த்யானம்
சக்ரம் கண்டாம் கபாலம் ச சங்கம்ச தந்திகண:
தமால ச்யாமளோ த்யேயோ வைஷ்ணவீ விப்ர மோஜ்வலை
ஏக வக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ ஸமன்விதாம்
வரதாபயகராம் ச்யாமாம் சங்கம் சக்ரம்ச தாரிணீம்
நவயௌவன ஸம்பன்னாம் மத் கருடவாஹனாம்
சர்வ லக்ஷண ஸம்பன்னாம் வைஷ்ணவீம் தேவிகாம் பஜே:
ஒரு முகம் இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், அபய-வரத முத்திரை, சங்கம், சக்ரம் ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவளும், பால்ய வயதைக் கடந்து யௌவன வயதை அடைந்திருப்பவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவளுமான வைஷ்ணவி தேவியை வணங்குகிறேன்.
மந்த்ரம்
ஓம் வைம் வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:
வைஷ்ணவி காயத்ரி
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
ஓம் தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்.
வலிமையான கருடனைக் கொடியில் கொண்டவளும், சக்ரத்தை ஏந்தியவளும் ஆகிய வைஷ்ணவி தேவியைத் த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி, வேண்டிய வரங்களைத் தருவாளாக.
தேவி மஹாத்மியத்தில் வைஷ்ணவி:
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே.
வைஷ்ணவீ ரூபிணியாக சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம் (வில்) ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம்.
வைஷ்ணவி தேவி, விஷ்ணுவின் சக்தியாகப் பொலிபவள். தேவி புராணம், ‘சங்க சக்ர கதா தத்தே விஷ்ணுமாதா ததா ஹரிஹரவிஷ்ணு ரூபா த்வா தேவி வைஷ்ணவி தேவி தேந கீயதே’ என்று இவள் புகழ் பாடுகிறது. திருமாலைப் போல சங்கு, சக்ரம், கதை ஆகியவற்றைத் தரிப்பதாலும், அவருக்கு ஜனனியாக இருப்பதாலும், அவரைப் போலவே துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்வதாலும் வைஷ்ணவி என்று பெயர் பெற்றாள் என்றும் கூறுகிறது.
தேவியே திருமால். திருமாலே தேவி. கோபிகைகளை மோகத்தில் ஆழ்த்திய கிருஷ்ணன் புருஷ வடிவம் என்பதை ‘மமைவ பௌஷம் ரூபம் கோபிகா ஜன மோகனம்’ என்று லலிதோபாக்யானத்தில் லலிதையே கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த லலிதோபாக்யானத்திலேயே திருமால் வீரபத்திரரிடம் ஆதி சக்தியே போக வடிவில் பவானியாகவும், யுத்தத்தின் போது துர்க்காம்பிகையாகவும், கோபத்தில் காளியாகவும், புருஷ வடிவில் விஷ்ணுவாகவும் நான்கு வடிவங்களில் அருள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
நம்மைக் காத்து நம் மனோரதங்களை பூர்த்தி செய்யும் தேவி இவள். இவளது வாகனமான கருடனே பெரிய திருவடியாக திருமாலுக்கு விளங்குகிறது. அழுக்கற்ற சுத்த ஸ்படிகம் போல பளபளப்பாக உள்ள நீலநிறத் திருமேனியுடன், தாமரைக் கண்களுடன், கௌஸ்துபம் ஒளிரும் திருமார்பில் வனமாலி எனும் மாலையணிந்து, பட்டுப் பீதாம்பரம் தரித்து வைகுண்டத்தில் வாசம் செய்பவர் திருமால்.
சத்வ குணத்தோடு சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் எனும் ஐந்து ஆயுதங்களைக் கையில் ஏந்தி பக்தர்
களைக் காக்கும் திருமாலுக்கு உதவும் சக்தி வைஷ்ணவி எனப் போற்றப்படுகிறாள்.ஜொலிக்கும் ரத்னாபரணங்கள் அணிந்து, வெண்பட்டாடை உடுத்தி, சங்கு, சக்ரம், வில், அம்பு, வாள், கதை, அபயம், வரதம் தரித்தவள். கருடனைத் தன் வாகனமாகக் கொண்டவள். மகாலட்சுமியான இவளே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி. புன்முறுவல் பூத்த நகையினள். திருப்தியளிப்பவள். ச்ருங்காரம் ததும்பும் வண்ணப் பொலிவு கொண்ட பேரழகு. திருமாலின் போக சக்தி.
