருக்கும் தலம் இது. இங்கு ஓடும் சர்ப்பநதியில்  நீராடி உனது சித்தியின் மகிமையால் ஈ உருக்கொண்டு என்னையும் மரகதாசலேஸ்வரரையும் தரிசிப்பாயாக.

நீயும் உன் மனைவி லோபாமுத்திரையும் தேனீ உருக்கொண்டு இங்கு அருவமாக இருந்து என்னை வழிபட்டு வாருங்கள்’ என்றது ஓர் அசரீரி. அதன்படி  அகத்தியர் உருமாறி இத்தலநாயகி லலிதாம்பிகையை வழிபட்டார். அகத்தியர் உருமாறிய இடம் இன்றும் ‘கொண்ட உருமாறி’ என்பது ‘கொண்டாமாறி’ என  மறுவிவிட்டது. இந்த லலிதாதிரிபுரசுந்தரியை ஸ்ரீசக்ரத்திலும், மேருவிலும், விக்ரக வடிவிலும் வழிபடலாம். லலிதாம்பிகையின் உருவத் திருமேனியாகிய  ஸ்ரீசக்ரராஜ பரிபூர்ண மஹா மேரு பீடமானது சிலா விக்ரகமாக மூலஸ்தானத்தில் நிறுவப்பெற்றுள்ளது. மேருவிற்குத்தான் அபிஷேகம், நவாவரண பூஜை, லலிதா  ஸஹஸ்ரநாம அர்ச்சனை, லலிதா த்ரிசதீ அர்ச்சனை போன்றவை நடை பெறுகின்றன. இங்கு அனைத்து பூஜைகளையும் யாகங்களையும் பெண்களே  யோகினிகளாக இருந்து செய்வது தனிச்சிறப்பாகும்.

தமது இதயத்தில் லலிதாம்பிகையை நிறுத்தி கைகளிலே மலர் எடுத்து ‘ஸ்ரீமாத்ரே நமஹ’ என்று நின்றவாறு பூஜை செய்யும் பேறு கோடியில் ஒருவருக்கே  கிட்டும். இந்த யோகினிகள் மகாமேருவிற்கு அர்ச்சனை செய்யும்போது நாமாவளிகளைச் சொல்லியபடி வலம்வந்து ஒவ்வொரு பூவாக எடுத்து  ஆவரணங்களின்மேல் படிப்படியாகப் பொருத்துகிறார்கள். அர்ச்சனை முடிந்தபின் கருவறையை நோக்கினால், அந்த மகாமேரு, அந்த வண்ண மலர்களால்,  மலர்மலையைப் போல் தோற்றமளிப்பதைக் காணக் கண் கோடிவேண்டும். லலிதாம்பிகையை தியானிப்பவர்களுக்கு உருவத்திருமேனி வேண்டுமல்லவா?  வெள்ளைப் பளிங்கினால் லலிதாதேவி இத்தலத்தில் அருள்கிறாள். லலிதாதேவி அமர்ந்திருக்கும் ரத்னமயமான கட்டிலின் கால்களாக ருத்ரன், ஈசன், நான்முகன்,  திருமால் நால்வரும் துலங்க, சதாசிவனே அந்த மஞ்சத்தின் பலகையாக இருக்க, அவன்மேல் அமர்ந்து அருளும் திருக்கோலம் கொண்டவள்.

இந்த ஐவரும் அம்பிகையை த்யானம் செய்து அவளின் அருட்கடாட்சத்தினால் பெண்வடிவம் பெற்றனர் என ஸ்கந்தபுராணம் கூறுகிறது. அதன்படி இவர்கள் அழகிய  பெண்களின் வடிவில் காட்சியளிக்கின்றனர்.  பரப்ரம்ம சக்தியான இவளே அன்பின் சக்தியாகவும் கொண்டாடப் படுகிறாள். ஆளுமை, கீர்த்தி, செல்வம், வைராக்யம்,  மோக்ஷம், ஐஸ்வர்யம் எனும் ஆறு பகங்களுக்கு இவளே அதிபதியாதலால் பகவதி என்றும் வணங்கப்படுகிறாள். இருபுறங்களிலும் லக்ஷ்மி. சரஸ்வதி இருவரும்  அம்பிகைக்கு வெண்சாமரம் வீசுகின்றனர். அழகே உருவானவள் இந்த அம்பிகை.  இவளே அரசிகளுக்கு எல்லாம் அரசி. அன்பின் திருவுரு. நளினத்தின்  உறைவிடமான லலிதா. மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா. தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும்  லலிதாதிரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள்.

