தீபாவளிக்கு எட்டு நாட்கள் முன்பு, கர்வா சௌத் எனப்படும் விரதம் கொண்டாடிய நான்காம் நாள், [இந்த ஊர் கார்த்திகை) தமிழில் ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் இந்த விரதம் கொண்டாடுகிறார்கள்.
வடக்கில், குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அஹோய் விரதம் என்ற ஒரு விரதம் இருக்கிறார்கள்.
அஹோய் விரதம் – கதை
பெண்கள் தான் இந்த விரதம் இருக்கிறார்கள் – தன்னுடைய மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவாம்! கூடவே சந்தான பாக்கியம் இல்லாதவர்களும் இந்த விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
அஹோய் விரதம் – கதை
முன்னொரு காலத்தில் அடர்ந்த காட்டின் அருகே இருந்த ஒரு கிராமத்தில் அன்பும், பாசமும் உருவான பெண்மணி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு மகன்கள். கார்த்திக் மாதத்தில், தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு, தனது வீட்டினை சரி செய்து அழகுபடுத்த நினைத்தார். தீபாவளிக்கு முன்னதாகவே இந்த வேலைகளை முடிக்க நினைத்த அவர், ஒரு நாள் காட்டிற்குள் சென்று வீடை சரி செய்ய தேவையான மண் எடுத்து வரச் சென்றார். மண்வெட்டியால் அப்படி மண்ணை கொத்தி எடுக்கும் போது தவறுதலாக ஒரு சிங்கத்தின் குட்டியை வெட்டி விட, அச் சிங்கக் குட்டி இறந்து விட்டது. தெரியாமல் இப்படி நடந்துவிட்டதே என்று மனவருத்தம் கொண்டார் அந்த பெண்மணி.
இது நடந்த ஒரு வருடத்திற்குள் அப்பெண்மணியின் ஏழு மகன்களும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். காட்டு விலங்குகள் அவர்களை கொன்றிருக்கும் என கிராமத்தினர் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் – தவறுதலாக தான் கொன்ன சிங்கக் குட்டிக்கும், தனது மகன்கள் காணாமல் போனதற்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என்று நினைத்தார். அதை கிராமத்தில் உள்ள மூத்த பெண்மணிகளிடமும் சொன்னார்.
அதில் ஒரு மூத்த பெண்மணி, தெரியாமல் பாவம் செய்து விட்டாலும், அதற்கு பரிகாரமாக அஹோய் பகவதி என அழைக்கப்படும் பெண் தெய்வத்தினை துதிக்கச் சொன்னார். அஹோய் பகவதி, பார்வதி தேவியின் ஒரு அவதாரம் என்றும், குழந்தைகளைக் காக்கும் தெய்வம் எனவும் சொல்லி, அவளை நினைத்து கடுமையான விரதம் இருக்கச் சொன்னார். விரதத்தின் போது விடிகாலையில் எழுந்து குளித்து, அஹோய் மாதாவைத் துதிதது நாள் முழுவதும் உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். மாலையில் அஹோய் தேவிக்கு பூஜை செய்து, வானில் நக்ஷத்திரங்களைப் பார்த்த பிறகு தான் விரதத்தினை முடிக்க வேண்டும்.
அந்தப் பெண்மணியும் அஷ்டமி தினத்தன்று சுவற்றில் அந்த சிங்கக்குட்டியின் முகம் வரைந்து அஹோய் தேவியினை நோக்கி கடும் விரதம் இருக்க, அஹோய் தேவியும் அப்பெண்மணியின் முன் பிரசன்னமானாள். தெரியாமல் தான் சிங்கத்தின் குட்டியைக் கொன்றுவிட்டதைச் சொல்லி, தன்னை மன்னிக்க வேண்ட, அஹோய் மாதா, அவளது ஏழு மகன்களும் நீடுழி வாழ்வார்கள் என வரம் கொடுத்து மறைந்தாராம். இது நடந்து சில நாட்களில் பெண்மணியின் ஏழு மகன்களும் வீடு திரும்பினார்களாம்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு தங்களது குழந்தைகளின் நலனுக் காகவும், அவர்களுக்கு எந்த வித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும் அஹோய் விரதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுவற்றில் அஹோய் மாதா, சிங்கக்குட்டி உருவம் போன்றவற்றை வரைந்து கொள்ள இப்போதெல்லாம் யாருக்கும் தெரிவதில்லை என்பதால், இதற்கென்றே ஒரு அச்சிடப்பட்ட நாட்காட்டி வர ஆரம்பித்து விட்டது. நாட்காட்டியின் கீழே குடும்பத்தினர் அனைவருடைய பெயரையும் எழுதி அவர்கள் அனைவரையும் காக்க வேண்டி, வீட்டிலுள்ள பெண்கள் இந்த அஹோய் மாதா விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
விரதம் என்றால் பூஜைகளும் உண்டு. பூஜை என்றால் பிரசாதமும் உண்டே! மாலை வேளை பூஜையின் போது பூரி, ஹல்வா [கேசரி] என செய்து அவற்றை மூத்தவர்களுக்குக் கொடுக்கிறார்கள். விரதம் முடித்தபின்னர் அவற்றையே உண்கிறார்கள். வடக்கில் எந்த பூஜை என்றாலும் சுலபமாக பூரி மற்றும் ஹல்வா தான்! கடுகு எண்ணை வாசனையோடு பூரியும் கறுப்பு கொண்டைக்கடலையும் கேசரியும் [அதைத் தான் இவர்கள் ஹல்வா என்கிறார்கள்!] செய்து விடுகிறார்கள்.
No comments:
Post a Comment