Wednesday, 19 October 2016

மஹாலக்ஷ்மிக்குரிய விரதங்கள்!



செல்வத் திருமகள்  மஹாலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.
 
யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள்.
 
யானைகளின் பிளிறலை இலட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.  பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) இலட்சுமி இருக்கிறாள். எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர்.
 
கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், இலட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது. பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் இலட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது.
 
அட்சய திரிதியை அன்று கோமாதா பூஜை, கஜ பூஜை செய்வது மிகவும் நல்லது.
 
மஹாலக்ஷ்மிக்குரிய விரதங்கள்!

இதில் முதன்மை பெற்றது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியும், இலட்சுமி விரத நாளாகும்.
 
ஆவணி வளர்பிறை பஞ்சமியை "மகாலட்சுமி பஞ்சமி" என்று அழைக்கின்றனர். அன்று தொடங்கி அஷ்டமி வரை, நான்கு நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதற்கு, "மகாலட்சுமி நோன்பு" என்று பெயர்.

கார்த்திகை மாத பஞ்சமியை "ஸ்ரீபஞ்சமி" என்று அழைத்து, அன்று இலட்சுமி பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பைத் தரும்.

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது அஷ்டலட்சுமி விரதம் ஆகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் 16 செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வாழலாம்.
 
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரிதியை திதிகளில் இலட்சுமி பூஜை செய்வது, செல்வத்தைப் பெருக்கும். குறிப்பாக, அட்சய திரிதியை அன்று இலட்சுமி வழிபாடு செய்வது பொன், பொருள் விருத்தி தரும்.

வசந்த மாதவர் பூஜை:-
அட்சய திரிதியையன்று, பெருமாளை வசந்தமாதவர் என்ற திருநாமம் சொல்லி அழைத்து வணங்குவது மரபு. இது தவிர மகாலட்சுமியையும் அன்று வணங்கலாம். பல கோயில்களில் கருவறை வாசல் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப் பட்டிருப்பதைக் காணலாம். அந்த கஜலட்சுமிக்கு கருவறை வாசலை திறக்கும்போதும், அடைக்கும்போதும் மந்திரப்பூர்வமாக பூஜை செய்யப்படுகிறது.
 
சிவாலயங்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மோற்ஸவத்திற்கு முன்னதாக தனபூஜை என்னும் பெயரில் இலட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. சிவாலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தும்போது யாகசாலையின் நான்கு புறமும் உள்ள நான்கு வாசல்களின் மேலும் மகாலட்சுமி, தோரண சக்தியாக வீற்றிருப்பாள். இவளை, சாந்தி லட்சுமி, பூதிலட்சுமி, பலலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என்று அழைப்பார்கள்.

யாக குண்டங்களின் வடமேற்கு திசையில் மகாலட்சுமியை கலசத்தில் எழுந்தருளச் செய்து பூஜிப்பர். இவளுக்கு மண்டலரூப லட்சுமி என்று பெயர்.

திருப்புத்தூர் தீர்த்தம்:- அட்சய திரிதியையின் நாயகியாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். ஒருமுறை மகாலட்சுமி செய்த தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், பத்து கரங்களுடன் அவள் முன்னே தோன்றி நடனமாடினார். அந்த தாண்டவம் "இலட்சுமி தாண்டவம்" என்று அழைக்கப் பட்டது. இதுபற்றி திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்) திருத்தளிநாதர் கோயில் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  இவ்வூரில் திருமகள், சிவனை வழிபட்டதால், அவளது பெயரால் இந்த கோயில் "ஸ்ரீதளி" என்றும், ஊர் "திருப்புத்தூர்" என்றும், திருக்குளத்திற்கு "ஸ்ரீதளி இலட்சுமி தீர்த்தம்" என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

"ஸ்ரீ", "திரு" ஆகிய இரண்டு பெயர்களும் மகாலட்சுமியைக் குறிக்கும். இவ்வூர் மட்டுமின்றி இலட்சுமி தாயார், சிவபெருமானை திருவாரூர் தியாகராஜர் கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் ஆகிய தலங்களிலும் சிவனை வழிபட்டிருக்கிறாள். இவை இலட்சுமி தலங்களாக கருதப்படுகின்றன. இவ்வூர்களில் உள்ள தீர்த்தங்களுக்கு இலட்சுமி தீர்த்தம் என்றே பெயர்.

சிவன் கோயிலில் இலட்சுமி பவனி!

சிவாலயம் ஒன்றில் வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி பவனி நடக்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா! இந்த பவனியைக் காண வேண்டுமானால் திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் இலட்சுமி அலங்கரிக்கப்பட்டு, உட்பிரகாரத்தில் உலா வருகிறாள். இத்தகைய திருமகள் விழா, வேறு சிவாலயங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டலட்சுமி வாசல்!


சிவபெருமான் அமர்ந்திருக்கும் மகா கைலாயத்தின் எட்டு திசைகளிலும், அஷ்டலட்சுமி வாசல் உள்ளது என்று சிவபுராணம் கூறுகிறது. இவற்றில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் உள்ள வாசல்களை முறையே,
  • ஸ்ரீ துவாரம்
  • இலட்சுமி துவாரம்
  • வாருணி துவாரம்
  • கீர்த்தி துவாரம் என்கின்றனர்.
ஸ்ரீ, வாருணி, கீர்த்தி ஆகிய பெயர்கள் மகாலட்சுமியையே குறிக்கும்.
  

No comments:

Post a Comment