திரிபுரசுந்தரிக்கு வெளிப்படையான அர்த்தம் இது. ஸ்தூலம், சூஷ்மம், காரணம் எனும் மூன்று சரீரத்திலும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவள். ஒன்பது வாயில் உள்ள  ஒரு தேக பட்டணத்தில் ஆத்மா வசிக்கிறது என்பதை கீதையும் உபநிஷதங்களும் கூறுகின்றன. இம்மூன்று சரீரங்களையும் ஜீவகளையுடன் அழகாக இருக்கச் செய்வதாலும் அம்பிகை லலிதாதிரிபுரசுந்தரி என வணங்கப்படுகிறாள். ஸ்ரீசக்ரமே நமது உடல். 9 ஆவரணங்களும் நம் உடலிலேயே உள்ளன. ஸ்ரீமாதா நம்மிலேயே  உறைகிறாள். ஸ்ரீமாதாவின் அருள் கடாக்ஷம் பெற்றவர்கள் ஸ்ரீமாதாவாகவே மாறிவிடுவதும் இதனால்தான். இவளை ஸஹஸ்ராரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்  தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்க வேண்டும்.

த்யானம் சித்தியானால் அங்கிருந்து அமிர்தம் பெருகி நம் தேகம் முழுவதும் பரவி எல்லையற்ற ஆனந்தம் உண்டாகும். தேவியின் பாதங்கள் எவ்வளவு மகிமை  வாய்ந்தது தெரியுமா? மண்ணுலக மனிதரும் விண்ணுலக தேவரும் மரணத்தையே வென்ற முனிவர்களும் அவளுடைய திருவடிகளைத் தொழும் அடியார்  கூட்டத்தில் உள்ளனர். மார்கண்டேயர்கூட தேவியை வழிபட்டே மரணத்தை வென்றார் என்று  திருக்கடவூர் புராணம் கூறுகிறது. இதைத்தான் ‘மனிதரும்  தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே’ என்று பட்டர் பாடினார். அந்த பராசக்தியான லலிதா திரிபுரசுந்தரியின்  பாதாரவிந்தங்களை சரணடைவோம்.

அக்ஷர சக்தி பீடங்கள் பஞ்சசாகரம் பீடம்

தேவியின் கீழ் பல்வரிசை  விழுந்த இடம். அக்ஷர சக்தியின் நாமம் ஓங்காரதேவி (ஓம்) எனும் அஷ்வினி தேவி. பீட சக்தியின் நாமம் வாராஹி. இத்தலத்தை  மகாருத்ரர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். சிவப்பு நிறத்துடன் ஆறுமுகங்கள், பன்னிெரண்டு கரங்களுடன் விளங்குகிறாள். இவள் வலக்கரங்களில் முறையே  அங்குசம், அம்பு, கத்தி, பாசக்கயிறு, சங்கு, சின்முத்திரை, முதலியவற்றையும் இடக்கரங்களில் முறையே சூலம், வில், கேடயம், முஸலம் எனும் குறுந்தடி,  புஸ்தகம், அபயஹஸ்தம் போன்றவற்றையும் தரித்தருள்கிறாள். ஓரக்கண்ணால் சாய்வான பார்வையுடையவளாக மயில்வாகனத்தில் அமர்ந்து சர்வசத்ரு  பயங்கரியாக தரிசனம் அளிப்பதாக இத்தேவியின் த்யானஸ்லோகம் வர்ணிக்கிறது. இத்தலம் எங்கு உள்ளது என அறியப்படவில்லை.


 

No comments:

Post a Comment