சீழுக்கு அதிதேவதையான இவள் சினமுற்றால் விஷக்கடிகள் பெருகும். தென்னை ஓலை விசிறியால் விசிறி, ப்ரார்த்தனை செய்து, பட்டினி இருந்து, பன்னீர் தெளித்து பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்கு அளித்தால் நிவாரணம் பெறலாம். திருமகளின் பெருமைகளை ஸுக்தம் அருமையாகப் பேசுகிறது.
இவள் நறுமணம் மிகுந்த இடத்தில் வசிப்பதில் ஆர்வம் உடையவள் என்பதை ‘கந்தத்வாராம்’ எனும் மந்திரம் கூறுகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் எதையும் சாதிக்க முடியும். பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழமொழி. அதை துராதர்ஷாம் என்ற நாமம் குறிப்பிடுகிறது.இவள் அருட்பார்வை பட்டவர்கள் வசிக்கும் இடத்தை பதினாறு பேறுகளும் தாமே சென்றடையும். அவர்கள் வாழ்க்கையை வனப்பும் வாளிப்புமாக மாற்றி புஷ்டியாகும் என்பதை ‘நித்யபுஷ்டாம்’ எனும் மந்திரம் எடுத்துரைக்கிறது.
நம் வீட்டில் திருமகள் அருள்புரியவேண்டுமெனில் பசுஞ்சாணம் கொண்டு வாசல் மெழுகிக் கோலமிட்டால் அவள் கட்டாயம் அருள்புரிவாள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். பசுவின் பாகங்களில் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள்.
கோமாதாவிடம் ‘எனக்கும் உன் பவித்ரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’ எனக் கேட்டாள். யாரும் இடம் பெறாத பகுதி, தன் பிருஷ்டபாகம் . அதை எப்படி தேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி தேவி ‘உன் தேகம் முழுவதுமே பவித்ரம். அதனால் உன் பின்பக்கமாகிய ப்ருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்,’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள்.
அதனால் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமானவையாகின்றன. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணீம்’ எனும் சொல் குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘‘ஈம்’’ பீஜம் குறிக்கிறது.
திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மிணி யாகவும், சீனிவாசனாய் வந்தபோது பத்மாவதி யாகவும் அவதரித்தவள் திருமகளே.
வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும், குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும், அழகுள்ளவர்களிடம் சௌந்தர்யலட்சுமியாகவும், புண்யாத்மாக்களிடம் ப்ரீதி லட்சுமியாகவும், க்ஷத்ரிய குலங்களில் கீர்த்தி லட்சுமியாகவும், வியாபாரிகளிடம் வர்த்தக லட்சுமியாகவும், வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே.
வேதங்கள் போற்றும் திருமகளின் மற்றொரு வடிவம் பூமாதேவி. இவள் தாமரை மலரில் தன் சிவந்த பாதங்களைப் பதித்துள்ளாள். கருநிறமுடையவள். கிளி தீண்டும் சம்பாக் கதிர்களைக் கையில் தாங்குபவள். மற்றொரு கரம் குவளை மலர் தாங்கியிருக்கும். வர்ணமயமான ஆடை கொண்டவள். ரத்ன க்ரீடம் சுமந்த திருமுடியுடையவள். அந்த பூமாதேவி நம் விருப்பங்களை நிறைவேற்றட்டும்.
கேரளாவிலும் கன்னடத்து கரையோரங்களிலும் காணப்படும் அனைத்து பகவதி ஆலயங்களும் வைஷ்ணவி தேவியின் ஆலயங்களே என்பது ஒரு கருத்து. பக்தர்கள் ‘அம்மே நாராயணா’ என தேவியை அழைப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு லட்சுமி, பூமி தேவி போன்றோர் விஷ்ணு அம்சங்கள் தாங்கி நாரணனின் நாயகியராய் உலகிற்கு ஐஸ்வர்யங்கள், பூமி லாபம் போன்றவற்றை அருளும் வைஷ்ணவி வாழ்வாங்கு நம்மை வாழ வைப்பாளாக!
No comments:
Post a Comment