Saturday, 1 October 2016

11 - திருவொற்றியூர் வடிவுடை அம்மன் - 1

51 சக்தி பீடங்கள்


11 - திருவருள் பொழியும் திரிபுரசுந்தரி!
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவொற்றியூர்.

ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், ஏலேலருக்கு மாணிக்கங்கள் அளிக்கப்பட்டதால் மாணிக்கத்தியாகர் என்று ஈசனும், வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி என்று அம்பிகையும் பக்தர்களால் வணங்கப்படுகின்றனர்.

முன்னொரு காலத்தில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா ஈசனிடம் அனுமதி  கேட்டபோது சிவபெருமான் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக்கோள வடிவத்திலிருந்து ஒரு சிவலிங்கம் சுயம்புவாக ஒரு மகிழ மரத்தடியில் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமைந்தது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு, அதனாலேயே இத்தலம் ஒற்றியூர் என்றானது.

பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், வாசுகி  பாம்பிற்கு அருள்புரிய புற்று வடிவில் எழுந்தருளி அதனைத் தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் விளங்குகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் மூன்று நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சாத்தப்பட்டு மூடி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த மூன்று நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிராகாரம் வரவேற்கிறது. கிழக்குச் சுற்று வெளிப் பிராகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நதி அமைந்திருக்கிறது. சக்தி பீடங்களில் இக்ஷூ பீடமாக இத்தலம் விளங்குகிறது. பெளர்ணமி தினத்தன்று வடிவுடை, திருவுடை, கொடியிடை நாயகியரை தரிசிப்பது பக்தர்கள் மரபு. உற்சவ அம்மன் சுக்கிரவார அம்மன் என போற்றப்படுகிறாள். இத்தேவியைக் குறித்த வடிவுடை மாணிக்கமாலை எனும் துதி புகழ்பெற்றது.

கேரள நம்பூதிரிகளால் ஆராதிக்கப்படும் அம்பிகை இவள். அழகே வடிவாய் அருளே உருவாய் திகழ்பவள். வரப்ரசாதி. இத்தல ராஜகோபுரத்திற்கு வெளியே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி வடிவுடையம்மனுக்கு குருவாய் அமர்ந்து உபதேசம் செய்யும் நிலையில் திருவருள்பாலிக்கின்றார். வள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார். அவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை. ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்குதானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார். அப்போது, “ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்” என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள்.

சாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம். சில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார். அண்ணிதான் நின்றிருந்தாள். “ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே; வந்து சாப்பிடு.” என்றாள். “இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றார். “இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது” என்றாள் அண்ணி. அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம். அன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது. ராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடையம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர் என்பது நிசர்சனமான உண்மை.

பாண்டியன் ஆட்சியின்போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை அறிந்து கோபம் கொண்டு மதுரையை எரித்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறாள் என்று தேடிக் கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி. அங்கு தியாகராஜனான சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி வருவதை சிவபெருமான் பார்த்தார். மதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி இந்த திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை பக்கத்துக் கிணற்றில் கை தவறியதுபோல நழுவவிட்டார். இதைக் கண்ட கண்ணகி ஏதோ எண்ணத்தில் அந்தக் கிணற்றில் குதித்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராஜர், அந்த கிணற்றை வட்டமான ஒரு பாறையால் மூடினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டப்பாறை அம்மன் என்று பெயர் வந்தது. ஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் ராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார். அப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. அங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்குச் சென்று ராமாயண காவியத்தை எழுதத் தொடங்கினார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால் “ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி” என்று பாடினார். இதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் ராமாயண காவியம் எழுதி முடிக்கும்வரை கம்பரின் அருகிலேயே தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றாள்.

வட இந்திய அக்ஷர சக்தி பீடம்

பீடத்தின் பெயர் வாரனாஸி எனும் மணிகர்ணிகா. தேவியின் குண்டலங்கள் விழுந்த இடம். அட்சர சக்தியின் நாமம் (லும்-லுதும்பராதேவி). பீட சக்தியின் நாமம் விசாலாக்ஷி. இத்தேவிக்கு எட்டு திருக்கரங்கள். வலக்கரங்கள் திரிசூலம், பாசம், உடுக்கை, வரமுத்திரை தரித்தும், இடக்கரங்கள் கத்தி, கபாலம், குறுந்தடி, அபயம் தரித்தும் அருள்பவள். புலி வாகனத்தில் ஆரோகணித்து வருபவள் இத்தேவி.  இத்தலத்தை காலபைரவர் காக்கிறார். இந்த பீடம் காசியில் உள்ளது.

No comments:

Post a Comment